Friday, May 7, 2010

மின்சாரக்கம்பிகள் மீதமரும் பறவைகள்..

கருகி மடியும்
காதற் கம்பிகளில்
தெரிந்தே தொங்கும்
பறவைகள்..

பல பீனிக்ஸ் எனவும்
சில சிட்டுக்குருவியெனவும்
அபூர்வமாய் ஜோடி புறாவெனவும்..

விட்டுச்சென்ற சுவடுகளோடு
காதற் கம்பிகள் நிரந்தரமாய்..

ஒளித்து வைக்கப்பட்ட மழலைப் பொழுதுகள்..

நீர்க்குமிழிகள் அடைத்த
வண்ணக் கோலிகளும்
கச்சிதமாய் செதுக்கிய
செல்லாங்குச்சிகளும்
ஆக்கர் பதிக்கப்பட்டு
உருக்குலைந்த பம்பரங்களும்
மாமன் வாங்கிக்கொடுத்த
பல்லாங்குழியும்
சிறுவீடு கட்டி
சமைத்துக் கழித்த
செப்புச்சாமான்களும்,
அடுக்குமாடிக் குழந்தைகளின்
கீபோர்டு பொத்தான்களுக்கடியில்
ஒளித்துவைத்திருக்கிறது
அழகான மழலைப் பொழுதுகளை..

Wednesday, April 21, 2010

போர்க்களச் சூழல்.

நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..

மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..

சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..

மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..

ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..

Monday, April 12, 2010

ஊமைக்காயம்..

கழிவுகள் ஒதுக்கும்
துப்புரவுத் தொழிலாளியின்
ஸ்பரிச நிராகரிப்பின் வலி
முழுமையாய் படர்கிறது
பேருந்து நிலைய மூலைகளில்..
காயங்களைக் கூர்தீட்டுகின்றன
ஈர்க்குச்சிகளின் முகாரியும்,
வாளிகளின் கண்ணீரும்..


(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "ஆழமான கண்ணீர்" தாங்கிய கவிதை..

இருக்கா?? கண்ணீர்??)

புன்னகையெறிதல்..

வெளிவாயிற் கதவின்
கம்பியிடுக்குகள் வழியே
நாயொன்றிற்கு
எறியப்படும் ஒரு பிஸ்கட்டில்
பரிமாறப்படுகிறது,
சிறுவனுக்கும்
பிச்சை மறுக்கப்பட்ட
கிழவனுக்குமான முகவரி..

(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "அழகிய புன்னகை" தாங்கிய கவிதை..

இருக்கா?? புன்னகை??)

சுதியேறும் புல்லாங்குழல் இசை..

பேருந்து நிலையத்தின்
ஓரச் சந்துகளில் வழியும்
குருட்டுக்கிழவனின்
புல்லாங்குழல் இசையில்,
சுதியைக் கூட்டுகிறது
அவன்
அலுமினியத் தட்டில்
சிதறும் சில்லறைகள்..

Friday, April 2, 2010

வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்..

பயண நீட்சியின்
வெப்ப ஸ்பரிசத்தில்,
விரல்கள்
சுற்றிக் கொண்டேன்
முகம் காட்டாதவொரு
பூவின் கைகளோடு..

அப்பூவிற்கும்
தேவையாயிருக்கவில்லை
என் முகவரி..

வியர்வையின் குளுமையே
போதுமானதாயிருந்தது..

விளையாட்டுப்
பொருளானது விரல்கள்..

இழுவையோ ..
அழுத்தமோ..
எச்சிலோ..
விரல்கள் சிரித்தன..

ஸ்பரிசங்கள் தூரமாயின
நிறுத்தத்தின்
அருகாமையில்..

இறங்கிச்செல்லும்
கடைசி தருணத்தில்
நெருடுகின்றன,
வெற்று வெளியில்
இன்னும்
பற்றுதலுக்கான
தேடல் கொண்டிருக்கும்
அந்த பூவின் விரல்கள்..

Tuesday, March 30, 2010

ஊறல்பூச்சிகள்

நெரிசலில்லாத
பேருந்தில்
நெருக்கபடுகிறாள்..

பின்புறம் படருகிறான்
இருபதுகளில் ஒருவன்...

பக்கவாட்டில் சாய்கிறான்
நாற்பதுகளில் ஒருவன்..

திடுமென அழுத்தப்படும்
பிரேக்குகளில்
திடுக்கிட்டு மன்னிப்பு
கோருகிறாள் -சுற்றியூரும்
ஊறல்பூச்சிகளிடம்..

Monday, March 29, 2010

ஊடலின் மௌன வலிகள்..

அறையின் ஓரமாய்
கதறித் திரிகின்றன
அவள்
கூந்தல் இறங்கிய
கற்றைகள் சில...

சுவரோரங்களில்
தேம்புகின்றன
அவள்
சுவாசம் படர்ந்த
ஒட்டடைகள் சில..

எதிர்பார்ப்புகள் தேக்கி
காத்திருக்கின்றன
அவள்
வாய்மொழி கேட்ட
சுவர்க்கோழிகள் சில..

அவளோ
மௌனத்தைப்
போர்த்திக்கொள்கிறாள்
இன்றும்..

நீண்டுகொண்டிருக்கும்
இரவின் - அடர்ந்த
மௌனத்தின் வலியில்
புலம்பித் தீர்க்கின்றன
பூச்சுக்கள் உதிர்ந்த
செங்கல்கள் சிலவும்,
விருப்பங்கள் காய்ந்த
செல்கள் பலவும்..

Saturday, March 27, 2010

அலைபேசி..

தெரியாமல் உதிரும்
குறுஞ்செய்திகளில்
மொட்டுவிடுகிறது நட்பொன்று..

தெரிந்தே தவறவிடும்
அழைப்புகளில்
பூக்கிறது காதலொன்று..

நெடுநாளைய தேடலின்
குரல்களில் கரைகிறது
கண்ணீர்த்துளியொன்று..

அடுத்தவரின் அந்தரங்க
பதிப்புகளில்
துளிர்க்கிறது வன்மமொன்று..

கழுத்து சாய்ந்தவொரு
பயணத்தில்
நிகழ்கிறது மரணமொன்று..

மனித உணர்வுகளை
உள்ளங்கைக்குள்
வைத்தாடுகிறது - உயிரற்ற
கையடக்கப் பெட்டியொன்று..

(தலைப்பிட்டு கவிதை எழுதும் சிறுபோட்டிக்காக எழுதியது.. )

Wednesday, March 17, 2010

நண்பகலொன்றில்..

விரல்களின்
செந்நிற அச்சுப்பதிந்த
கன்னங்களுக்கிடையிலும்
கொஞ்சமாய்
வழிந்திருந்த உமிழ்நீரின்
பிசுபிசுப்புக்கிடையிலும்
தொடர்ந்திருந்த
நினைவுப்பின்னல்கள்
நிறமிழக்கின்றன,
காதோரமாய் நகருமொரு
எறும்பின் தேடலில்.

Tuesday, March 16, 2010

வாழ்த்தொன்று பெறுங்கள்

வெம்மையின்
பார்வையொன்றில்,
காய்ந்திருக்ககூடும்
தெருவோர நீர்த்தேக்கமொன்று..

பிளவுபடும்
நிலத்தினிடையில்,
வற்றியிருக்கக்கூடும்
ஊரைக்கடந்த குளமொன்று..

மழைகாணாத
வருத்தத்தில்,
கீழிறங்கியிருக்கக்கூடும்
கிணறொன்றின் கொள்ளளவு..

தாகம் தீர்க்கும் வழியற்று
ஏமாறக்கூடும்..
கூண்டற்ற பறவைகளும்,
வீடற்ற விலங்குகளும்..

நீர்மொண்டு வையுங்கள்
மொட்டைமாடியிலும்,
முற்றத்தின் ஓரத்திலும்..

இயற்கையின்
விதியொன்றிற்கு,
வாழ்வெழுதி
வாழ்த்தொன்று பெறுங்கள்..

[Src: Fwd Mail.. ;) ]

Monday, March 15, 2010

விம்மும் திண்ணை..

சாரைகளுக்கும்
விரியன்களுக்குமான
நகரப்பாதையொன்று
அடைபடுகிறது..

நாகத்தகடு அம்மனுக்கும்,
வெற்றிலை குதப்பும்
குடுகுடுப்பைக்காரனுக்கும்
வேலியெழும்புகிறது..

கண்ணாமூச்சியாடும்
குழந்தைக்கும்,
காதல் கொணரும் தென்றலுக்கும்
கதவுகள் போடப்படுகிறது..

வீட்டைச் சுற்றியுயரும்
சுவர்களின் மறைவில்,
விசாரிப்புகளேதுமின்றி
விம்முகிறது திண்ணையொன்று ..

Friday, March 12, 2010

துரை யாதவா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு, சென்னை அண்ணா யுனிவெர்சிட்டில கணினி பொறியியலில் ஒரு சீட்டு வாங்கி(சீட்டு வாங்க தான் அங்க கால் வைக்க முடிஞ்சுது) ராமநாதபுரம் போய் சேர்ந்தேன்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் பயம் நிரம்பி வழிந்தது.கழுத்து ,வகுப்பறை கரும்பலகை தவிர்த்து வேறெங்கும் திரும்பாது.முதல் வருடத்தில் அனைத்து பொறியியல் பாட பிரிவு மாணவர்களும் கலந்து தான் இருப்பார்கள்.அதனால் பிரிவிற்கேற்ப காகித கப்பல்,காகித ஏரோப்ளேன், காகித கேமரா என்று அவ்வப்பொழுது பறந்து வரும்.

நான் அத்தனை பசங்கள மொத்தமாய் அதற்குமுன் பார்த்ததில்லை. வகுப்பறைக்குள் நுழையுமுன் நிமிர்ந்து பார்த்தால் தலை சுத்தும்.அத்தனை மாணவர்கள்.தொண்ணூறு மாணவர்கள்.பதினாறு மாணவிகள்.முதல் பெஞ்ஜில் சுவரோரமாய் எனது இருக்கை.எனக்கு அடுத்த பெஞ்சில் சில மாணவிகள்.அதை தவிர்த்து அத்தனை இடங்களையும் பசங்க தான் ஆக்கிரமித்திருந்தார்கள்.

முதல் வருடம் எல்லா பாட பிரிவுகளையும் படிக்க வேண்டும்.ஆங்கிலம், பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மேத்ஸ்,மெக்,சிவில்,எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,கம்ப்யூட்டர் என எல்லாமும் படிக்க வேண்டும்.அவ்ளோ பெரிய பெரிய புத்தகங்கள்,பெரிய பெரிய ஆசிரியர்கள்(அதான் பேராசியர்கள்..),நுனி நாக்கு ஆங்கில மாணவர்கள் என எல்லாருமே பயமுறுத்தினார்கள்.

முதல் வருடம் என்பதால்,வகுப்பெடுக்க வருவோர் போவோர் எல்லாம் பேர், ஊர் கேட்டார்கள்.இதில் எழுந்து வேற பதில் சொல்லணும்.முதல் வருடம் முழுதும் எழும்பி நிற்கவே கூச்சமாய் இருக்கும்.மற்றும் எனக்கு என் பெயரை உச்சரிக்க பிடிக்காது."ர"வை உச்சரிப்பதில் பிரச்சனை.தயங்கி தயங்கி தான் சொல்வேன்.பேர் கூட பிரச்சனை இல்லை.ஊர் ரொம்ப பிரச்சனையாக இருந்தது.முதலில், "சங்கனாபேரி" என்றேன். பேராசிரியர்கள் புருவத்தை தூக்கினார்கள்.பின், "தென்காசி" என்றேன்.சிலர் சிரித்தார்கள் சிலர் மறுபடியும் புருவத்தை தூக்கினார்கள். பின், "திருநெல்வேலி" நிரந்தரம் ஆனது. யார் கேட்டாலும் திருநெல்வேலி தான்.
இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், திருநெல்வேலி என்றபின் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

பின்னொரு வகுப்பில், மோட்டாவான பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஆள் அமிதாப் மாதிரி நல்ல உயரம்.மன்சூர் அலிகான் மாதிரி உடல். நிறம் அக்மார்க் தமிழன் நிறம். அரிவாள் இல்லாத அய்யனார்.இவரை மாதிரியே பள்ளியில் கணக்கு ஆசிரியர் இருந்ததால் முதலில் அவ்வளவு பயம் இல்லை. பின் பேச ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகள் கொட்டினார்.வகுப்பறை, மாணவிகள் அதெல்லாம் அவருக்கு தெரியவில்லை. மனதில் பட்டதையெல்லாம் பேசினார், ஒரு ரவுடி மாதிரி. "எனக்கு நண்பனா தோளில் கைபோடவும் தெரியும், எதிரினு தோணுச்சுனா கைபோட்டுட்டு இருக்கும்போதே கழுத்தை நெறிக்கவும் தெரியும்" அப்படின்னு லெக்சர் கொடுத்தார். அதுவரை ஆட்டம் போடும் வகுப்பறை, இவரது வகுப்பில் அமைதியாய் இருந்தது.

அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு ஆரம்பித்தார். நான் வழக்கம் போல திருநெல்வேலி என்றேன்."திருநெல்வேலில இருந்து எத்தனை கிலோமீட்டர்?" என்றார். நான் முழித்தேன். 'மொச பிடிக்கற மூஞ்சிய பாத்தா தெரியாது?' என்று அவர் நினைப்பதாய் பட்டது.
"நூறு கிலோமீட்டர் இருக்கும்" என்று உண்மையை சொன்னேன்.
"நூறு மீட்டர் தள்ளி இருந்துட்டு திருநெல்வேலின்னு சொன்னா திருநெல்வேலி உங்க ஊர் ஆகிடுமா?" என்றார்.
நிக்க வச்சு இப்படி பேசராறேனு அழுகை வந்தது. 'சொந்த ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. பக்கத்து ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. மாவட்டம் சொன்னா திட்டறாங்க'னு நெனச்சுட்டு பொய் சொல்ல தீர்மானித்தேன்.
"தென்காசி" என்றேன்.
"தென்காசிதானா?? இல்ல அதுல இருந்து பத்து கிலோமீட்டரா? "
'என்னடா இது வம்பா போச்சு.. எதோ தெரிஞ்சவர் மாதிரியே பேசறாரே.. பொய் சொல்லிட்டோம்.. அதையே காப்பாத்துவோம்'னு, "ஆ..ஆமா" என்றேன்..
"தென்காசின்னு சொன்னா எங்களுக்கு தெரியாதாக்கும்? உக்காரு", என்றார்.
மொத்த வகுப்பிற்கு முன்னை இப்படி கத்தறாரேனு கஷ்டமா இருந்தது. தலையை தொங்கபோட்டுட்டு உக்கார்ந்தேன். எல்லாரும் பேர் சொல்லி முடித்ததும், தொண்டையை கனைத்து அவரை அறிமுகம் செய்து கொண்டார்.

"கணேசன், கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்"..

'ஆகா..வச்சுட்டாங்களே ஆப்பு.. இவரோட இன்னும் நாலு வருஷம் மல்லுக்கட்டனுமா????'
புளியங்குடி கண்ணாவில் பன்னிரண்டு முடித்து ரிசல்ட் வந்த நேரம். என்னோட மதிப்பெண் 1074. வீட்டில் யாருக்கும் திருப்தி இல்லை. புத்தகமும் கையுமாக எப்பவும் இருந்ததால் மாநிலத்தில் முதலாவதாய் வருவேன்(என்ன கொடுமை சார் இது? :P ) என்று நினைக்காவிட்டாலும் ஓரளவு நல்ல மதிப்பெண் வாங்குவேன், அரசு பொறியியல் கல்லூரியில் சேருவேன் என்று நினைத்தார்கள்.கட் ஆப் 261 தான் வந்தது. அம்மா திட்டினாள். அப்பா அமைதியாய் இருந்தார். :)

என் மதிப்பெண்ணிற்கு கவுன்சிலிங் லேட்டா தான் வரும். அதுவரை சும்மா இருக்கவேண்டாம் என்று மதுரை யாதவா கல்லூரியில் மேத்ஸில் சேர்த்து விட்டார்கள்.அப்பொழுது பெரியப்பா ஆண்கள் கல்லூரியில் முதல்வர். நான் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். கூடவே என் தூரத்து பெரியப்பா பெண்ணும்.என்னை சேர்த்துவிட அப்பா கூட வந்தார். வந்து அட்மிசன் போட்டு வெளியில் நின்றிருந்த போது, என் அருமைத்தம்பி பள்ளிக்கு போகாமல் பேருந்தேறி விசாரித்து பின்னாடியே வந்து சேர்ந்தான். அவ்ளோ பாசம். :P

என் அக்கா அங்கு கடைசி வருடம் B.B.A படித்துக்கொண்டிருந்தாள்.மற்றும் இரு சொந்தக்கார அக்காக்களும் அங்கு படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாரும் ஒன்றாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.நான் சற்று தள்ளிநின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அனைவரும், என்னைக் கை காட்டி எதோ பேசியபடி சென்றனர். நான் பொதுவாய் சிரித்து வைத்தேன்.

என்னையும், என் தூரத்து பெரியப்பா பெண்ணையும், இரு தூரத்து சகோதரிகளின் வெவ்வேறு அறைகளில் ஆளுக்கு ஒருத்தருடன் தங்கவைக்கப்பட்டோம். ரேக்கிங் இருக்குமென்பதால் நான் வெளியில் செல்லவில்லை.மாறாய் அன்றிரவு ஒவ்வொருத்தராய் வந்து விசாரித்தார்கள். என் அக்காவின் பெயரை சொல்லி, "இவ அவங்க தங்கையாமே?" என்றார்கள். சிரித்துக்கொண்டேன். 'பரவால்லையே.. அக்காவிற்கு நல்ல மதிப்பு இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டேன். "எங்க ரூமிற்கு அழைத்து செல்லலாமா?" , என்று கேட்டார்கள். என் தூரத்து அக்கா சம்மதிக்கவில்லை. பின், என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தார்கள். "நம்ம அக்கா தான் இங்கு ரேக்கிங்ல பர்ஸ்ட். இப்போ கூட ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு அவங்க மேல. அதான் இணைக்கு எல்லாரும் உனக்காக காத்துட்டு இருக்காங்க பலி தீர்த்துக்க.. அவங்கள பண்ணதெல்லாம் உன்ன பண்ண சொல்வாங்க.. அதான் உன்ன தனியா அனுப்பல" என்றார். பக்குன்னு ஆகிடுச்சு. 'அடப்பாவமே.. மொத்த விடுதியும் இப்படி கொலைவெறியோட இருக்கே? கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல' என்று நினைத்துக்கொண்டேன்.

"நைட் யாராவது கதவை தட்டினா என்ன செய்வ?" - அந்த அக்கா கேட்டார்கள்.
"போய் திறப்பேன்"
"அப்படிலாம் பண்ணிடாத.. திறக்கவே செய்யாத.. கடைசி ரூம்ல ஒரு பொண்ணு அமாவாசை, பௌர்ணமி அன்னைக்கு நடு ராத்திரி வந்து எழுப்புவா. பாத்ரூம் கூட்டிட்டு போவா துணைக்கு வர சொல்லி.. அங்க போய் ஷவர்ல நின்னு தலைக்கு குளிப்பா"
' இது வேறயா..என்ன நடக்குதுனே புரில..' -னு நெனச்சுட்டு, "சரிக்கா " னு சொல்லிட்டு அன்னைக்கு அமாவாசை, பௌர்ணமி எதாவது இருக்கானு காலேண்டர் பார்த்தேன்.

சாப்பிட்டு மேலே வந்ததும், என் அக்கா அறையில் என்னை வரச்சொல்லி சேதி வந்திருந்தது. நானும், என்னுடன் புதிதாய் சேர்ந்த இன்னொரு பெண்ணும் போனோம்.உள்ளே போனதும் அக்கா உக்கார சொன்னா. உக்கார்ந்தோம். அக்காவின் தோழி, அக்காவிடம் கேலியாய் அனுமதி கேட்டார்கள் எங்களை ரேக்கிங் செய்ய.

அக்கா தாரளமாய் பண்ணிக்கோங்க என்று பெருந்தன்மையாய் சொல்லிவிட்டாள். ஏதேதோ செய்ய சொன்னார்கள். என் முகம் இறுகி இருந்தது. விட்டால் அழும் நிலையில்.ஒரு பாட்டாவது பாடு என்றார்கள். சுற்றி கொஞ்சம் கூட்டம். அப்போதும் அமைதியாய் இருந்தேன். "உன் தங்கை உன்ன மாதிரி இல்ல"னு சொல்லிட்டு, "சரி, இந்த பொண்ண எங்க ரூம்ல போட்டுருக்காங்க.. புதுப்பொண்ணு.. தினம் காலேஜ் போகும்போது வந்து கூட்டிட்டு போ" என்றார்கள். மண்டைய ஆட்டிவிட்டு விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டோம்.

பின், தினமும் அந்த புதுப்பொண்ண எங்களுடன் கூட்டி செல்வோம்.ஒரு வாரம் கழித்து தான் தெரியும், அந்த பொண்ணு பழைய பொண்ணுன்னு. கடைசி வருட மாணவி தான் என்று.
அப்பாடா, நம்மள வேற ஏதும் பண்ணலன்னு நிம்மதியாய் இருந்தது.

ந்த விடுதி கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். சாப்பாடு நேரமோ, தேநீர் அருந்தும் நேரமோ, மூன்று மணி அடிப்பார்கள். முதல் மணி முதலாம் வருட மாணவிகளுக்கு. இரண்டாம் மணி இரண்டாம் வருடத்திற்கு, மூன்றாம் மணி மூன்றாம் வருடத்திற்கு.
சாப்பிடுவதற்கு முன் சாமி பாடல் பாட வேண்டும். "கற்பூர நாயகியே"னு எதாவது ஒரு பாடல். தேசிய கீதம் சில இடத்துல தான் பாடணும்னு சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டெல்லாம் கோயில்ல தான் பாடணும்னு நெனச்சிருந்தேன். அப்புறம் எங்கயும் பாடலாம்னு நெனச்சுக்கிட்டேன். பரிமாறும் பொறுப்பு வாரம் ஒரு அறை. காலை, மதியம், இரவு என்று ஒரு அறை மாணவிகள் தான் பரிமாற வேண்டும். ஸெல்ப் செர்விஸ்லாம் கிடையாது. ஆனா நல்ல என்ஜாய்மென்ட் இருக்கும். அப்புறம் சாப்பாட கொஞ்சம் கூட கொட்டக்கூடாது. அதை கண்காணிக்க ஒரு வார்டன் தட்டு கழுவும் இடத்தில் நிற்பார்கள். சாப்பாடு நேரம் முடியும் வரை உக்கர்ந்திருந்தால் திட்டிவிட்டு அனுப்புவார்கள்.

காலேஜ்லயும் பிரேயர் உண்டு. எல்லாம் சாமி பாட்டுதான். ஒரு ஐந்து ஆறு பாட்டு பாடுவார்கள். எனக்கு இந்த பாட்டெல்லாம் தெரியாது.பாடினதே இல்லை. நோட்டில் எழுதி வைத்து பிரேயர்ல பாடவேண்டும்.

ரு விடுமுறை நாளில், சாயங்காலம் மொட்டை மாடியில் எல்லாரும் வடகம் பிழிந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் அதற்கு முன் ஒரு சாமானை நகர்த்தியது இல்லை. ஆனால் இங்கே தோழிகளோடு வேலை செய்ய பிடித்திருந்தது.வித்தியாசமாய் இருந்தது. வடகம் பிழிந்து கொண்டிருக்கையில் என் அக்காவின் பக்கத்து அறை சீனியர் என்னை ரேக்கிங் செய்ய அழுதபடி அக்காவிடம் ஓடிவந்து கம்ப்ளைன்ட் செஞ்சேன்.சரி நான் பாத்துக்கறேன்னு சொல்லி அனுப்பிவச்சா.

நல்லவேளையாக பொறியியல் கவுன்செலிங் வர, முதல்முறையாக சென்னை பயணம்.நான் அமர்ந்திருந்த இருக்கையின் கண்ணாடி ஜன்னலில் "சதக்" என்று எழுதி இருந்தது கொஞ்சம் பயமாய் இருந்தது.பொறியியல் சீட் தேர்வு செய்யும் போதுதான் சதக் என்பது பேர் என்று தெரிந்தது.ஆம், சதக்கில் தான் பொறியியல் சீட் கிடைத்தது. எந்த சந்தோசமோ, துக்கமோ இல்லாத ஒரு உணர்வு.மதுரையை காலி பண்ணி வீட்டில் உக்கார்ந்திருந்தேன் நான்கு வருட வனவாசத்தை எதிர்நோக்கி..

இனி.. சதக்கில் நானும்...

Saturday, March 6, 2010

தனிமை பழகு..2

தனிமை நிறைந்த
ஞாயிறொன்றில்
எழுந்தது முதல்
எல்லாமே
கவிதையாய்த் தோன்றியது..

விடுதலையற்ற தொட்டிமீன்கள்
துள்ளி
விளையாடிக்கொண்டிருந்தன..

சுவரோர ஒட்டடைகளினூடே
நம்பிக்கை யிழக்காத
பூச்சிகள் தவமிருந்தன..

வெறுமை படர்ந்திருந்த
நாற்காலியில் - அன்று
காற்று நிரம்பியிருந்தது..

நீர்த்துப் போன
நினைவுகளில்,
நிரம்பிவழிந்த தொட்டிநீர்
நரம்புகளைத் தட்டியெழுப்பியது..

சாமரம் வீசி
சமாதானம் செய்தன,
கொடியிலசையும் சேலைகள்..

சாரமற்ற வாழ்வில்
சுவையைக் கூட்டியது
சமையல் வாசனை..

வழிந்தோடிய இசை
வீடெங்கும் பரவி
வெறுமையைச் சுத்திகரித்தன..

தீண்டப்படாத காகிதம்
கவிதையின் நிழற்பட்டு
புன்னகையை பரிசளித்தது..

பின்னிரவில்
தூக்கம் கலைந்து
காகிதம் பார்த்தேன்..

என்னைப் பற்றிய
வார்த்தைகள் மட்டும்
விடுபட்டுப் போனதாய்
வருத்தம் தெரிவித்தது காகிதம்..

விரக்தி புன்னகையில்
விடிந்திருந்தது திங்கள்..

இயல்பிற்கு காத்திருக்கிறான் கடவுள்

நீண்டு,
பின்னும் நீளும்
பெரியதொரு வரிசையில்
வியர்த்துக் கசங்கும்
சதைகளுக்கிடையில்
பயபக்தியுடனான காத்திருப்புகள்…

வியர்த்திருந்த
அவ்வரிசையோடு
சலித்துத் தேங்கியிருந்த
அமைதியையும்
குலைத்தவாறு குழந்தைகள்..

அக்குழந்தைகள்,
காத்திருப்பின் கசகசப்பில்
நம்பிக்கை பூச்செடிகளை
நட்டுச் சென்றார்கள்…

கடவுளறியாத கவலையோ
ஆன்மிகம் புரியாத
அழற்சியோ அற்றிருந்தார்கள்..

அலங்காரம் முடிந்தவொரு
அறிவிப்பில்
கருவறை சூழ்ந்திருந்த
வெண்திரை விலகியது..

சிலிர்த்தெழுந்த கூட்டம்
கன்னத்திலிட்டு
கோரிக்கைகள் ஒப்பித்தது..

காட்சியளித்த சிலையில்
கடவுளைக் காணவில்லை..

அவன்,
நீண்ட நேரமாய்
விளையாடிக்கொண்டிருக்கிறான்
இயல்பாயிருந்த பிஞ்சுகளோடு
மிக இயல்பாய்..

வரிசையில் வியர்த்திருந்த
வாடிய முகங்கள்
இல்லாத கடவுளிடம்
பக்தியை பரிசளித்துச்சென்றன..

கரைந்திருந்த கூட்டம்
விட்டுச்சென்ற தனிமையில்,
காத்திருக்கிறான் கடவுள்..
மற்றுமொரு
சிலையலங்காரத்திற்கு..

காணாமற் போன கவிதை..

எழுதத் தொடங்கி
நடுவில் நிறுத்தியிருந்த
கவிதையொன்றை
காணவில்லை..

பத்திரப்படுத்தியிருந்த
இடம்
புலப்படவேயில்லை…

மழையின்
கடைசித்துளி போலவும்
வெயிலின்
கடைசிக்கதிர் போலவும்
நினைவிலகப்படவில்லை..

ஒருவேளை,
தலையணையின்
பின் படர்ந்து
பின்னெழும்
நீண்ட கனவில்
மெதுவாய்ப் புலப்படலாம்..

இதுவும் கடந்து போகும்..

எழுச்சிமிக்க
கவிதையொன்றின்
காரணிகள்,
சிறுமூளையின்
மூலம் தொட்டுணர்ந்து
முடங்கிப் போயிருந்தன..

பின்னாளில்
எழுதிக் களைத்த
கிறுக்கலின் போதும்
பேசித் தீர்த்த
வார்த்தைகளின் போதும்
கொஞ்சமாய் எட்டிப்பார்த்து
கண்ணடித்துக் கொண்டன..

காரணிகளுக்கான
காட்சிகள் கண்டபோது
சிறிது துளிர்த்துக்கொண்டன..

முதலாய் வந்த முறுக்கலிலும்
பின்னெழுந்த சிலிர்ப்பிலும்
உயிர்துக் கொண்டன..

செயல்படும் திசையற்று
எழும்பிவந்த இயலாமையில் - அவை
மரணித்துப் போயிருந்தன..

ரத்தம் குடிக்கும் கொசுக்கள்

தெரிந்தே அனுமதித்தேன்
இரத்தம் குடிக்கும்
கொசுவொன்றை – என்
கால்மீதமவர்தற்கு...

சிறிது மணித்துளிகள்
சிரமமேதுமில்லை..
பின் மெதுவாய்
ஊசியை உள்ளிறக்கியது..

வலித்தாலும்
சிறிது பொறுத்திருந்தேன்..

இன்னும் ஆழமாய்
இறங்க
தாளாத வலியில்
தட்டிவிட்டேன்..

இறக்கைகள் பிய்ந்து
இறந்து கிடந்தது..
தட்டிவிட்ட விரலோரம்
தேங்கியிருந்தது இரத்தம்..

உற்று நோக்கிய
குருதியில் –என் துளி
எதுவென்று தெரியவில்லை..
கருஞ்சிவப்பாய்,
உரிஞ்சப்பட்ட ஒட்டுமொத்த
உழைப்புகளின் சாட்சியாய்..

இதைப்போலவே
அரசாங்க கொசுக்களும்
அரசியல்வாதி கொசுக்களும்
என் கால்களிலும்
உன் கைகளிலும்
அவன் முகத்திலும்…

மனிதனும் கவிதைகளும்..

அனுவின் நுட்பத்திலிருந்து
அண்டத்தின் எல்லைவரை
கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள்..

அசையும் பொருள்களிடத்தும்
அசையாத உயிர்களிடத்தும்
அவை ஒளிந்திருக்கின்றன..

புலனடக்காத மனிதனுக்கு
காண்பவையெல்லம் கவிதைகள்..
புலனடக்கிய ஞானிக்கு
கவிதையெல்லாம் கற்பனைகள்..

கற்பை யழிக்கும்
கவிஞனிடத்தில் கைதியாகவும்
புனிதம் பிரசவிக்கும்
புலவனிடம் காதலியாகவும்
அவை ஆளப்படுகின்றன..

உருக் கொடுக்கப்பட்ட
கவிதைகளுக்கு – சிலரால்
வாழ்த்து தூவப்படுகிறது..
மற்றும் பலரால்
வாய்க்கரிசி திணிக்கப்படுகிறது..

இப்படியாக
மனிதனும் கவிதைகளும்..

வீரம்..

வேடிக்கை பார்த்த
அநீதியொன்றின்
நிகழ்வில்,
நன்பனது சினிமாவிற்கும்,
எனது கதைகளுக்கும்
வீரம் சேமித்துக்கொண்டேன்..

ஊடல்..

உன்னிடம் சண்டையிட
ஓராயிரம்
காரணங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் புன்னகையில்
தொலைந்துவிடக் கூடுமென்று
பொத்தி வைத்திருக்கிறேன்..

பிந்தொடருமுன் கொஞ்சலில்
காய்ந்து விடுமென்று
காவல் இருக்கிறேன்..

சலித்துக் காட்டுமுன்
பொய்க் கோபத்தில்
காரணங்களின்றி – அவை
உதிர்ந்துவிடுமெனத் தெரிந்தும்
சண்டையிடக் காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் கவிதைகள்..

உனக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நானுமென் கவிதைகளும்…

காத்திருப்பின் நீளம்
நீண்டபோதும்
இன்னும் களைப்படையாமல்…

என்னைப் போலவே
என் கவிதைகளுக்கும்
நிறைய எதிர்பார்ப்புகள்..

உன் காதலை
எதிர்நோக்கி நான்..
அதன் வார்ப்புகள்
எதிர்நோக்கியென் கவிதைகள்..

எப்போதென்
காகிதம் வருகிறாய்
கவிதையாய்ப் படர..?

தூறல் தொடங்குமொரு பொழுதில்..

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறாய்…

முன் நெற்றியிலொட்டிய
பத்தைப் பிரித்தென்
கைகள் பதித்துக்கொள்கிறாய்..

சிறிதுநேர கதகதப்பில்
சூடிறங்கியதாய்
இமைகள் பிரிக்கிறாய்…

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறேன்
நான்…

Wednesday, February 24, 2010

அந்த ஒற்றை ரோஜா..

மிகச்சிறிய கொப்பொன்று
இருமங்கிலும் இலைகளோடும்
நடுவிற் சில முட்களோடும்
சுற்றிலும் நீர்த்திவலைகளோடும்
முடிவுற்றிருந்தது ஒற்றை ரோஜாவில்..

அனைத்துமிருந்தும்,
அக்கொப்பு வேரற்றிருந்தது
பெண்ணொருத்தியின் தலையில்..

உயிர் பிரிந்திருந்தும்
புன்னகைத்திருந்தது
அந்த ஒற்றை ரோஜா..

Sunday, February 14, 2010

வாங்க.. கவிதை எழுதலாம்..

வேலையற்ற பொழுதொன்றில்
கவிதை எழுதலாமென்று
காகிதமெடுத்தேன்..

எந்தவொரு பாடுபொருளுமின்றி
எதைப்பற்றியென
சலனமற்றிருந்தேன்..

நீண்டு கொண்டிருந்த
நேரத்தின் நடுவில்
கவிதையே சிக்கியது
பாடுபொருளாய்..

எழுத முனைந்த
கட்டையின் நுனியில்
கண்ணீர்த் துளிகள்..
எழுத எழுத
கண்ணீரைச்
சொரிந்தது கவிதை..
காரணம் கேட்டேன்..

பிழைப்புக்காகவும்
பொழுது போக்கிற்காகவும்
தண்டிக்கப்படுவதாய்
கவிதையழுதது..

இல்லையென்று மறுத்தேன்..
ஆமென்று சாதித்தது..

தொண்டைச் செருமலுடன்
கம்பனிலிருந்து
கண்ணதாசன்வரை
எடுத்துக்காட்டினேன்..

மௌனமாய் இருந்தது..
பின் மெதுவாய்க் கேட்டது..
"நீ அவர்களில்லையே??"

மௌனமாய் இருந்தேன்..
கண்ணீரில்
காகிதம் நனைய
எழுதி முடித்தேன்..

வாங்க..
கவிதை எழுதலாம்..

Saturday, February 13, 2010

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''

"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''

"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''

"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''

"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.

ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''

"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''

"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன

நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''

"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''

1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.

1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.

1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.

1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.

பேருந்து எண்:3c

புளியங்குடி பேருந்து நிலையம் இடியுடன் கூடிய மழையில் நனைந்து கொண்டிருந்துது.அதோடு அரசு பள்ளி மாணவர்களின் கூச்சலில் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது.அத்தனை பேரும் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்.அந்த பள்ளி என்னவோ பேருந்து நிலையத்திற்கு முன்பே 2 கிலோமீட்டர் தள்ளி தான்.இடியோ மழையோ பசங்களுக்கு இங்கே வந்து ஏறினால் தான் பயணம் இனிக்கும்.காரணம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்புகள் அல்ல.. பேருந்து நிலையத்தை அழகாக்கும் மாணவிகள்.

“என்னடா.. இன்னைக்கு அந்த சுகந்தி புள்ளய காணும்??”

“டேய்.. அவ உன்ன தாண்டா பாக்கறா”

பசங்களின் மனங்கள், பேருந்தைப் போல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஆடி அசைந்து வந்தது 3-c அரசு பேருந்து.கடையநல்லூர் வ்ழி மாணவர்கள் பாய்ந்து தொற்றிக்கொண்டார்கள். பாஸ் வண்டியாச்சே.. சிறுவர்கள் போய் இருக்கையில் அமர பெரிய பசங்க வாசல்ல தொங்கி வம்பிழுத்தபடி இருந்தனர். நடத்துனர் வழக்கம் போல உள்ளே போகும்படி எச்சரித்தார்.வழக்கம் போல பசங்களும் இந்த காதுல வாங்கி மறு காதுல வெளிய விட்டனர். அதுவும் இன்று +2 பசங்களுக்கு கடைசி நாள். பேருந்து அல்லோகல்லோலப்பட்டது. பேப்பர கிழிச்சு பறக்கவிட்டு கத்திக்கொண்டிருந்தனர்.

“சும்மாவே இவனுகளோட ஏழரை தான்.இன்னைக்கு இவனுக அடங்கமாட்டனுக..எல்லாரும் பாஸ கையில எடுத்து வச்சுக்கோங்க. பாஸு இல்லாதவங்க சில்லறய சரியா வச்சுக்கோங்க..ஏலே ராசு.. நீ பாஸு வச்சுருக்கியா?” – நடத்துனர் கத்தினார்.

“அத வச்சு இனிமே பட்டம் கூட விடமுடியாது. உங்க பஸ்ஸு சீட்டு துடைக்க வச்சுக்கோங்க”- ஈன்னு சிரிச்சபடி சொன்னான் ராசு.

நடத்துனர் திரும்பி, “முதல்ல நீ பாஸ் பண்ணு.அப்புறம் பாஸ நான் துடைக்க வாங்கிக்கறேன்” – சொல்லிவிட்டு கடந்தார்.

வேடிக்கை பார்த்த பசங்க சிரிப்பில் அதிர்ந்து சென்றது பேருந்து.அமைதியானான் ராசு.

“எப்பா சங்கரு.. இன்னைக்கோட பரிச்சை முடியுது போல? நல்லா எழுதிருக்கியா?” – நடத்துனர் அக்கறையுடன் கேட்டார்.

”இல்லனா நீங்க போய் திருத்தி பாஸ் பண்ணி விட்டுருவீரா?” – ராசு நக்கலடித்தான்.

“எலேய்.. நீ மட்டும் பாரு.. என் பஸ்ஸுல காலத்துக்கும் பாஸுல தான் போக போற.” – நடத்துனர் சொல்ல மீண்டும் அதிர்ந்தது பேருந்து.அவர்கள் பஞ்சாயத்து எப்பவும் தீராது.

“ நல்லா எழுதிருக்கேண்ணே.. எப்படியும் என்ஜினியர் சீட்டு கெடச்சிடும்”

“இது புள்ள.. உங்கூட சுத்துது பாரு.. ஒண்ணும் உருப்படறதுக்கு இல்ல” – பொரிந்தவாறு சென்றார் நடத்துனர்.

மழை குறைந்து மெதுவாய் தூறிக்கொண்டிருந்தது. பேருந்து, 7th டே பள்ளி நிறுத்தத்தில் நின்றது. சங்கரின் கண்கள் வழக்கம் போல் அகல்யாவைத் தேடியது.இதோ இரட்டை ஜடையுமாய், அதில் ஒரு பக்கத்தில் மல்லிகைப்பூவுமாய் அகல் விளக்கைப்போல் நின்று கொண்டிருக்கிறாள். அகல்யா சங்கரின் சொந்த அத்தைப்பெண்.மொத்த உரிமை உள்ள ஒரே முறைப்பெண்.அகல்யா என்றால் சங்கருக்கு ரொம்ப இஷ்டம்.சிறுவயதிலிருந்து இயல்பாய் உரிமையில் வந்த ஒரு தலைப்பட்ச காதல்.இன்னும் சொல்லாமல் பொத்தி வைத்திருக்கிறான். அவனது மாமா பெரிய பணக்காரர்.அது தான் அவள் மெட்ரிக்கில் பத்தாவது படிக்கிறாள்.அவன் தன் வசதிக்கேற்ப அரசு பள்ளியில் படிக்கிறான்.சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அகல்யா இந்த பேருந்தில் ஏற மாட்டாள்.அவளுக்கு அதற்கும் அவசியமும் இல்லை.தனியார் சொகுசு பேருந்தில் தான் வருவாள். நிறுத்தத்தில், எதிரில், ஊரில் எங்கு பார்த்தாலும் சின்ன சிரிப்பு கூட இருக்காது அவளிடம். சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.இன்றும் பார்க்கிறாள் ஆனால் சிரிப்பு இல்லை.சங்கரின் கூட்டாளிகளுக்கு அவனது அத்தைப்பெண்ணை தெரியும் அவனது காதல் தெரியாது.நிறுத்தத்தில் அவள் நின்றிருந்தால் "சங்கரு" என்று கத்துவார்கள். அவன் எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை இந்த பசங்க.

அகல்யா மெதுவாய் நடந்து இவர்கள் பேருந்தை நெருங்கினாள்.அனைவரும் அமைதியானார்கள்.பேருந்தில் ஏறி உள்ளே சென்றுவிட்டாள்.

"என்னடா மாப்ள.. உன் மொறப்பொண்ணு மொரச்சுட்டே இதுல வருது??" - சிவம் கேட்டான்.

"தெரிலடா.. மழை வரதுக்குள்ள இதுல போய்டலாம்னு நெனச்சுருப்பா" - சங்கர் சொல்லிவிட்டு பார்வையை வெளியில் விட்டான். 'இந்த பசங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்' - மனதுள் சிரித்துக்கொண்டான்.

நீலநிற சுரிதார், காலில் விலை உயர்ந்த செருப்பு, அவளது நிறம் - அந்த பேருந்தில் அந்நியமாய்த் தெரிந்தாள் அகல்யா. பயணச்சீட்டு வாங்கிவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

சங்கரின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். 'ஏன் என்றுமில்லாமல் இன்று இதில் ஏறினாள்.? என்னைப்பார்க்க இருக்குமோ??' - சிரித்துக்கொண்டான்.மெதுவாய் திரும்பி பார்த்தான்.முன்னிருக்கையின் பின்னாடி காம்பசால் எதோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அவ்வளவு தான்.படபடத்து போய்விட்டான்.

'என்ன கிறுக்குகிறாள்?' என்று யோசிக்கும் போதே, பசங்க பார்த்துவிட்டார்கள்.

"பேருந்து அரசு சொத்து.உங்கள் சொத்தல்ல." - கத்தினார்கள்.

"உன் பேர் சொல்ல ஆசை தான்.. உள்ளம் உருக ஆசை தான்" - முடிவே பண்ணிவிட்டார்கள். அவள் மெதுவாய் திரும்பி முறைத்தாள்.

"மாப்ள..முறைக்குதுடா.." - அமைதியானார்கள்.

ஆனால் ராசு விடவில்லை.

"26 எழுத்து படிக்கிற உங்களுக்கே இவ்வளவு ஏத்தம் இருந்தா 247 எழுத்து படிக்கற எங்களுக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கும்??" - கொஞ்சம் அதிகமாகவே கத்தினான்.

"மச்சான்.. எங்கயோ போய்ட்டடா.. நீ பாசாகிடுவ" - பக்கத்திலிருந்த சிவம் சிரித்தபடி சொன்னான்.

"அடங்குங்கடா" - சங்கர் அவர்களைக் கட்டுப்படுத்தினான்.

சொக்கம்பட்டியில் ராசு,சிவம் இறங்கிக்கொள்ள, பேருந்து அமைதியானது.சங்கரும் பின்னாடி ஒரு சீட்டில் அமர்ந்து அகல்யாவைப் பார்த்தான். தூறலை விரல்களால் அளைந்து கொண்டிருந்தாள்.ரசித்துக்கொண்டிருந்தான் சங்கர். கைகளை உள்ளிழுத்து துடைத்துக்கொண்டு, கையில் ஒரு காகிதத்தோடு எழுந்தாள்.இவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவனை நோக்கி தான் வருகிறாள்.இவன், என்னவென்று கண்களால் வினவ, காகிதத்தை நீட்டினாள்.

'என்னது இது?? நான் செய்ய வேண்டியது இவள் செய்கிறாள்?' - குழம்பினாலும், மனதில் பட்டாம்பூச்சி பறக்க வாங்கிக்கொண்டான்.

'என்னது?" - என்று கேட்கும் முன் அவள் அவள் இருக்கையில் இருந்தாள். மீண்டும் தூறல். மீண்டும் விரல்கள்.

இவன் ஆசையுடன் வேகமாய்ப் பிரித்தான்.இடி இறங்கியது.பேருந்தில் இல்லை, இவன் மனதில்.

"உன்னுடன் இருக்கும் சுப்ரமணியனை விரும்புகிறேன்.நீ தான் உதவி செய்யணும்." - என்று எழுதப்பட்டிருந்தது. எதோ ஒன்று வேகமாய் நழுவியது.ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. அமைதியாய் இருந்தான்.

'இது தெரிந்து தான் எனக்காக நீ அழுகிறாயா மழையே??' - கண்கள் பனித்தது.

திரும்பவும் படித்தான். 'எந்த சுப்ரமனியான இவ சொல்றா???' - குழம்பியபடி மெல்ல எழுந்தான். அவளது பின்னிருக்கையில் அமர்ந்தான்.

"அகல்யா" - அழாமல் அழைத்தான். எனினும், கண்ணீர் தேங்கியதை அவனால் தடுக்க முடியவில்லை.கொட்டிவிடாமல் உள்ளிழுத்துக்கொண்டான்.

அவள் திரும்பினாள். ஆனால் தலை குனிந்து இருந்தாள்.

"யார் இந்த சுப்பிரமணியன்?"

"தெரிலையா?? " - மெதுவாய் குரல் வெளிவந்தது.

"இல்ல.."

நிமிர்ந்தாள்.."உன் கண் ஏன் கலங்கி இருக்கு??"

"ஒண்ணும் இல்ல.. நீ சொல்லு.. யாரு இவன்?? எந்த ஊர்?? "

"நீ ஏன் அழற??" அத முதல்ல சொல்லு.. "

அவன் வெளியில் வெறித்துப்பார்த்தான்... 'என்ன சொல்ல?? நான் உன்னை விரும்பினேன் என்றா??'

"நீ என்ன விரும்பறயா??"

திடுக்கிட்டு பார்த்தான் சங்கர்.. ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தான்.

நெடுநேர மௌனம்.. பின் அவளே பேசினாள்..

"அது உன் பேர் கூட ஓட்டிட்டு இருக்கற சங்கர சுப்பிரமணியன் தான்.."

சடக்கென்று தலை உயர்த்தினான். நிறுத்தம் அருகில் வர, "நீ என்ன விரும்பறயான்னு தெரில.. அதுக்காகத்தான் அப்படி பண்ணேன்.. அப்புறம், நீ பாட்டுக்கு அடுத்த வருடம் காலேஜ் போய் அங்க யாரையாவது விரும்பிறகூடாதில்ல..." என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

முன்னிருக்கையில் அவள் கிறுக்கியிருந்த 'சங்கர்'யில் அவளது காதல் சொல்லிப்போயிருந்தாள்.

என் சிலமணிநேர காதல்..

மேகாத்து கொஞ்சம் மெதுவா வீசிட்டிருந்தது.ஆத்தா ரெம்ப களச்சு போயிருந்தா.பாக்கவே பரிதாபமா இருந்துச்சு.காடு கரயில கருமாயப்பட்டு எனக்கும் சேத்து உழச்சு உழச்சு தேஞ்சு போயிட்டா. ஆத்தாவுக்கு நான்னா ரொம்ப உசிரு.என்ன கொஞ்ச நேரம் காணும்னாலும் தவிச்சு போயிடுவா.என் வயசு பிள்ளககிட்ட பேசிட்டு தாமசித்து வீட்டுக்கு வந்தா, 'ஊர சுத்தின நடக்கறதே வேற’னு தலையில செல்லமா கொட்டி மெரட்டுவா.ஆத்தாவுக்கு நான் வீட்டுலயே இருந்தா தான் நிம்மதி.

மேலூரு நிறுத்தத்துல ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோம்.இதோ மினிபஸ்ஸு வந்துட்டு. நான் வேகமா ஏறிட்டேன்.எனக்கப்புறம் ஆத்தா கஷ்டப்பட்டு ஏறுனா. பஸ்ஸுல வியாழக்கிழம சந்தக்கூட்டம்.யாரோ ஒரு புண்ணியவதி தடுமாறுன ஆத்தாவுக்கு இடம் கொடுத்தா.டிரைவருக்கு பின்னாடி சீட்ல மெதுவா உக்காந்துகிட்டு,என்ன அவ பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டா. நானும் வசதியா அவ பக்கத்துல நின்னுக்கிட்டேன்.

மினிபஸ்ஸு எங்க ஊரு மேடு பள்ளத்துல ஏறி இறங்கி மெதுவா ஊர்ந்து போக ஆரம்பிச்சது.எதேச்சையா திரும்பினா கொஞ்சம் பக்கத்துல ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருந்தான். நான் வெசனப்பட்டு திரும்பிக்கிட்டேன்.கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா,அப்பவும் என்னயே பாத்துட்டு இருந்தான்..வச்ச பார்வைய எடுக்கவே இல்ல.திமிரா பாத்துட்டே இருந்தான்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.ஆத்தா பக்கம் தலைய திருப்பிக்கிட்டேன்.ஆத்தா அவ பாட்டுக்கு நிம்மதியா வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தா.

கண்டக்டர் வந்து டிக்கட் எடுக்க சொன்னாரு.ஆத்தா எடுத்துட்டு திரும்பிக்கிட்டா.அவர் கூட்டத்த உள்ள தள்ள அவன் இன்னும் கொஞ்சம் பக்கதுல நின்னான்.இன்னும் பாத்துட்டு இருந்தான். நான் அப்போ அப்போ திரும்பி பாத்துக்கிட்டேன்.

கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாச்சு.இன்னும் கொஞ்சம் தைரியத்த வரவழச்சுட்டு மெதுவா திரும்பி பாத்தேன்.இன்னும் என்னயவே பாத்துட்டு இருந்தான்.’என்னடா இது வம்பா போச்சு’னு எனக்கு லேசா எரிச்சல் வந்துச்சு.எரிச்சல் வந்தாலும் அவன பாக்கறத என்னால தவிர்க்க முடில. கொஞ்சம் உயரம் கூட.கருப்பா இருந்தாலும் களயா இருந்தான்.கண்கள்? அத என்னால பாக்க முடில.அவ்ளோ காதல் தேங்கி இருந்தது.இந்த பயலுகலே இப்படித்தான்.முத தடவ பாத்தாலும் வச்ச கண்ணு வாங்காம பாக்கறதே பொழப்பா போச்சு. நான் வெடுக்குனு திரும்பி ஆத்தாவ ஒட்டிக்கிட்டு போய் நின்னுக்கிட்டேன்.

மனசுக்குள்ள எதோ நழுவுற மாதிரியும்,அழுத்தமா இருக்கற மாதிரியும்,பறக்கற மாதிரியும் இருக்கு.இவன இதுக்கு முன்னாடி இந்த பக்கம் பாத்ததே இல்லயே. நானும் எத்தனையோ தடவ ஆசுப்பத்திரிக்கு ஆத்தா கூட போயிருக்கேன்.இவன பாத்ததேயில்லயே.வெளியூர்க்காரனா இருப்பானோ?மனம் அவனையே சுத்தி சுத்தி வந்துச்சு.திரும்பி பாக்கலாமா? என்னறியாம திரும்பி பாத்தேன்.அடப்பாவி என்ன தான் இன்னும் பாத்துட்டு இருக்கான்.கொழுப்பு தான்.ஆனாலும் பாக்கறதோட நிறுத்திக்கிட்டான்.இல்லனா ஆத்தா மினி பஸ்ஸுனு கூட பாக்காம சாமி ஆடிடும்.

அதிக தூரம் கடந்து இருந்தது மினிபஸ்ஸு.அவன் இப்போ என்ன செய்யறான்னு பாக்கணும்னு தோணுச்சு.திரும்பினேன்.இப்போ அவன் எதோ சொல்ல துடிக்கற மாதிரி இருந்துச்சு.படபடனு அடிச்சுக்குச்சு மனசு.இனிமே திரும்பவே கூடாதுனு முடிவு பண்ணி ஆத்தாவுக்கு முன்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

அவன பத்தியே நெனச்சுட்டு இருந்ததுல இறங்க வேண்டிய இடத்த நான் கவனிக்கல. ஆத்தா தான் தட தடனு எழும்பி என்ன தரதரனு இழுத்துட்டு வேகமா கீழ இறங்குச்சு.அவன கடந்து கீழ இறங்கும் போது மெதுவா என்னமோ சொன்னான்.வேக வேகமா இறங்கினதுல காதுல விழல.இறங்கி நடந்து திரும்பி பாத்தேன்.அவன் கிட்டத்தட்ட வாசல்ல வந்து நின்னு கத்தினான்.”மேஏஏஏஏஏஏஏஏஎ……………….”…………

அந்த குரல்ல அத்தனை காதல் இருந்தது.வெகு தூரம் போன பின்னும் காதில் ரீங்காரமிட்டது அந்த குரல்.உங்க காதுல அது ரீங்காரமிடுதா?

காதல் பயணங்கள்

ன்றும் நிரம்பி வழியும் நெல்லையின் புதிய பேருந்து நிலையம் அன்று ஆர்ப்பாட்டமின்றி ஆறுதலாயிருந்தது.தென்காசிக்கு கிளம்பத் தயாராய் எப்பொழுதும் இரண்டு மூன்று பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணியாய் நிற்கும்.அன்று கூட்டமில்லாததால் காலியாயிருந்த பேருந்தில் ஏறியமர்ந்தேன்.அடுத்தடுத்து ஏறி வரும் மனிதர்கள் எப்பொழுதும் தனி இருக்கைகளையே விரும்பினர்.என் பக்கத்து இருக்கை இன்னும் காலியாக இருந்தது.சன்னலின் வழியே கண்களை சுழட்டினேன்.எத்தனை மனிதர்கள்?? தன்னைக் கடந்து செல்வோரிடம் சில புன்னகைகள், சில வருத்தங்கள், சில சங்கடங்கள் சிந்திச் சென்றனர்.

பேருந்து கிளம்பத் தயாரான கடைசி நிமிடங்களில் என்னருகில் இருந்த காலி இருக்கை நிரப்பப்பட்டது.ஓடி வந்து ஏறியமர்ந்தது ஒரு பெண்.அவளை அடுத்து ஓடிவந்து ஏறினான் ஒரு பையன்.ஏறியபின் அவன் அவளைப்பார்த்து சிரித்தான்.அவள் அவனைப்பார்த்து சிரித்தாள்.’ஆகா… கச்சேரி ஆரம்பிக்கபோகுது”என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் நான்.

பேருந்து நகர ஆரம்பித்தது.தென்காசி நோக்கிய சாலையில் வேகமெடுத்தது.மாலையின் மெல்லிய தென்றலோடும் பேருந்தில் வழிந்த பாடலோடும் பயணிக்க ஆரம்பித்தோம். நான் அதோடு கச்சேரியையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.இவ்வாறு அமையும் பயணங்கள் எவ்வளவு சுவாரசியமானவை?? காத்திருந்தேன்.

அவன் தான் பேச ஆரம்பித்தான்.

“எக்ஸாம் எப்படிடி எழுதிருக்க??” – ‘ஆரம்பமே ’டி’யில் இருக்கே?’

“ஏதோ எழுதிருக்கேன்டா.. பயமா இருக்கு” – அந்த “டா”வில் அதிக உரிமை தெரிந்தது.

“டா போட்டுக் கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..”

“அப்படித்தான்டா டா போட்டுக் கூப்பிடுவேன்.. நீ மட்டும் டீ போடலாம்.. நான் போடக்கூடாதா” – ‘அதானே?? ஆனாலும் சரியான வாயாடியா இருப்பாளோ?’

“உன்ன திருத்த முடியாதுடி.மொபைல்க்கு ரெஸ்ட் கொடுக்காம மூளைக்கு ரெஸ்ட் கொடுத்தா ரிசல்ட் பத்தி பயப்படத்தான் செய்யனும்”

“அய்யோடா.அத நீ சொல்லாதடா”

“ஐயா படிச்சு முடிச்சாச்சு. இப்போ வேலை வேற பாக்கறேன்.நான் மொபைல் வச்சிருக்கறதுக்கு நூறு சதவிகிதம் உரிமை இருக்கும்மா” – அந்த “ம்மா” வில் இன்னும் அதிகம் உரிமை கொடுத்தான்.

அவள் முறைத்தாள். “என்னால மொபைல் இல்லாம இருக்க முடியாதுடா. ஹாஸ்டல்ல இது ஒண்ணு தான் டைம் பாஸ். அப்புறம் அது இருந்தாதேனே உன்கிட்ட பேசமுடியும்??”

“இதையே காரணம் சொல்லு” - அவன் சிரித்தான்.

அவர்கள் என்னென்னவோ பேச என்னுடைய காதல் கண்முன் நிழலாடியது.இதைப்போலொரு பயணத்தில் தான் அவனை சந்தித்தேன்.வேகமாய் ஒடிவந்து யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் என் பக்கத்து இருக்கையில் நிரம்பினான். நான் முழித்தேன்.ஆசுவாசப்படுத்தி மெதுவாய் திரும்பி பின் அதிர்ந்து எழுந்தான்.

“மன்னிச்சிடுங்க. நான் பாக்காம உக்காந்துட்டேன்.” – படபடப்பாய் வெளிவந்தன வார்த்தைகள். என்ன சொல்வதென்று தெரியாமல் மண்டையை ஆட்டிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டேன்.முதல் சந்திப்பு இப்பவும் புன்னைகைக்க வைக்கிறது.

மறுநாள் அதே இருக்கையில் நான்.ஆனால் அவன் சுதாரித்துக்கொண்டான்.மெலிதாய் புன்னகைத்தான். கூடவே நானும். புன்னகைகள் அறிமுகமாகி காதலாய் வளர்ந்தது.அந்த பயணங்கள் மறக்க முடியாதவை.எங்கள் காதல் வளர்த்த பயணங்கள் அவை.

திடீரென்று அந்த பெண் அவன் தலையில் நோட்டால் அடிக்க, என் கவனம் சிதறியது.

“சொல்லுடா..வீட்டுக்கு எப்போ வர??”

“வீட்டுக்கா?? விளையாடறியா?? உங்க அப்பாவ பாத்தாலே பயமா இருக்கு”

“இப்படி பயந்துட்டே இரு.என்னைக்கு தான் நீ திருந்த போறியோ? நான் வேணா அப்பா கிட்ட பேசவா??”

“வேணாம் வேணாம்.பிரச்சனையாகிடும்.கொஞ்ச நாள் போகட்டும்.பாக்கலாம்.சரி,தம்பி, தங்கச்சிலாம் எப்படி படிக்கறாங்க?”

“படிக்கறாங்க. நான் வேலைக்கு போனா தான் அவங்கள அடுத்தடுத்து காலேஜ்க்கு அனுப்ப முடியும்.லோன் வேற இருக்கு. நீ சென்னைல உன் கம்பெனிலயே எனக்கு ஒரு வேலை பாருடா”

“ நானாடி கம்பெனி நடத்தறேன்?? பாக்கலாம். நான் இருக்கேன்ல. கவலைப்படாத”

“ டேய்.. நான் சென்னை வந்தா என்ன வெளில கூப்பிட்டு போவியா??

பீச், தீம் பார்க்?? அதெல்லாம் நான் பார்த்தே இல்லடா”

முறைத்தான்.

“ஊர் சுத்தறதுலயே இரு” – ‘என்ன பையன் இவ்ளோ கறாரா இருக்கான். நல்ல பையன் போலருக்கு. ‘

புன்னகைத்தேன். நல்ல காதல் ஜோடிகள்.பார்க்கவே சந்தோசமாயிருந்தது.

“சரி சரி.. புலம்பாதடா. எனக்கு கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் பண்ணனும். நினைவுல இருக்கா?” – அவள்.

அவன் வாய்விட்டு சிரித்தான்.

“ நீ பண்ண போற ப்ராஜக்ட்ட நான் ஏன் ஞாபகத்துல வச்சுக்கனும்?”

இப்போ அவள் முறைத்தாள்.

” நீ தானடா நான் பாத்துக்கறேனு சொன்ன?? நீ எப்பவும் இப்படித்தான்டா.. நம்பினா காலைவாரி விடற..”

"இவ்ளோ வாய் பேசறல?? நீயே எங்கயாவது போய் பண்ணு"

"அப்போ நீ ஹெல்ப் பண்ண மாட்ட??"

"எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் பாக்க எனக்கு நேரம் இல்ல. நான் அடுத்த வாரம் டெல்லி வேற போகணும்"

"ஏன் அங்க யாரையாவது செட் பணி வச்சுருக்கியா??"

"அடிப்பாவி.. உன் புத்தி உன்னைவிட்டு போகாதே? சரி சரி.. நீ இப்போ புலம்பாத.. நான் இருக்கேன்ல.. பாத்துக்கறேன்.. ”

அவள் சிரித்தாள்.

“குட் பாய்”

“இந்த சர்டிபிகேட்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” – அவனும் சிரித்தான்.

நான் மெலிதாய் புன்னகைத்தேன். எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்? அவனும் கூட இப்படித்தானே நம்பிக்கையூட்டினான்?? உனக்கு நான் இருக்கிறேனென்று.ஆனால் நடந்தது வேறு.

சோதிடம் காரணமாய் எங்கள் காதல் பயணத்தை கல்யாணத்தில் முடிக்க அவன் சொன்னபோது எனக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டது என் தம்பிக்காகவும், தங்கைகளுக்காகவும்.அவ்வருடங்கள் வரை பொறுக்க அவன் சாதகமும் சாதகமாயில்லை குடும்பமும் சம்மதிக்கவில்லை.இன்று அவன் இன்னொருவளின் கணவன். நான் அவனின் முன்னாள் காதலி.தம்பி, தங்கைகள் தங்கள் வழிகளைத் தேடி அவர்கள் வழித்துணையுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் காதோரம் நரைத்த தலைமுடியுடன் இப்படி காதல்கள் பார்த்தவாறு தனியாய் பயணிக்கிறேன்.

பேருந்து தென்காசிக்குள் நுழைந்தது.அவர்கள் கிளம்பத் தயாராயினர். குடும்பச்சுமையுடன் உன் காதலையும் காப்பாற்றிக்கொள் என்று அறிவுறுத்த திரும்பினேன்.இன்னும் பேச்சு நின்ற பாடில்லை.

“ நீயும் வீட்டுக்கு வரியாடா?” – சிரிப்புடன் கேட்டாள் அவள்.

முறைத்த அவன்,”டா டானு கூப்பிடாதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்.இனிமே கூப்பிட்டா தங்கச்சினு கூட பாக்க மாடேன்.பளார்னு ஒண்ணு வைப்பேன்.முதல்ல சித்திக்கிட்ட சொல்லி உன் வாய குறைக்க சொல்லனும்”

“குடும்ப சண்டைல எங்க அப்பாகிட்ட பேசலனா என் அம்மாகிட்டயும் பேசக்கூடாதுடா இடியட் அண்ணா”

முழித்தேன்.’அடக் கடவுளே?? என்ன வேலை பார்க்க போனேன்??’ சட்டென்று சிரித்துவிட்டேன். மெதுவாய் திரும்பிய அந்த பெண் வித்தியாசமாய்ப்பார்த்தாள். இருந்தாலும் புன்னகைத்தவாறு இறங்கினேன்.

ஒவ்வொரு பயணத்திலும் என்னோடு என் காதலும் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை என் காதலைப்போல.

நடந்தபடியே திரும்பிப் பார்தேன். அந்த அண்ணன் அவள் தங்கைக்கு பேக்கரியில் ஏதோ வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.

Friday, February 5, 2010

தொடர்பு படுத்துதல்..

தொடர்பற்றிரு;
பொருளோ புகழோ
உணவோ உயிரோ
இன்னபிறவோ..
தொடர்பற்றிருக்கட்டும்
புத்தியும் மனமும்..
ஆன்மா அமைதியுருமென்று
ஆன்மிகம் அறிவுறுத்தியது..
இறுகப் பற்றியிருக்கும்
புவியீர்ப்பின்
வேர் தேடியலைகிறேன்
தொடர்பற்றிருக்க.

Sunday, January 31, 2010

தமிழ் பயில்வோம் வாருங்கள்..(உ.த.ம.அ)

இதில் நாம் தினமும் வழக்கில் கொண்டு உள்ள தூய தமிழ் சொற்கள் எது, வடமொழி கலப்பு சொற்கள் எது என்று புரிந்து கொள்ள உதவும் ..

http://www.allaiyoorsvijayan.com/thuya%20tamil%20solkal.htm

Saturday, January 30, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

கடவுள் பிறந்த கதை... (உ.த.ம.அ)

பகுத்தறிவு கற்பபைக்குள் புலன் அடக்கி கிடந்த காலம்..... ஆதி மனிதன் அப்போது தான் உருவான காலம்.... குகைக்குள், காட்டுக்குள் விலங்கோடு விலங்குகளாய் விளையாடி திரிந்த காலம்...... ஆறாம் அறிவு பரிணாம வளர்ச்சி தொட்டதோடு சரி...பயன்பாடு கொள்ளாத காலம்.....

கொட்டும் மழை..... தடுத்திட வழி தெரியாது, ஒண்டி கிடக்க இடம் கிடையாது.... அறிந்த ஆயுதம் வேல் கம்பு மட்டுமே.... மழையோடு வேல் கம்பு பலபரிட்சை செய்தது.... அடங்கி போனது.....அறியா மூளையில் விச முள் தைத்தது.... என்னால் அடக்க முடியா, வெல்ல முடியா சக்தி ஒன்று உள்ளது என்று அடிபணிய சொன்னது அறியாமை...... காட்டு தீ கட்டுப்படுத்த தெரியாது இன்னொரு சக்தி, நிலநடுக்கம் காரணம் தெரியாது இன்னொரு சக்தி...... இப்படி தனக்கு உணர முடியாத தன்னால் தடுக்க முடியாத நிகழ்வுகளை சக்திகளாக நினைத்தது காட்டு மூளை.....

பஞ்ச பூதங்களை வழிபட தொடங்கினான்.... நாளடைவில் அதற்கான உருவம் தேவை பட்டது..... தனக்கு இணையான எதிர் சக்தி எனில் என்னால் வெல்ல முடியும், என்னால் வெல்ல முடியா சக்தி எனில் அது வேறு ஏதோ அதிகமாய் கொண்டு இருக்க வேண்டும்..... ஆக எனக்கு இரண்டு கைகள் என் எதிர் சக்திக்கு நான்கு கைகள்.... எனக்கு ஒரு தலை எதிர் சக்திக்கு நான்கோ ஐந்தோ தலைகள்.....இப்படி உருவம் கொடுத்தது மூடத்தனம்......

சற்றே நாகரீகம் வளர வேட்டையாடி காட்டுக்குள் தங்கி போனவனுக்கும் , ஆற்றங்கரையில் விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கும் இடையே விழுந்தது முதல் பிரிவு..... அவன் அவன் தன் போக்கிற்கு தனக்கான கடவுளையும் வழிபடு முறைகளையும் உருவாக்க தொடங்கினான்....

இப்படி அறிவு, இயல்பு அறியா மனித மூளை கண்டு பிடித்த எதிரி தான் கடவுள்.... அறிவியல் வளர வளர எதிரி அகப்பட்டு கொண்டே வருகிறான்.....

இதில் எங்கு துவங்கியது பிரிவினை கலாச்சாரம், சாதி எங்கு முளைத்தது என்பது எல்லாம் இன்னும் சிறுபிள்ளைத்தனம்.....

////////மதங்கள் எவ்வாறு தோன்றியிருக்கும்? /////

இன்று நடன கலையில் நாம் பல விதங்கள் சொல்கிறோம், பரதம், குச்சிபிடி, மேற்கத்திய நடன வகைகள் என பல விதம்.... எல்லாமே இசைக்கு உடலை அசைக்கும் நிகழ்வு தான் எனில் ஏன் இத்தனை வகைகள்???? சற்றே சிந்தித்தோம் எனில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை அசைவுகளின் விதங்கள் வேறு பட வேறு பெயர்கள் வெவ்வேறு விதிமுறைகள்.... அதே போல் தான் வழிபடும் விதங்களில் வேறுபட, ஒரு வழிபாட்டு முறை ஒத்துபோகாத கூட்டம் தனி தனியாக தமக்கு ஒரு புதிய குழு புதிய வழிபடு முறை என உருவாக்கி பிரித்து பார்க்க தொடங்கியது..... பின் அந்த அந்த குழுக்களில் உருவான கற்பனை கதை ஆசிரியர்கள் அவர்களுக்கான நாயகர்களை உருவாக்க தொடங்கினார்கள்.....

உதாரனமாக இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே உள்ள விஷயங்கள் யாவும் ஒப்பிட்டு பார்த்தீர்கள் ஆனால் முற்றிலும் மாறுபடும்.... இந்துக்கள் காலணிகளை அவர்கள் வழிபடு தளத்தின் வெளியே விட்டு சென்றால் முஸ்லிம்கள் அணிந்தே செல்வார்கள், இந்துகள் பசு கடவுள் என்று சொன்னால் அவர்கள் அதை கசாப்பு கடை பொருளாய் பார்பார்கள், இவர்கள் தாடி மீசையோடு கோவில் செல்ல கூடாது என்று சொன்னால் அவர்கள் அது தான் அவர்கள் அடையாளமாய் சொல்வார்கள்.... இப்படி ஒத்து போகாத எண்ணங்கள் தனி தனி குழுவாக பிரிந்ததே மதம்......

நீங்களோ நானோ ஒரு புதிய முறை கண்டு பிடித்து, சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு , ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி, அதில் ஒரு கூட்டத்தை சேர்த்தோம் எனில் புதிய மதம் ஒன்று உருவாகும்..... அவ்வளவு தான்.....

////////////ரமணர், வள்ளலார், இராமகிருஷ்ண பரமகாம்ஷர், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி...இவங்க எல்லாம் இங்கே சொன்னெதெல்லாம்......அத பத்தி........ ////

ஓசோ சொல்லி குடுத்தது எல்லாம் வாழ்க்கை எப்படி எளிமையானது எப்படி இனிமையாய் வாழ பழகுவது எனபது போன்ற தத்துவங்கள் தான்..... அவரை பின் பற்றிய கூட்டம் அவர் எது எல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அதை எல்லாம் அவர் பெயரால் அவரை கடவுளாக சித்திகரித்து சொல்ல ஆரம்பித்தது எனபது தான் உண்மை.....

ஜென் குருக்கள் யாரும் தங்களை கடவும் என்றோ, கடவுள் இது எனவோ போதிக்கவில்லை.... ஜன கதைகள் புத்தகம் படித்து பாருங்கள், வாழ்கைக்கான வாழும் முறைகள், வாழ்வியல் தத்துவங்கள் மட்டுமே அவர்கள் சொல்லி குடுத்த வரங்கள்.....

உதாரனமாய் ஒரு கதை....

ஜென் சீடன் : மலையின் உட்சியை அடைய எங்கு இருந்து துவங்குவது ?
ஜென் குரு : மலையின் உட்சியில் இருந்து துவங்கு ....

ஒவ்வருவரும் ஒரு சித்தாந்தம் சொல்லி போனார்கள்..... அனைத்தும் அறிந்த நிலை ஞானம் என்றார் சிலர், ஏதும் இல்லா நிலை ஞானம் என்றார் சிலர், ஆசை வேண்டாம் ஒரு சித்தாந்தம், அத்தனைக்கும் ஆசை படு ஒரு சித்தாந்தம்.....
இவை யாவும் நாம் என்ன எடுத்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது....

முதலில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் சாதிகள் உருவானது ..... தொழில் ரீதியாக பிரித்து பார்க்கப்பட்ட வர்க்க பேதம் சமய நூல்கள், சாத்திரங்கள் என்ற விச கிருமிகள் உள்ளே நுழைய வேர்விட்டு வளர்ந்து இன்று புற்று நோய் போல் பரவி கிடக்கிறது......

கடவுள் எல்லாமே கற்பனை தான் என்பதற்கு நாம் அவற்றிற்கு கொடுத்திருக்கும் உருவங்களே சாட்சியாகி விடும். நம்மால் கடவுளை நமக்குத்தெரிந்த உருவங்களில்தான் பொருத்திப் பார்க்கத் தெரிந்தது. கூடுதலாக கொஞ்சம் கை கால் தலை என சேர்த்து பிரம்மாண்டப்படுத்தி இருப்போம்! அவ்வளவுதான். மற்றபடி கடவுளைப் பற்றி பெரிதாக கதையளக்கவும் யாருக்கும் முடியவில்லை!


தன்னம்பிக்கை இல்லாத மனிதன் அழியினும் வாழினும் என்??????? இதுவரை எந்த புராணங்களும், மத கோட்பாடுகளும் நம்மை இறை என்ற ஒரு சக்திக்கு முன்னால் மண்டியிட சொல்லி தந்ததே தவிர தன்னம்பிக்கை கொண்டு தனித்து வாழ சொல்லி தரவில்லையே ஏன் ? ஒரு ஒரு மனமும் தன்னம்பிக்கை கொண்டு செயல் பட துவங்கி விட்டால் இறை இரையாய் போகும் என்ற அட்சம் தான்.....

ஒரு கண்மூடித்தனமான பயணபகுத்தறிவு எனபது கடவுள் எதிர்ப்போ, மத எதிர்ப்போ, சாதிய எதிர்போ அல்ல.....
உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்து தெளிதல்....... பகுத்து அறிந்து பார்கின்ற அறிவே பகுத்தறிவு...... இவற்றை செய்ய துவங்கினால் முதலில் நாமை சூழ்ந்து நிற்கும் இந்த கடவுள் , மதம் , சாதி போன்றவற்றை எதிர்க்க நேரிடுகிறது.... அவை யாவும் பகுத்தறிவாளர் வேலை என சமூகம் முத்திரை இட்டது...... ஏன் என்று பார்த்தால் மற்ற யாவரும் பகுத்தறிவு பயன்படுத்த கூடாது.... அவன் பயன் படுத்தும்முன் சாமிய எதிர்குற, நம்ம மதத்த இழிவு படுத்துற, நம்ம சாதிய மீருறனு கட்டி போட்டு வைச்சா தான் இவங்க பப்பு வேகும் .....

ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்"
குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம்.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை(கோபம்,பொறாமை,சுயநலம்)சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம்.

கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன.கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.கடவுளின் நம்பகத்தன்மையைப்பற்றிய எனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பதிலுக்கு என்னிடமே கேள்வி கேட்பவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன்.புத்தராகட்டும்,கிருஷ
்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம்.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதெ போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வழமான வாழ்வைக்கொடுங்கள்.இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.-OSHO.



அப்துல் ரெஹ்மான் கவிதையில் இருந்து...

இடிக்கப்படும் வீடுகளில் நீ இடிக்க படுகிறாயா? கட்ட படும் வீடுகளில் நீ கட்டபடுகிறாயா?

நீ இந்துவா ? முஸ்லிமா ? கிறிஸ்டீனா ?

பேராசிரியர் சு.ப.வீ எழுதிய ஒரு கட்டுரை

இன்றைய இளைஞர்கள் கணிப்பொறியியலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வல்லரசு நாடுகள்கூட, இந்தத் துறையில் தமிழக இளைஞர்களைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்நிலை நமக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது.
ஆனால் அதே இளைஞர்கள், தாம் பிறந்த மண்ணின் வரலாற்றையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இலக்கியச் செல்வங்களையும் அறியாமல் நிற்பது வேதனைக்குரியதல்லவா?

சங்ககால இலக்கியங்களை அல்ல, இன்று வெளிவரும் கவிதைகள், நாவல்களைக் கூட எத்தனை இளைஞர்கள் படிக்கின்றனர்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம் பற்றியன்று, இன்றைய சமூகச் சூழலைக் கூட எத்தனை இளைஞர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுக்கின்றனர்? ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம், சேதுக் கால்வாய்த் திட்டம், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, அணுசக்தி உடன்பாடு போன்ற நடப்புச் செய்திகளின் விவரங்களைத் தம் விரல் நுனிகளில் வைத்திருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்?
அத்தகைய இளைஞர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே என்பதனை நாம் அறிவோம். என்ன காரணம்?
இளைஞர்களிடம் கேட்டால் இரண்டு விடைகள் வருகின்றன. எல்லாவற்றையும் படித்து அறிய நேரமில்லை என்பது ஒன்று. இவைகளையெல்லாம் தெரிந்துகொள்வதால் என்ன பயன், இன்றைய வாழ்க்கைக்கு எதுவும் உதவாது என்பது இன்னொன்று.
இரண்டு விடைகளுமே மேலோட்டமானவை. நம்மைச் சுற்றி நிகழும் வாழ்க்கைப் போக்குகளில் அக்கறை காட்டமால், நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்கும் அலட்சியத் தன்மைதான் அடிப்படைக் காரணம். அரசியல்வாதிகளின் மீது பொதுவாகவே மக்கள் மூளைகளில் படர்ந்து கிடக்கும் வெறுப்பு இன்னொரு காரணம்.
அமெரிக்காவின் பில்கேட்ஸும், அம்பானியும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று கருதும் இளைஞர்கள், கருணாநிதி பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ அப்படிக் கருதுவதில்லை. ஏதோ கட்சி நடத்தி, மேடையில் பேசி வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணுகின்றனர்.
தான் ஒரு கட்சிக்கு ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்றும், படிப்பாளிகளுக்கு அது உரிய இடம் இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இப்படி அரசியலற்ற, சமூக அக்கறையற்ற ஓர் அணியை உருவாக்கியிருப்பதில் ஊடகங்களுக்கும் கூட ஓர் இடம் உண்டு.
துடைத்தெறியப்பட வேண்டிய இந்தச் சிந்தனை குறித்து, என் அடுத்த தலைமுறையோடு உரையாட நான் ஆவல் கொண்டேன்.
உங்கள் கனவு, காதல், ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் எதிலும் நான் குறுக்கிடவில்லை. இளமைக்கேற்ற துள்ளல் என்பது எனக்கு ஏற்புடையதே. ஆனால், சமூகம் பற்றிய பார்வையும், அக்கறையும் நமக்குக் கொஞ்சமாவது வேண்டாமா? கனவுகளில் மிதந்து கடமைகளை மறப்பது நியாயம்தானா?
ஒரு மாலை நேரம், தேநீர்க் குவளையோடு அமர்ந்து, பலவற்றையும் பேசும் நண்பர்களைப்போல, என் இளைய தலைமுறையே உங்களோடு பேச விரும்புகிறேன். வருவீர்களா?
தான் ஒரு கட்சியின் ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்னும் எண்ணம் மாணவர்களிடம் எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு அரசியலில் நேரடித் தொடர்பு உள்ளது. 'வெள்ளையனே வெளியேறு' என்பது மாணவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட முழக்கம்தான். அண்ணல் காந்தியடிகளே, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மாணவர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற விவாதம் அப்போதே எழுந்தது. படிக்கும் காலத்தில் படிப்புத்தான் முக்கியம் என்றாலும், நம் வீட்டு வயலில் ஒரு மாடு புகுந்து பயிர்களை எல்லாம் அழிக்கும்போது, அந்த மாட்டை விரட்ட வேண்டிய கடமை மாணவன் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டுதானே என்று விடையிறுக்கப்பட்டது. மாட்டை விரட்ட வேண்டிய உடனடி வேலைக்காகப் படிப்பைச் சற்று ஒத்தி வைப்பதில் பிழையில்லை என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. அந்த அடிப்படையில் அரசியலில் மாணவர்களின் பங்கேற்பு அன்று வரவேற்கப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பின்பும், அரசியலில் மாணவர்களும்,இளைஞர்களும் பங்கேற்கவே செய்தனர்.

தி.மு.கழகம் தொடங்கப்பெற்றபோது (1949), அண்ணாவைத் தவிர முதல்வரிசைத் தலைவர்கள் பலர் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். அதனால் தி.மு.க. என்பதே, ஓர் இளைஞர் அணி போலத்தான் தோற்றமளித்தது.
அண்ணா கூட, மாணவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. ''அரசியலை அறிந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் அதில் ஈடுபட வேண்டியதில்லை'' என்றே அவர் கூறினார். ஆனால் அதனையும் மீறி அன்றைய மாணவர்கள் அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர்.
1960லிகளில் தமிழக அரசியலையே மாணவர்கள்தாம் தீர்மானித்தார்கள் என்பது மிகையில்லை. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை பயின்ற மாணவர்களும் 1965ஆம் ஆண்டு நேரடியாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மாபெரும் போராட்டம் அதுதான். தமிழகத்தின் தெருக்கள் தீப்பிடித்துக் கொண்டன. 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கம் வானைப் பிளந்தது. கலவரமும், அடிதடியும், துப்பாக்கிச் சூடுமாய், அந்த இரத்தம் தோய்ந்த ஐம்பது நாள்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாயின.
தமிழகத்திலாவது மாணவர்கள் போராடியதோடு நின்று கொண்டனர். ஆனால் 1970களில், அசாம் மாணவர்கள் போராடி, மக்கள் சக்தியாய்த் திரண்டெழுந்து ஆட்சிக் கட்டிலிலேயே அமர்ந்து காட்டினர்.
இப்படிப் பல செய்திகள் நம்மிடம் உள்ளன. எனினும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைஞர்கள் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு நிற்கத் தொடங்கினர். அரசியல் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் ஒருவிதமான அருவெறுப்பு வளரத் தொடங்கியது.இந்த விபத்து என் தலைமுறையின் இளமைக் காலத்தில்தான் துளிர் விடத் தொடங்கியது. இன்று அது வளர்ந்து மரமாய் ஆகியுள்ளது.

1970களின் நடுப்பகுதியில், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே அறிவியல் பயிலும் மாணவர்கள் என்றும், கலையியல் பயிலும் மாணவர்கள் என்றும் இருவேறு பிரிவுகள், இருவேறு 'சாதிகளைப்' போல வளரத் தொடங்கின.
பொதுவாகவே, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் நோக்கியும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இலக்கியம், வரலாறு, பொருளியல் முதலான படிப்புகளை நோக்கியும் பிரிந்தனர். எனவே, அறிவியல் படிப்பு, நாளை உலகை மாற்றப்போகும் 'மேல் ஜாதியாகவும்', கலைப் படிப்பு, உலக வாழ்க்கைக்கு உதவாத 'கீழ்ச் சாதியாகவும்' கருதப்பட்டது.
குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தைக் கேலி செய்யும் தன்மை பரவலாக எழுந்தது. 'அசோகன் சத்திரம் கட்டினான், சாவடி கட்டினான், வீதிகளில் மரம் நட்டான்' என்பதையெல்லாம் படிப்பதால் இப்போது என்ன பயன்? என்ற எண்ணம் எழுந்தது.
அவ்வாறே, தமிழ் இலக்கியம் என்றாலே, 'என்னப்பா, தலைவன்லிதலைவி, அகநானூறு, புறநானூறு, ஒன்றுக்கும் பயன்படாத படிப்பு' என்ற கேலி எழுந்தது.
தமிழ் திரைப்படங்களில் கூட அந்தத் தாக்கம் இருந்தது. மற்ற ஆசிரியர்களெல்லாம் இயல்பாக இருக்க, தமிழாசிரியர் மட்டும் ஒரு கோமாளி போலவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இதுபோன்ற போக்குகள், அறிவியல் மாணவர்களிடம் ஒரு பெருமித உணர்ச்சியையும், வரலாறு, இலக்கியம் பயிலும் மாணவர்களிடையே ஒரு தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கியது.

ஆசிரியர்கள் சிலரும் இதற்குக் காரணமாயிருந்தனர். ''ஏம்பா, நீங்க எல்லாம் சயின்ஸ் ஸ்டூடன்ஸ் இல்லையா, அவனுங்க கூட சேர்ந்துகிட்டு ஸ்டிரைக் பண்றீங்களே... நாளைக்கு இன்டர்னல் மார்க்லே சுழிச்சோம்னா என்ன ஆவிங்க?'' என்று அறிவியல் துறை ஆசிரியர்கள் சிலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.
வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை. சரியாகப் படிப்புவராத 'பி.ஏ.' பயிலும் மாணவர்கள்தான் அவற்றில் ஈடுபடுவார்கள். 'பி.எஸ்ஸி' மாணவர்களுக்கு அதெல்லாம் உதவாது என்ற கருத்துப் பரவியது.

பிறகு இன்னொரு மாதிரியான பிரிவும் ஏற்பட்டது, அல்லது எற்படுத்தப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்படிப்புப் பயிலும் வேறு, கலை அறிவியல் பயிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் வேறு என்ற எண்ணம் எழுந்தது. தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று, கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் போடும் நிலையும் எழுந்தது.

இவ்வாறு, கல்வி நிலையங்களுக்குள் வர்க்கங்களும், சாதிகளும் உருவாயின. மேல்தட்டினர் என்ற கருத்துருவாக்கத்திற்கு உள்ளானவர்கள், அரசியலின் பக்கம் போவது நாகரிகக் குறைவானது என்று எண்ணத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அடுத்த கட்ட பரிணாமும் உருவானது. 1980களின் இறுதியில், பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று புதுவகைப் பள்ளிகள் தோன்றின. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் விட இங்கு பாடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, அதுவும் விருப்பப் பாடமாக மட்டும் படித்தால் போதுமானது.
இச்சூழலின் மாற்றம், மாணவர்களை மேலும் இரு கூறாக்கியது. ஆங்கில வழியில் பயிலும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் அறிவாளர்கள் எனவும், தமிழ்வழிப் பயில்வோர் பாமரர்கள் எனவும் ஒரு கருத்து உருப்பெற்றது.

பள்ளி, கல்லூரிகளின் படிப்பு நல்ல வேலை பெறுவதற்காகவும், அதன் மூலம் நல்ல ஊதியம் பெறுவதற்காகவும்தான் என்று முடிவே ஆகிவிட்டது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் கவலை கொள்ளாமல், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்களே நல்ல மாணவர்கள் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.
இப்படித்தான் கல்வியும், சமூகமும் ஒன்றுக்கொன்று அந்நியமாய்ப் போயின. சமூகப் பண்பையும், பொதுநல எண்ணத்தையும் வளர்க்க வேண்டிய கல்வி, சுய முன்னேற்றம் ஒன்றே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிட்டது.
அதன் விளைவாக, அரசியலற்ற படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது... செல்கிறது. இதனைத் தனிமனிதர்களின் குறைபாடு என்று நான் கூற வரவில்லை. இது ஒரு சமூகக் குறைபாடே.
இக்குறைபாட்டில் இன்றைய தலைமுறை சிக்கித் தவிப்பதற்கு, நேற்றைய தலைமுறைதான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. சரி, சென்ற தலைமுறை ஏன் அந்தக் குறைபாட்டிற்குக் காரணம் ஆயிற்று!
படிப்பு, எந்நேரமும் படிப்பு... தொழில் கல்வியில், குறிப்பாக கணிப்பொறிக் கல்வியில் பட்டமும், நல்ல மதிப்பெண்களும்... தேர்வுகள் முடிவதற்கு முன்பே வளாக நேர்காணலில் (Campus Interviews) வேலை வாய்ப்பு... பிறகு நல்ல ஊதியம், சொந்த வீடு, வெளி நாடுகளை நோக்கிப் பயணம் என்று பிள்ளைகளைப் பெற்றோர்கள் வழிப்படுத்தினார்கள். பிழை ஒன்றும் இல்லை. உழைப்பின் அடிப்படையில்தான் முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தொழில் அறிவும், உழைப்பும் ஒருவனை உயர்த்துவது மகிழ்ச்சிக்குரியதே!
ஆனால், சமூக அக்கறையும், பொதுவாழ்வில் தம் பிள்ளைகள் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் பின்னுக்குப் போய், ஒருவருக்குப் படிப்பறிவு மட்டும் போதும் அல்லது அது ஒன்றே எதைக் காட்டிலும் மேலானது என்று என் தலைமுறை ஏன் கருதியது? அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.
நான் அறிந்தவரையில், எனக்கு முந்தைய தலைமுறையில் படித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகம் தவிர, வேறு எந்தச் சமூகத்திலும் ஐந்து விழுக்காடு கூட இல்லை. எங்களின் தாயோ, தந்தையோ, பெரியப்பாவோ, அத்தையோ ஏடெடுத்துப் படித்ததில்லை. எழுத்தறிய வாய்ப்புமில்லை. அம்மா, அப்பா நிலையே இதுதான் என்றால், பாட்டி, தாத்தா பற்றிக் கேட்கவே வேண்டாம்.
1960களுக்குப் பிறகுதான் மெல்ல மெல்லக் கல்விக் கதவுகள் நமக்குத் திறந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 'காணாததைக் கண்ட' எம் பெற்றோர்கள், அடித்து உதைத்து எங்களைப் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். ''கண்ணு ரெண்டையும் விட்டுட்டு, வேற எங்க வேணும்னாலும் அடிங்க. புள்ளை படிச்சாப் போதும்'' என்று எங்கள் ஆசிரியர்களிடம் கருணை மனு நீட்டினார்கள்.
என் தலைமுறை படிக்கத் தொடங்கியது. எட்டாம் வகுப்பைச் சிலர் எட்டிப் பிடித்தார்கள். பதினோறாம் வகுப்பு (S.S.L.C), பெரிய பட்டப் படிப்பு போலக் கருதப்பட்டது. அதுவரை வந்தார்கள் சிலர். கல்லூரிக்குள் காலடி வைத்து, நான்காண்டுகள் படித்து முடித்து, பட்டம் வாங்கி, கறுப்பு உடையில் படம் எடுத்து, வீடுகளில் பெரிதாய் மாட்டி வைத்துக்கொண்டனர். என்னைப் போல் சிலர்.
அந்தப் படிப்பும், பட்டமும் அரசாங்கத்தில் சில வேலைகளை எங்களுக்குப் பெற்றுத்தந்தன. ஆண்டுக்கு 7 ரூபாய் ஊதிய உயர்வு என்பதை நாங்கள் ஆனந்தமாய்க் கொண்டாடினோம்.
உழவும், நெசவும், மீன்பிடித் தொழிலும், வேறு சில உதிரி வேலைகளும் தவிர, வேறு உலகம் தெரியாத எம் பெற்றோரிடமிருந்து நாங்கள் விலகி, அரசாங்கக் கட்டிடத்தில், மின் விசிறியின் கீழ் அமர்ந்து 'குமாஸ்தா' வேலை பார்த்ததை எண்ணி எண்ணிக் குதூகலமடைந்தோம். நாங்கள்தான அரசாங்கத்தையே நடத்துவதாக எண்ணி இன்ப நடம்புரிந்தோம்.
அந்தக் கட்டத்தில்தான், எங்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளே நீங்கள் பிறந்தீர்கள், உங்களை நல்ல முறையில் படிக்கவைத்து, இயன்றவரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து, அரசாங்கத்திலும், வங்கிகளிலும் அதிகாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
குமாஸ்தாக்களுக்குத் தமிழ் போதும், அதிகாரிகளுக்கு ஆங்கிலம் வேண்டாமா? எனவே, 'அறம்செய விரும்பு, ஆறுவது சினம்' போன்றவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, "Jack and Jill, went up the hill"; சொல்லிக் கொடுக்கும் பள்ளியைத் தேடிப்பிடித்து, மூன்று வயதிலேயே உங்களைப் பள்ளிக்கூடத்தில் தொலைத்துவிட்டோம்.
பள்ளிப் படிப்பு நம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறந்து, பள்ளிக்கே பிள்ளைகளை 'நேர்ந்து' விட்டது போல் ஆக்கிவிட்டோம். இன்று, நம் பிள்ளைகள், சமூகப் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்களே என்று நாங்களே நொந்து கொள்கிறோம்.
இப்போதும் கூடக் காலம் தாழ்ந்துபோய் விடவில்லை. கைக்கெட்டாத தூரத்தில் நீங்கள் காணாமல் போய்விடவில்லை.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்பது போல, எங்களைக் காட்டிலும் அறிவியல் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் பன்மடங்கு முன்னேறி நிற்கும் நீங்கள், சமூகப் பார்வையும், சமூக அக்கறையும் உடையவர்களாக ஆகிவிடுவீர்களென்றால், 'ஓராயிரம் ஆண்டு ஓய்ற்து கிடந்த பின்னர், வாராது போல் வந்த மாமணியாய்' நம் எதிர்காலம் அமையும்.

Saturday, January 9, 2010

தனிமை பழகு..

ஆளில்லா அறைகள்..
அலறாத தொலைக்காட்சி..

அழையாத கைபேசி..
விரல்படாத அழைப்புமணி..

திறக்காத சன்னல்கள்..
தீண்டாத குளிர்காற்று..

சுழலாத மின்விசிறி..
சத்தமிடாத சுவர்க்கோழி..

இசையற்ற இரவுகள்..
புன்னகையற்ற பகல்கள்..

முத்துக்களற்ற கொலுசு..
மூச்சுத் திணறும் தனிமை..

திகட்டும் தனிமைகளில்
தூங்கி வழிகின்றன
என் கனவுகள்..

இப்பொழுதெல்லாம்,
என்னறைகளில்,
ஒட்டடைகள்
நீக்கப்படுவதில்லை..

இருந்தும் நான்,
தனிமை பழகுகிறேன்..
கண்ணீர் கரைக்கும்
தலையணைக்காகவும்,
தோள் தாங்கும்
சுவர்களுக்காகவும்..

(உரையாடல் கவிதை போட்டிக்காய் எழுதியது..
http://tamil.blogkut.com/uraiyaadal.php )