Sunday, January 31, 2010

தமிழ் பயில்வோம் வாருங்கள்..(உ.த.ம.அ)

இதில் நாம் தினமும் வழக்கில் கொண்டு உள்ள தூய தமிழ் சொற்கள் எது, வடமொழி கலப்பு சொற்கள் எது என்று புரிந்து கொள்ள உதவும் ..

http://www.allaiyoorsvijayan.com/thuya%20tamil%20solkal.htm

Saturday, January 30, 2010

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

கடவுள் பிறந்த கதை... (உ.த.ம.அ)

பகுத்தறிவு கற்பபைக்குள் புலன் அடக்கி கிடந்த காலம்..... ஆதி மனிதன் அப்போது தான் உருவான காலம்.... குகைக்குள், காட்டுக்குள் விலங்கோடு விலங்குகளாய் விளையாடி திரிந்த காலம்...... ஆறாம் அறிவு பரிணாம வளர்ச்சி தொட்டதோடு சரி...பயன்பாடு கொள்ளாத காலம்.....

கொட்டும் மழை..... தடுத்திட வழி தெரியாது, ஒண்டி கிடக்க இடம் கிடையாது.... அறிந்த ஆயுதம் வேல் கம்பு மட்டுமே.... மழையோடு வேல் கம்பு பலபரிட்சை செய்தது.... அடங்கி போனது.....அறியா மூளையில் விச முள் தைத்தது.... என்னால் அடக்க முடியா, வெல்ல முடியா சக்தி ஒன்று உள்ளது என்று அடிபணிய சொன்னது அறியாமை...... காட்டு தீ கட்டுப்படுத்த தெரியாது இன்னொரு சக்தி, நிலநடுக்கம் காரணம் தெரியாது இன்னொரு சக்தி...... இப்படி தனக்கு உணர முடியாத தன்னால் தடுக்க முடியாத நிகழ்வுகளை சக்திகளாக நினைத்தது காட்டு மூளை.....

பஞ்ச பூதங்களை வழிபட தொடங்கினான்.... நாளடைவில் அதற்கான உருவம் தேவை பட்டது..... தனக்கு இணையான எதிர் சக்தி எனில் என்னால் வெல்ல முடியும், என்னால் வெல்ல முடியா சக்தி எனில் அது வேறு ஏதோ அதிகமாய் கொண்டு இருக்க வேண்டும்..... ஆக எனக்கு இரண்டு கைகள் என் எதிர் சக்திக்கு நான்கு கைகள்.... எனக்கு ஒரு தலை எதிர் சக்திக்கு நான்கோ ஐந்தோ தலைகள்.....இப்படி உருவம் கொடுத்தது மூடத்தனம்......

சற்றே நாகரீகம் வளர வேட்டையாடி காட்டுக்குள் தங்கி போனவனுக்கும் , ஆற்றங்கரையில் விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கும் இடையே விழுந்தது முதல் பிரிவு..... அவன் அவன் தன் போக்கிற்கு தனக்கான கடவுளையும் வழிபடு முறைகளையும் உருவாக்க தொடங்கினான்....

இப்படி அறிவு, இயல்பு அறியா மனித மூளை கண்டு பிடித்த எதிரி தான் கடவுள்.... அறிவியல் வளர வளர எதிரி அகப்பட்டு கொண்டே வருகிறான்.....

இதில் எங்கு துவங்கியது பிரிவினை கலாச்சாரம், சாதி எங்கு முளைத்தது என்பது எல்லாம் இன்னும் சிறுபிள்ளைத்தனம்.....

////////மதங்கள் எவ்வாறு தோன்றியிருக்கும்? /////

இன்று நடன கலையில் நாம் பல விதங்கள் சொல்கிறோம், பரதம், குச்சிபிடி, மேற்கத்திய நடன வகைகள் என பல விதம்.... எல்லாமே இசைக்கு உடலை அசைக்கும் நிகழ்வு தான் எனில் ஏன் இத்தனை வகைகள்???? சற்றே சிந்தித்தோம் எனில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை அசைவுகளின் விதங்கள் வேறு பட வேறு பெயர்கள் வெவ்வேறு விதிமுறைகள்.... அதே போல் தான் வழிபடும் விதங்களில் வேறுபட, ஒரு வழிபாட்டு முறை ஒத்துபோகாத கூட்டம் தனி தனியாக தமக்கு ஒரு புதிய குழு புதிய வழிபடு முறை என உருவாக்கி பிரித்து பார்க்க தொடங்கியது..... பின் அந்த அந்த குழுக்களில் உருவான கற்பனை கதை ஆசிரியர்கள் அவர்களுக்கான நாயகர்களை உருவாக்க தொடங்கினார்கள்.....

உதாரனமாக இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே உள்ள விஷயங்கள் யாவும் ஒப்பிட்டு பார்த்தீர்கள் ஆனால் முற்றிலும் மாறுபடும்.... இந்துக்கள் காலணிகளை அவர்கள் வழிபடு தளத்தின் வெளியே விட்டு சென்றால் முஸ்லிம்கள் அணிந்தே செல்வார்கள், இந்துகள் பசு கடவுள் என்று சொன்னால் அவர்கள் அதை கசாப்பு கடை பொருளாய் பார்பார்கள், இவர்கள் தாடி மீசையோடு கோவில் செல்ல கூடாது என்று சொன்னால் அவர்கள் அது தான் அவர்கள் அடையாளமாய் சொல்வார்கள்.... இப்படி ஒத்து போகாத எண்ணங்கள் தனி தனி குழுவாக பிரிந்ததே மதம்......

நீங்களோ நானோ ஒரு புதிய முறை கண்டு பிடித்து, சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு , ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி, அதில் ஒரு கூட்டத்தை சேர்த்தோம் எனில் புதிய மதம் ஒன்று உருவாகும்..... அவ்வளவு தான்.....

////////////ரமணர், வள்ளலார், இராமகிருஷ்ண பரமகாம்ஷர், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி...இவங்க எல்லாம் இங்கே சொன்னெதெல்லாம்......அத பத்தி........ ////

ஓசோ சொல்லி குடுத்தது எல்லாம் வாழ்க்கை எப்படி எளிமையானது எப்படி இனிமையாய் வாழ பழகுவது எனபது போன்ற தத்துவங்கள் தான்..... அவரை பின் பற்றிய கூட்டம் அவர் எது எல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அதை எல்லாம் அவர் பெயரால் அவரை கடவுளாக சித்திகரித்து சொல்ல ஆரம்பித்தது எனபது தான் உண்மை.....

ஜென் குருக்கள் யாரும் தங்களை கடவும் என்றோ, கடவுள் இது எனவோ போதிக்கவில்லை.... ஜன கதைகள் புத்தகம் படித்து பாருங்கள், வாழ்கைக்கான வாழும் முறைகள், வாழ்வியல் தத்துவங்கள் மட்டுமே அவர்கள் சொல்லி குடுத்த வரங்கள்.....

உதாரனமாய் ஒரு கதை....

ஜென் சீடன் : மலையின் உட்சியை அடைய எங்கு இருந்து துவங்குவது ?
ஜென் குரு : மலையின் உட்சியில் இருந்து துவங்கு ....

ஒவ்வருவரும் ஒரு சித்தாந்தம் சொல்லி போனார்கள்..... அனைத்தும் அறிந்த நிலை ஞானம் என்றார் சிலர், ஏதும் இல்லா நிலை ஞானம் என்றார் சிலர், ஆசை வேண்டாம் ஒரு சித்தாந்தம், அத்தனைக்கும் ஆசை படு ஒரு சித்தாந்தம்.....
இவை யாவும் நாம் என்ன எடுத்து கொள்கிறோம் என்பதில் இருக்கிறது....

முதலில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் சாதிகள் உருவானது ..... தொழில் ரீதியாக பிரித்து பார்க்கப்பட்ட வர்க்க பேதம் சமய நூல்கள், சாத்திரங்கள் என்ற விச கிருமிகள் உள்ளே நுழைய வேர்விட்டு வளர்ந்து இன்று புற்று நோய் போல் பரவி கிடக்கிறது......

கடவுள் எல்லாமே கற்பனை தான் என்பதற்கு நாம் அவற்றிற்கு கொடுத்திருக்கும் உருவங்களே சாட்சியாகி விடும். நம்மால் கடவுளை நமக்குத்தெரிந்த உருவங்களில்தான் பொருத்திப் பார்க்கத் தெரிந்தது. கூடுதலாக கொஞ்சம் கை கால் தலை என சேர்த்து பிரம்மாண்டப்படுத்தி இருப்போம்! அவ்வளவுதான். மற்றபடி கடவுளைப் பற்றி பெரிதாக கதையளக்கவும் யாருக்கும் முடியவில்லை!


தன்னம்பிக்கை இல்லாத மனிதன் அழியினும் வாழினும் என்??????? இதுவரை எந்த புராணங்களும், மத கோட்பாடுகளும் நம்மை இறை என்ற ஒரு சக்திக்கு முன்னால் மண்டியிட சொல்லி தந்ததே தவிர தன்னம்பிக்கை கொண்டு தனித்து வாழ சொல்லி தரவில்லையே ஏன் ? ஒரு ஒரு மனமும் தன்னம்பிக்கை கொண்டு செயல் பட துவங்கி விட்டால் இறை இரையாய் போகும் என்ற அட்சம் தான்.....

ஒரு கண்மூடித்தனமான பயணபகுத்தறிவு எனபது கடவுள் எதிர்ப்போ, மத எதிர்ப்போ, சாதிய எதிர்போ அல்ல.....
உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்து தெளிதல்....... பகுத்து அறிந்து பார்கின்ற அறிவே பகுத்தறிவு...... இவற்றை செய்ய துவங்கினால் முதலில் நாமை சூழ்ந்து நிற்கும் இந்த கடவுள் , மதம் , சாதி போன்றவற்றை எதிர்க்க நேரிடுகிறது.... அவை யாவும் பகுத்தறிவாளர் வேலை என சமூகம் முத்திரை இட்டது...... ஏன் என்று பார்த்தால் மற்ற யாவரும் பகுத்தறிவு பயன்படுத்த கூடாது.... அவன் பயன் படுத்தும்முன் சாமிய எதிர்குற, நம்ம மதத்த இழிவு படுத்துற, நம்ம சாதிய மீருறனு கட்டி போட்டு வைச்சா தான் இவங்க பப்பு வேகும் .....

ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்"
குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம்.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை(கோபம்,பொறாமை,சுயநலம்)சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம்.

கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன.கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.கடவுளின் நம்பகத்தன்மையைப்பற்றிய எனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பதிலுக்கு என்னிடமே கேள்வி கேட்பவர்களையே அதிகம் சந்தித்திருக்கிறேன்.புத்தராகட்டும்,கிருஷ
்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம்.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதெ போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வழமான வாழ்வைக்கொடுங்கள்.இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.-OSHO.



அப்துல் ரெஹ்மான் கவிதையில் இருந்து...

இடிக்கப்படும் வீடுகளில் நீ இடிக்க படுகிறாயா? கட்ட படும் வீடுகளில் நீ கட்டபடுகிறாயா?

நீ இந்துவா ? முஸ்லிமா ? கிறிஸ்டீனா ?

பேராசிரியர் சு.ப.வீ எழுதிய ஒரு கட்டுரை

இன்றைய இளைஞர்கள் கணிப்பொறியியலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வல்லரசு நாடுகள்கூட, இந்தத் துறையில் தமிழக இளைஞர்களைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்நிலை நமக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது.
ஆனால் அதே இளைஞர்கள், தாம் பிறந்த மண்ணின் வரலாற்றையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இலக்கியச் செல்வங்களையும் அறியாமல் நிற்பது வேதனைக்குரியதல்லவா?

சங்ககால இலக்கியங்களை அல்ல, இன்று வெளிவரும் கவிதைகள், நாவல்களைக் கூட எத்தனை இளைஞர்கள் படிக்கின்றனர்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம் பற்றியன்று, இன்றைய சமூகச் சூழலைக் கூட எத்தனை இளைஞர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுக்கின்றனர்? ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம், சேதுக் கால்வாய்த் திட்டம், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, அணுசக்தி உடன்பாடு போன்ற நடப்புச் செய்திகளின் விவரங்களைத் தம் விரல் நுனிகளில் வைத்திருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்?
அத்தகைய இளைஞர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே என்பதனை நாம் அறிவோம். என்ன காரணம்?
இளைஞர்களிடம் கேட்டால் இரண்டு விடைகள் வருகின்றன. எல்லாவற்றையும் படித்து அறிய நேரமில்லை என்பது ஒன்று. இவைகளையெல்லாம் தெரிந்துகொள்வதால் என்ன பயன், இன்றைய வாழ்க்கைக்கு எதுவும் உதவாது என்பது இன்னொன்று.
இரண்டு விடைகளுமே மேலோட்டமானவை. நம்மைச் சுற்றி நிகழும் வாழ்க்கைப் போக்குகளில் அக்கறை காட்டமால், நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்கும் அலட்சியத் தன்மைதான் அடிப்படைக் காரணம். அரசியல்வாதிகளின் மீது பொதுவாகவே மக்கள் மூளைகளில் படர்ந்து கிடக்கும் வெறுப்பு இன்னொரு காரணம்.
அமெரிக்காவின் பில்கேட்ஸும், அம்பானியும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று கருதும் இளைஞர்கள், கருணாநிதி பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ அப்படிக் கருதுவதில்லை. ஏதோ கட்சி நடத்தி, மேடையில் பேசி வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணுகின்றனர்.
தான் ஒரு கட்சிக்கு ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்றும், படிப்பாளிகளுக்கு அது உரிய இடம் இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இப்படி அரசியலற்ற, சமூக அக்கறையற்ற ஓர் அணியை உருவாக்கியிருப்பதில் ஊடகங்களுக்கும் கூட ஓர் இடம் உண்டு.
துடைத்தெறியப்பட வேண்டிய இந்தச் சிந்தனை குறித்து, என் அடுத்த தலைமுறையோடு உரையாட நான் ஆவல் கொண்டேன்.
உங்கள் கனவு, காதல், ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் எதிலும் நான் குறுக்கிடவில்லை. இளமைக்கேற்ற துள்ளல் என்பது எனக்கு ஏற்புடையதே. ஆனால், சமூகம் பற்றிய பார்வையும், அக்கறையும் நமக்குக் கொஞ்சமாவது வேண்டாமா? கனவுகளில் மிதந்து கடமைகளை மறப்பது நியாயம்தானா?
ஒரு மாலை நேரம், தேநீர்க் குவளையோடு அமர்ந்து, பலவற்றையும் பேசும் நண்பர்களைப்போல, என் இளைய தலைமுறையே உங்களோடு பேச விரும்புகிறேன். வருவீர்களா?
தான் ஒரு கட்சியின் ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்னும் எண்ணம் மாணவர்களிடம் எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு அரசியலில் நேரடித் தொடர்பு உள்ளது. 'வெள்ளையனே வெளியேறு' என்பது மாணவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட முழக்கம்தான். அண்ணல் காந்தியடிகளே, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மாணவர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற விவாதம் அப்போதே எழுந்தது. படிக்கும் காலத்தில் படிப்புத்தான் முக்கியம் என்றாலும், நம் வீட்டு வயலில் ஒரு மாடு புகுந்து பயிர்களை எல்லாம் அழிக்கும்போது, அந்த மாட்டை விரட்ட வேண்டிய கடமை மாணவன் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டுதானே என்று விடையிறுக்கப்பட்டது. மாட்டை விரட்ட வேண்டிய உடனடி வேலைக்காகப் படிப்பைச் சற்று ஒத்தி வைப்பதில் பிழையில்லை என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. அந்த அடிப்படையில் அரசியலில் மாணவர்களின் பங்கேற்பு அன்று வரவேற்கப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பின்பும், அரசியலில் மாணவர்களும்,இளைஞர்களும் பங்கேற்கவே செய்தனர்.

தி.மு.கழகம் தொடங்கப்பெற்றபோது (1949), அண்ணாவைத் தவிர முதல்வரிசைத் தலைவர்கள் பலர் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். அதனால் தி.மு.க. என்பதே, ஓர் இளைஞர் அணி போலத்தான் தோற்றமளித்தது.
அண்ணா கூட, மாணவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. ''அரசியலை அறிந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் அதில் ஈடுபட வேண்டியதில்லை'' என்றே அவர் கூறினார். ஆனால் அதனையும் மீறி அன்றைய மாணவர்கள் அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர்.
1960லிகளில் தமிழக அரசியலையே மாணவர்கள்தாம் தீர்மானித்தார்கள் என்பது மிகையில்லை. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை பயின்ற மாணவர்களும் 1965ஆம் ஆண்டு நேரடியாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மாபெரும் போராட்டம் அதுதான். தமிழகத்தின் தெருக்கள் தீப்பிடித்துக் கொண்டன. 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கம் வானைப் பிளந்தது. கலவரமும், அடிதடியும், துப்பாக்கிச் சூடுமாய், அந்த இரத்தம் தோய்ந்த ஐம்பது நாள்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாயின.
தமிழகத்திலாவது மாணவர்கள் போராடியதோடு நின்று கொண்டனர். ஆனால் 1970களில், அசாம் மாணவர்கள் போராடி, மக்கள் சக்தியாய்த் திரண்டெழுந்து ஆட்சிக் கட்டிலிலேயே அமர்ந்து காட்டினர்.
இப்படிப் பல செய்திகள் நம்மிடம் உள்ளன. எனினும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைஞர்கள் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு நிற்கத் தொடங்கினர். அரசியல் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் ஒருவிதமான அருவெறுப்பு வளரத் தொடங்கியது.இந்த விபத்து என் தலைமுறையின் இளமைக் காலத்தில்தான் துளிர் விடத் தொடங்கியது. இன்று அது வளர்ந்து மரமாய் ஆகியுள்ளது.

1970களின் நடுப்பகுதியில், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே அறிவியல் பயிலும் மாணவர்கள் என்றும், கலையியல் பயிலும் மாணவர்கள் என்றும் இருவேறு பிரிவுகள், இருவேறு 'சாதிகளைப்' போல வளரத் தொடங்கின.
பொதுவாகவே, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் நோக்கியும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இலக்கியம், வரலாறு, பொருளியல் முதலான படிப்புகளை நோக்கியும் பிரிந்தனர். எனவே, அறிவியல் படிப்பு, நாளை உலகை மாற்றப்போகும் 'மேல் ஜாதியாகவும்', கலைப் படிப்பு, உலக வாழ்க்கைக்கு உதவாத 'கீழ்ச் சாதியாகவும்' கருதப்பட்டது.
குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தைக் கேலி செய்யும் தன்மை பரவலாக எழுந்தது. 'அசோகன் சத்திரம் கட்டினான், சாவடி கட்டினான், வீதிகளில் மரம் நட்டான்' என்பதையெல்லாம் படிப்பதால் இப்போது என்ன பயன்? என்ற எண்ணம் எழுந்தது.
அவ்வாறே, தமிழ் இலக்கியம் என்றாலே, 'என்னப்பா, தலைவன்லிதலைவி, அகநானூறு, புறநானூறு, ஒன்றுக்கும் பயன்படாத படிப்பு' என்ற கேலி எழுந்தது.
தமிழ் திரைப்படங்களில் கூட அந்தத் தாக்கம் இருந்தது. மற்ற ஆசிரியர்களெல்லாம் இயல்பாக இருக்க, தமிழாசிரியர் மட்டும் ஒரு கோமாளி போலவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இதுபோன்ற போக்குகள், அறிவியல் மாணவர்களிடம் ஒரு பெருமித உணர்ச்சியையும், வரலாறு, இலக்கியம் பயிலும் மாணவர்களிடையே ஒரு தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கியது.

ஆசிரியர்கள் சிலரும் இதற்குக் காரணமாயிருந்தனர். ''ஏம்பா, நீங்க எல்லாம் சயின்ஸ் ஸ்டூடன்ஸ் இல்லையா, அவனுங்க கூட சேர்ந்துகிட்டு ஸ்டிரைக் பண்றீங்களே... நாளைக்கு இன்டர்னல் மார்க்லே சுழிச்சோம்னா என்ன ஆவிங்க?'' என்று அறிவியல் துறை ஆசிரியர்கள் சிலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.
வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை. சரியாகப் படிப்புவராத 'பி.ஏ.' பயிலும் மாணவர்கள்தான் அவற்றில் ஈடுபடுவார்கள். 'பி.எஸ்ஸி' மாணவர்களுக்கு அதெல்லாம் உதவாது என்ற கருத்துப் பரவியது.

பிறகு இன்னொரு மாதிரியான பிரிவும் ஏற்பட்டது, அல்லது எற்படுத்தப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்படிப்புப் பயிலும் வேறு, கலை அறிவியல் பயிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் வேறு என்ற எண்ணம் எழுந்தது. தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று, கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் போடும் நிலையும் எழுந்தது.

இவ்வாறு, கல்வி நிலையங்களுக்குள் வர்க்கங்களும், சாதிகளும் உருவாயின. மேல்தட்டினர் என்ற கருத்துருவாக்கத்திற்கு உள்ளானவர்கள், அரசியலின் பக்கம் போவது நாகரிகக் குறைவானது என்று எண்ணத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அடுத்த கட்ட பரிணாமும் உருவானது. 1980களின் இறுதியில், பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று புதுவகைப் பள்ளிகள் தோன்றின. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் விட இங்கு பாடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, அதுவும் விருப்பப் பாடமாக மட்டும் படித்தால் போதுமானது.
இச்சூழலின் மாற்றம், மாணவர்களை மேலும் இரு கூறாக்கியது. ஆங்கில வழியில் பயிலும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் அறிவாளர்கள் எனவும், தமிழ்வழிப் பயில்வோர் பாமரர்கள் எனவும் ஒரு கருத்து உருப்பெற்றது.

பள்ளி, கல்லூரிகளின் படிப்பு நல்ல வேலை பெறுவதற்காகவும், அதன் மூலம் நல்ல ஊதியம் பெறுவதற்காகவும்தான் என்று முடிவே ஆகிவிட்டது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் கவலை கொள்ளாமல், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்களே நல்ல மாணவர்கள் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.
இப்படித்தான் கல்வியும், சமூகமும் ஒன்றுக்கொன்று அந்நியமாய்ப் போயின. சமூகப் பண்பையும், பொதுநல எண்ணத்தையும் வளர்க்க வேண்டிய கல்வி, சுய முன்னேற்றம் ஒன்றே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிட்டது.
அதன் விளைவாக, அரசியலற்ற படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது... செல்கிறது. இதனைத் தனிமனிதர்களின் குறைபாடு என்று நான் கூற வரவில்லை. இது ஒரு சமூகக் குறைபாடே.
இக்குறைபாட்டில் இன்றைய தலைமுறை சிக்கித் தவிப்பதற்கு, நேற்றைய தலைமுறைதான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. சரி, சென்ற தலைமுறை ஏன் அந்தக் குறைபாட்டிற்குக் காரணம் ஆயிற்று!
படிப்பு, எந்நேரமும் படிப்பு... தொழில் கல்வியில், குறிப்பாக கணிப்பொறிக் கல்வியில் பட்டமும், நல்ல மதிப்பெண்களும்... தேர்வுகள் முடிவதற்கு முன்பே வளாக நேர்காணலில் (Campus Interviews) வேலை வாய்ப்பு... பிறகு நல்ல ஊதியம், சொந்த வீடு, வெளி நாடுகளை நோக்கிப் பயணம் என்று பிள்ளைகளைப் பெற்றோர்கள் வழிப்படுத்தினார்கள். பிழை ஒன்றும் இல்லை. உழைப்பின் அடிப்படையில்தான் முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தொழில் அறிவும், உழைப்பும் ஒருவனை உயர்த்துவது மகிழ்ச்சிக்குரியதே!
ஆனால், சமூக அக்கறையும், பொதுவாழ்வில் தம் பிள்ளைகள் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமும் பின்னுக்குப் போய், ஒருவருக்குப் படிப்பறிவு மட்டும் போதும் அல்லது அது ஒன்றே எதைக் காட்டிலும் மேலானது என்று என் தலைமுறை ஏன் கருதியது? அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.
நான் அறிந்தவரையில், எனக்கு முந்தைய தலைமுறையில் படித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகம் தவிர, வேறு எந்தச் சமூகத்திலும் ஐந்து விழுக்காடு கூட இல்லை. எங்களின் தாயோ, தந்தையோ, பெரியப்பாவோ, அத்தையோ ஏடெடுத்துப் படித்ததில்லை. எழுத்தறிய வாய்ப்புமில்லை. அம்மா, அப்பா நிலையே இதுதான் என்றால், பாட்டி, தாத்தா பற்றிக் கேட்கவே வேண்டாம்.
1960களுக்குப் பிறகுதான் மெல்ல மெல்லக் கல்விக் கதவுகள் நமக்குத் திறந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, 'காணாததைக் கண்ட' எம் பெற்றோர்கள், அடித்து உதைத்து எங்களைப் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். ''கண்ணு ரெண்டையும் விட்டுட்டு, வேற எங்க வேணும்னாலும் அடிங்க. புள்ளை படிச்சாப் போதும்'' என்று எங்கள் ஆசிரியர்களிடம் கருணை மனு நீட்டினார்கள்.
என் தலைமுறை படிக்கத் தொடங்கியது. எட்டாம் வகுப்பைச் சிலர் எட்டிப் பிடித்தார்கள். பதினோறாம் வகுப்பு (S.S.L.C), பெரிய பட்டப் படிப்பு போலக் கருதப்பட்டது. அதுவரை வந்தார்கள் சிலர். கல்லூரிக்குள் காலடி வைத்து, நான்காண்டுகள் படித்து முடித்து, பட்டம் வாங்கி, கறுப்பு உடையில் படம் எடுத்து, வீடுகளில் பெரிதாய் மாட்டி வைத்துக்கொண்டனர். என்னைப் போல் சிலர்.
அந்தப் படிப்பும், பட்டமும் அரசாங்கத்தில் சில வேலைகளை எங்களுக்குப் பெற்றுத்தந்தன. ஆண்டுக்கு 7 ரூபாய் ஊதிய உயர்வு என்பதை நாங்கள் ஆனந்தமாய்க் கொண்டாடினோம்.
உழவும், நெசவும், மீன்பிடித் தொழிலும், வேறு சில உதிரி வேலைகளும் தவிர, வேறு உலகம் தெரியாத எம் பெற்றோரிடமிருந்து நாங்கள் விலகி, அரசாங்கக் கட்டிடத்தில், மின் விசிறியின் கீழ் அமர்ந்து 'குமாஸ்தா' வேலை பார்த்ததை எண்ணி எண்ணிக் குதூகலமடைந்தோம். நாங்கள்தான அரசாங்கத்தையே நடத்துவதாக எண்ணி இன்ப நடம்புரிந்தோம்.
அந்தக் கட்டத்தில்தான், எங்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளே நீங்கள் பிறந்தீர்கள், உங்களை நல்ல முறையில் படிக்கவைத்து, இயன்றவரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து, அரசாங்கத்திலும், வங்கிகளிலும் அதிகாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
குமாஸ்தாக்களுக்குத் தமிழ் போதும், அதிகாரிகளுக்கு ஆங்கிலம் வேண்டாமா? எனவே, 'அறம்செய விரும்பு, ஆறுவது சினம்' போன்றவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, "Jack and Jill, went up the hill"; சொல்லிக் கொடுக்கும் பள்ளியைத் தேடிப்பிடித்து, மூன்று வயதிலேயே உங்களைப் பள்ளிக்கூடத்தில் தொலைத்துவிட்டோம்.
பள்ளிப் படிப்பு நம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறந்து, பள்ளிக்கே பிள்ளைகளை 'நேர்ந்து' விட்டது போல் ஆக்கிவிட்டோம். இன்று, நம் பிள்ளைகள், சமூகப் பார்வை அற்றவர்களாக இருக்கிறார்களே என்று நாங்களே நொந்து கொள்கிறோம்.
இப்போதும் கூடக் காலம் தாழ்ந்துபோய் விடவில்லை. கைக்கெட்டாத தூரத்தில் நீங்கள் காணாமல் போய்விடவில்லை.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்பது போல, எங்களைக் காட்டிலும் அறிவியல் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் பன்மடங்கு முன்னேறி நிற்கும் நீங்கள், சமூகப் பார்வையும், சமூக அக்கறையும் உடையவர்களாக ஆகிவிடுவீர்களென்றால், 'ஓராயிரம் ஆண்டு ஓய்ற்து கிடந்த பின்னர், வாராது போல் வந்த மாமணியாய்' நம் எதிர்காலம் அமையும்.

Saturday, January 9, 2010

தனிமை பழகு..

ஆளில்லா அறைகள்..
அலறாத தொலைக்காட்சி..

அழையாத கைபேசி..
விரல்படாத அழைப்புமணி..

திறக்காத சன்னல்கள்..
தீண்டாத குளிர்காற்று..

சுழலாத மின்விசிறி..
சத்தமிடாத சுவர்க்கோழி..

இசையற்ற இரவுகள்..
புன்னகையற்ற பகல்கள்..

முத்துக்களற்ற கொலுசு..
மூச்சுத் திணறும் தனிமை..

திகட்டும் தனிமைகளில்
தூங்கி வழிகின்றன
என் கனவுகள்..

இப்பொழுதெல்லாம்,
என்னறைகளில்,
ஒட்டடைகள்
நீக்கப்படுவதில்லை..

இருந்தும் நான்,
தனிமை பழகுகிறேன்..
கண்ணீர் கரைக்கும்
தலையணைக்காகவும்,
தோள் தாங்கும்
சுவர்களுக்காகவும்..

(உரையாடல் கவிதை போட்டிக்காய் எழுதியது..
http://tamil.blogkut.com/uraiyaadal.php )