Thursday, October 20, 2011

குதிரைவண்டிக்கனவு..

அவள் வீட்டிலொரு குதிரைவண்டி இருந்தது..
மிக அழகான கருங்கட்டைகள் கடைந்தெடுத்த குதிரைவண்டி.
ஆனால் குதிரையற்ற குதிரைவண்டி .
ஆயினும் கம்பீரமான குதிரைவண்டி .
முற்றத்தில் வளர்ந்தவொரு கொடிக்காய்ப்புளி மரத்தின் முட்கள் தாங்கி
மூச்சற்றுப் போயிருந்தது அந்த குதிரைவண்டி..
திண்ணை தாண்ட அனுமதியில்லை அவளுக்கு.
என்றாலும் முட்கள்தாண்டி வண்டியேறும் அவளின் கோரிக்கைகள்
நிராகரிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தன.
வண்டியெங்கும் கொடிக்காய்ப் பழம் கொத்தித் தின்னும்
கோழியிடம் மட்டுமே சண்டையிட முடிந்தது அவளால்.
பந்தெறிந்தும் செப்புச்சாமான் தூக்கியெறிந்தும்
வண்டியேறத் துணிந்து சதை கிழித்துக்கொண்டாள்.
அவள் பள்ளியிலிருந்து வீடுதிரும்பும்முன்
முட்களெதுவும் இருக்காதென்று தலைகோதினாள் தாய்..
பள்ளிமுழுவதும் குதிரைவண்டியில் வலம்வந்தாள் அவள்,
குதிரையில்லாத குதிரை வண்டியில்.
ஆம்.. மாலையில் கண்டாள் துடைத்தெடுக்கப்பட்ட முற்றம்.
முட்களுடன் குதிரைவண்டியும் சுத்திகரிக்கப்பட்டிருந்தது..
குதிரைவண்டி குடைந்து மரக்குதிரை வந்திருந்தது அவளுக்கு.
உட்காரவைத்ததும் பெருங்குரலெடுத்து உடைந்தழுகிறாள் அவள்.
கனவுகள் திரித்தலின் வலிபுரியாத தாய் தூக்கியெறிகிறாள் மரக்குதிரையை,
குதிரைவண்டியிருந்த முற்றம் நோக்கி..