Thursday, February 6, 2014

கொடுங்காடு..

அதொரு மிகச்சிறிய காடு.. வேரற்ற மரங்களும் இலைகளற்ற கிளைகளும் கொண்டதொரு கொடுங்காடு.. வானமற்று காற்றுமற்று காய்ந்து போனதொரு கருங்காடு.. மரித்துப்போன அக்காட்டினை அடக்கம் செய்யவும் இன்னுமொரு பிழைப்பிற்கான பதியமிடவும் தேவைப்படுகிறது மற்றுமொரு காடு.. எங்கிருந்தோ பெய்த மழைமுத்தின் ஈரம்கொண்டு துளிர்த்துவிட துடிக்கும் கருங்காட்டின் கழுத்தை நெரித்து மேலெழும்பும் புதியகாட்டின் பல்லிலிப்பில் அடகுவைக்கப்படுகிறது புதியதொரு வாழ்வு..

நினைவுகளின் மீட்டமைப்பு..

இரவின் ஆழ் மௌனத்தைக்கொன்று கொண்டிருக்கும் என் மடிக்கணினியின் வெளிச்சத்தில் அடிக்கடி அலுத்துக்கொள்கிறதொறு கரப்பான்பூச்சி.. அடர்ந்த பனியின் இறக்கமும் பூட்டமறந்த கதவின் கிறீச்சலும் காய்ச்சலை அதிகப்படுத்துகிறது. அன்றைய அரைகுறை நினைவுச்செல்களில் தேங்கிக்கிடக்கிறது சவுக்கின் சுளீர் சாட்டையடிகளும் மொட்டையடித்த நிலவுமொழியின் அழகும் மற்றுமென் மதிப்பிற்குரிய நண்பர்களின் மதத்தை தாங்கிப்பிடிக்கும் கதறல்களும்.. நிதர்சன வாழ்க்கையும் சுயமரியாதையும் சுட்டெரிக்கப்படுகிறது சுயநலக்கோடுகளில். அத்தனை செல்களும் செத்துவிடுகிறது விடியலில். வழியும் இரத்தத்தை துடைத்தெறிந்து காய்ச்சலுற்ற சிலிக்கானை காப்பாற்ற ஓடும் அதீத அறிவின் அடுத்த படியில் நான். நீங்கள்? நம்பிக்கையின் முற்றுப்புள்ளி இரவோ பகலோ இன்னும் இரவுகளுண்டு.. பகல்களுமுண்டு..

நிலவுத் தேடல்..

நிலவைப்பார்த்து வெகுநாட்களாயிற்று.. பார்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறது நேரம்.. நாய்களின் இடைவிடாத ஊளைகள் எதிரொலிக்கும் இரண்டாம் சாமத்தில் நேற்றைய பகலின் அமானுஷ்ய விவாதத்தில் குறிப்பெடுத்துக்கொண்ட நாய்களின் ஊளைகள் இப்பொழுது ஒத்துப்போகிறது. தொண்டை வலித்ததோ ஆவிகள் விடைபெற்றதோ திடீர் நிசப்தம் காதில் பேரிரைச்சலைக் கிளப்பியது. பின்கதவின் சாவித்துவாரத்தில் நிலவுக்கான ஏக்கம் கண்டு கெக்கலித்த இரவுப்பூச்சிகளை வெறுப்பேற்ற சுயசமாதானத்தின் தாழ் திறக்கப்படுகிறது.. கும்மிருட்டின் கொலைமிரட்டலில் வெட்கிப்போனது அன்றைய நிலவின் இருப்பையறியாத அவசரம். எங்கு தேடியும் காணாத நிலவின் ஏமாற்றம் இரவின் மூலை முடுக்கெல்லாம் பரவியடங்குகிறது.. நேரெதிர் திசையின் கரும்போர்வைக்குள் ஒளிருமொரு வெளிச்சப்பொட்டு தகர்த்தெறிகிறது சுயசமாதானத்தை.. சட்டென ஏங்கியழும் நாயை அடித்தது யாரென புலப்படுமுன் நிலவுக்கு விடைகொடுத்து தூங்கிப்போயிருந்தேன்.. அடர்த்தியான இரவில் நிதானமாய் ஒலியெழுப்பி ஒழுகும் நீர்க்குழாயையும் நிறுத்தாமல் ஒங்கியழும் நாயையும் நோட்டமிடும் அவ்வெளிச்சப் பொட்டையும் கொஞ்சம் கவனித்துக்கொள்கிறீர்களா ? நான் நிம்மதியாகத் தூங்கவேண்டும்..

Monday, November 28, 2011

காதற்காலங்கள்..

பகலில் நீயென் பக்கமில்லை
அதனால் பகலென் விருப்பமில்லை.
இரவில் நீயென் இமைகளில்லை
அதனால் இரவுமென் இஷ்டமில்லை.
நீ என்னிடம் வரும் பொழுதென்ன?
நிலவைக் கொண்டுவரும் அந்திநேரமா?
பனித்துளியைக் கொண்டுவரும் அதிகாலையா?
பதில் சொல்லியனுப்புவாயா?

சூரியக்கதிர்களில் அஞ்சல் அனுப்பியிருப்பாயென்று
உத்திரக்கண்ணாடியில் உற்றுப் பார்க்கிறேன்.
வற்றியகிணற்றினடியில் கடிதம் வைத்திருப்பாயென்று
காக்கையைப்போல் கற்கலெறிந்து முயற்சிக்கிறேன்.
வெப்பத்துகள்களில் வியர்வைத்துளி நனைத்திருப்பாயென்று
காய்ந்த குட்டைகளில் தேடித்திரிகிறேன்.
பின், சுடும்பாறையிலும் வெடித்த நிலங்களிலும்
எழுதியிருந்தாய் ஒரு சொல்.
அதிலுன் தீண்டலொன்று மிச்சமிருந்தது.

காற்றில் காகிதம் கலந்திருப்பாயென்று
மரங்களோடு ஒற்றைக்காலில் தவமிருக்கிறேன்.
முகிலோடு செய்தி சொல்லியிருப்பாயென்று
கார்மேகங்கள் வாய்திறக்க எதிர்நோக்கியிருக்கிறேன்.
வானத்தின் வழியாய் தூதனுப்புவாயென்று
மழையின் முதற்துளிக்காய் காத்திருக்கிறேன்.
பின், தூறலோடும் குளிர் தென்றலோடும்
கொடுத்திருந்தாய் ஒருவோலை.
அதிலுன் முத்தமொன்று மிச்சமிருந்தது.

வெயிலோடு சிறு அனலும்
மழையோடு சிறு எச்சிலுமென
கலந்திருக்கிறது உன் காதல்.
இங்கே பகலெல்லாம் மழை.
இரவெல்லாம் அனல்.

Wednesday, November 23, 2011

நான், அவன் மற்றும் நிலா

என்னிலிருந்து நிலவுக்கும் அவனுக்குமான
இடைவெளியில் அதிக வேற்றுமையொன்றுமில்லை.
என் கேள்விகளுக்கான பதில்களில்
அவனைப்போலவே நிலவிலும் மௌனம்.
என் கேவல்களின் தேற்றலில்
நிலவைப்போலவே அவனிலும் பொறுமை.
எனினும் நான் நிலவோடு பேசும்போதும்
அவனோடு கொஞ்சும்போதும் ஒருவருக்கொருவர் குறுக்கிடுவதில்லை.
சில நேரங்களில் நிலவில் ஆறுதல்களும்
அவனில் பதில்களும் கிடைப்பதுண்டு.
என்றோவொரு நாள் நிலவு மட்டும் மிச்சமிருக்கும்
எனக்கும் அவனுக்குமான இடைவெளியில்.
இடைவெளியின் அளவு பூஜ்யமாகவும் முடிவிலியாகவும் இருக்கலாம்.

நிலவின் பிம்பங்கள்

நிலவைப்பற்றிய நினைவுகளென்றால் அவளுக்கு பெரும்பயம்.
அதனளவு உருண்டை வாயில் திணிக்கப்படும் என்பதாய் இருக்கலாம்.
அங்கே கொண்டுபோய் விட்டுவிடுவேனென்பதாய் இருக்கலாம்.
நினைத்தால் வீடுதிரும்ப இயலாதென்பதாய் இருக்கலாம்.
அவளது பொம்மையும் செப்புச்சாமனும் அங்கில்லாதமையால் இருக்கலாம்.
அதனைச் சூழ்ந்த இரவுக்கம்பளியின் கிழிசலும் கருமையுமாய் இருக்கலாம்.
அதனுள் ஓய்வெடுக்கும் சூனியக்கிழவியின் உருவமாய் இருக்கலாம்.
ஆர்ம்ஸ்ட்ராங் கூட தங்கமுடியாத தனிமையாய் இருக்கலாம்.
இவையெதையும் காரணங்களாய் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னெதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

அன்பின் அளவுகோல்

உன் கனவுகள் மிக அடர்த்தியானது.
அதனுள்ளிருக்கும் நினைவுப்படிமங்கள் முழுதும்
என் பெயரெழுதிச் செல்லும் வழிதேடியலைகிறேன்.
கள்ளிச்செடியின் பாற் கொண்டெழுதியும்
கற்களின் கூர்நுனி கொண்டெழுதியும்
படிமங்கள் கீறுகிறேன்.
இன்னும் இளகாத படிமங்கள் மீது
விரல்களின் குருதி கொண்டெழுதியும் பார்க்கிறேன்.
இன்னும் இறுகிப்போகும் படிமங்கள் மீது
இரும்பின் இளஞ்சூடு கொண்டெழுதியபோது
கூழாகிப்போகின்றன கனவின் அனைத்துப்படிமங்களும்.
கரைந்தோடும் நேரத்தில் அவசரமாய் தேடுகிறேன்,
மருந்துச்சாறின் வலிமையையும் மயிலிறகின் மென்மையையும்..