Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Saturday, February 13, 2010

பேருந்து எண்:3c

புளியங்குடி பேருந்து நிலையம் இடியுடன் கூடிய மழையில் நனைந்து கொண்டிருந்துது.அதோடு அரசு பள்ளி மாணவர்களின் கூச்சலில் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது.அத்தனை பேரும் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்.அந்த பள்ளி என்னவோ பேருந்து நிலையத்திற்கு முன்பே 2 கிலோமீட்டர் தள்ளி தான்.இடியோ மழையோ பசங்களுக்கு இங்கே வந்து ஏறினால் தான் பயணம் இனிக்கும்.காரணம் பேருந்து நிலைய லாலா கடை இனிப்புகள் அல்ல.. பேருந்து நிலையத்தை அழகாக்கும் மாணவிகள்.

“என்னடா.. இன்னைக்கு அந்த சுகந்தி புள்ளய காணும்??”

“டேய்.. அவ உன்ன தாண்டா பாக்கறா”

பசங்களின் மனங்கள், பேருந்தைப் போல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஆடி அசைந்து வந்தது 3-c அரசு பேருந்து.கடையநல்லூர் வ்ழி மாணவர்கள் பாய்ந்து தொற்றிக்கொண்டார்கள். பாஸ் வண்டியாச்சே.. சிறுவர்கள் போய் இருக்கையில் அமர பெரிய பசங்க வாசல்ல தொங்கி வம்பிழுத்தபடி இருந்தனர். நடத்துனர் வழக்கம் போல உள்ளே போகும்படி எச்சரித்தார்.வழக்கம் போல பசங்களும் இந்த காதுல வாங்கி மறு காதுல வெளிய விட்டனர். அதுவும் இன்று +2 பசங்களுக்கு கடைசி நாள். பேருந்து அல்லோகல்லோலப்பட்டது. பேப்பர கிழிச்சு பறக்கவிட்டு கத்திக்கொண்டிருந்தனர்.

“சும்மாவே இவனுகளோட ஏழரை தான்.இன்னைக்கு இவனுக அடங்கமாட்டனுக..எல்லாரும் பாஸ கையில எடுத்து வச்சுக்கோங்க. பாஸு இல்லாதவங்க சில்லறய சரியா வச்சுக்கோங்க..ஏலே ராசு.. நீ பாஸு வச்சுருக்கியா?” – நடத்துனர் கத்தினார்.

“அத வச்சு இனிமே பட்டம் கூட விடமுடியாது. உங்க பஸ்ஸு சீட்டு துடைக்க வச்சுக்கோங்க”- ஈன்னு சிரிச்சபடி சொன்னான் ராசு.

நடத்துனர் திரும்பி, “முதல்ல நீ பாஸ் பண்ணு.அப்புறம் பாஸ நான் துடைக்க வாங்கிக்கறேன்” – சொல்லிவிட்டு கடந்தார்.

வேடிக்கை பார்த்த பசங்க சிரிப்பில் அதிர்ந்து சென்றது பேருந்து.அமைதியானான் ராசு.

“எப்பா சங்கரு.. இன்னைக்கோட பரிச்சை முடியுது போல? நல்லா எழுதிருக்கியா?” – நடத்துனர் அக்கறையுடன் கேட்டார்.

”இல்லனா நீங்க போய் திருத்தி பாஸ் பண்ணி விட்டுருவீரா?” – ராசு நக்கலடித்தான்.

“எலேய்.. நீ மட்டும் பாரு.. என் பஸ்ஸுல காலத்துக்கும் பாஸுல தான் போக போற.” – நடத்துனர் சொல்ல மீண்டும் அதிர்ந்தது பேருந்து.அவர்கள் பஞ்சாயத்து எப்பவும் தீராது.

“ நல்லா எழுதிருக்கேண்ணே.. எப்படியும் என்ஜினியர் சீட்டு கெடச்சிடும்”

“இது புள்ள.. உங்கூட சுத்துது பாரு.. ஒண்ணும் உருப்படறதுக்கு இல்ல” – பொரிந்தவாறு சென்றார் நடத்துனர்.

மழை குறைந்து மெதுவாய் தூறிக்கொண்டிருந்தது. பேருந்து, 7th டே பள்ளி நிறுத்தத்தில் நின்றது. சங்கரின் கண்கள் வழக்கம் போல் அகல்யாவைத் தேடியது.இதோ இரட்டை ஜடையுமாய், அதில் ஒரு பக்கத்தில் மல்லிகைப்பூவுமாய் அகல் விளக்கைப்போல் நின்று கொண்டிருக்கிறாள். அகல்யா சங்கரின் சொந்த அத்தைப்பெண்.மொத்த உரிமை உள்ள ஒரே முறைப்பெண்.அகல்யா என்றால் சங்கருக்கு ரொம்ப இஷ்டம்.சிறுவயதிலிருந்து இயல்பாய் உரிமையில் வந்த ஒரு தலைப்பட்ச காதல்.இன்னும் சொல்லாமல் பொத்தி வைத்திருக்கிறான். அவனது மாமா பெரிய பணக்காரர்.அது தான் அவள் மெட்ரிக்கில் பத்தாவது படிக்கிறாள்.அவன் தன் வசதிக்கேற்ப அரசு பள்ளியில் படிக்கிறான்.சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அகல்யா இந்த பேருந்தில் ஏற மாட்டாள்.அவளுக்கு அதற்கும் அவசியமும் இல்லை.தனியார் சொகுசு பேருந்தில் தான் வருவாள். நிறுத்தத்தில், எதிரில், ஊரில் எங்கு பார்த்தாலும் சின்ன சிரிப்பு கூட இருக்காது அவளிடம். சங்கர் தன் காதலை பொத்தி வைத்திருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.இன்றும் பார்க்கிறாள் ஆனால் சிரிப்பு இல்லை.சங்கரின் கூட்டாளிகளுக்கு அவனது அத்தைப்பெண்ணை தெரியும் அவனது காதல் தெரியாது.நிறுத்தத்தில் அவள் நின்றிருந்தால் "சங்கரு" என்று கத்துவார்கள். அவன் எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை இந்த பசங்க.

அகல்யா மெதுவாய் நடந்து இவர்கள் பேருந்தை நெருங்கினாள்.அனைவரும் அமைதியானார்கள்.பேருந்தில் ஏறி உள்ளே சென்றுவிட்டாள்.

"என்னடா மாப்ள.. உன் மொறப்பொண்ணு மொரச்சுட்டே இதுல வருது??" - சிவம் கேட்டான்.

"தெரிலடா.. மழை வரதுக்குள்ள இதுல போய்டலாம்னு நெனச்சுருப்பா" - சங்கர் சொல்லிவிட்டு பார்வையை வெளியில் விட்டான். 'இந்த பசங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்' - மனதுள் சிரித்துக்கொண்டான்.

நீலநிற சுரிதார், காலில் விலை உயர்ந்த செருப்பு, அவளது நிறம் - அந்த பேருந்தில் அந்நியமாய்த் தெரிந்தாள் அகல்யா. பயணச்சீட்டு வாங்கிவிட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

சங்கரின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். 'ஏன் என்றுமில்லாமல் இன்று இதில் ஏறினாள்.? என்னைப்பார்க்க இருக்குமோ??' - சிரித்துக்கொண்டான்.மெதுவாய் திரும்பி பார்த்தான்.முன்னிருக்கையின் பின்னாடி காம்பசால் எதோ கிறுக்கிக்கொண்டிருந்தாள்.அவ்வளவு தான்.படபடத்து போய்விட்டான்.

'என்ன கிறுக்குகிறாள்?' என்று யோசிக்கும் போதே, பசங்க பார்த்துவிட்டார்கள்.

"பேருந்து அரசு சொத்து.உங்கள் சொத்தல்ல." - கத்தினார்கள்.

"உன் பேர் சொல்ல ஆசை தான்.. உள்ளம் உருக ஆசை தான்" - முடிவே பண்ணிவிட்டார்கள். அவள் மெதுவாய் திரும்பி முறைத்தாள்.

"மாப்ள..முறைக்குதுடா.." - அமைதியானார்கள்.

ஆனால் ராசு விடவில்லை.

"26 எழுத்து படிக்கிற உங்களுக்கே இவ்வளவு ஏத்தம் இருந்தா 247 எழுத்து படிக்கற எங்களுக்கு எவ்ளோ ஏத்தம் இருக்கும்??" - கொஞ்சம் அதிகமாகவே கத்தினான்.

"மச்சான்.. எங்கயோ போய்ட்டடா.. நீ பாசாகிடுவ" - பக்கத்திலிருந்த சிவம் சிரித்தபடி சொன்னான்.

"அடங்குங்கடா" - சங்கர் அவர்களைக் கட்டுப்படுத்தினான்.

சொக்கம்பட்டியில் ராசு,சிவம் இறங்கிக்கொள்ள, பேருந்து அமைதியானது.சங்கரும் பின்னாடி ஒரு சீட்டில் அமர்ந்து அகல்யாவைப் பார்த்தான். தூறலை விரல்களால் அளைந்து கொண்டிருந்தாள்.ரசித்துக்கொண்டிருந்தான் சங்கர். கைகளை உள்ளிழுத்து துடைத்துக்கொண்டு, கையில் ஒரு காகிதத்தோடு எழுந்தாள்.இவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இவனை நோக்கி தான் வருகிறாள்.இவன், என்னவென்று கண்களால் வினவ, காகிதத்தை நீட்டினாள்.

'என்னது இது?? நான் செய்ய வேண்டியது இவள் செய்கிறாள்?' - குழம்பினாலும், மனதில் பட்டாம்பூச்சி பறக்க வாங்கிக்கொண்டான்.

'என்னது?" - என்று கேட்கும் முன் அவள் அவள் இருக்கையில் இருந்தாள். மீண்டும் தூறல். மீண்டும் விரல்கள்.

இவன் ஆசையுடன் வேகமாய்ப் பிரித்தான்.இடி இறங்கியது.பேருந்தில் இல்லை, இவன் மனதில்.

"உன்னுடன் இருக்கும் சுப்ரமணியனை விரும்புகிறேன்.நீ தான் உதவி செய்யணும்." - என்று எழுதப்பட்டிருந்தது. எதோ ஒன்று வேகமாய் நழுவியது.ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. அமைதியாய் இருந்தான்.

'இது தெரிந்து தான் எனக்காக நீ அழுகிறாயா மழையே??' - கண்கள் பனித்தது.

திரும்பவும் படித்தான். 'எந்த சுப்ரமனியான இவ சொல்றா???' - குழம்பியபடி மெல்ல எழுந்தான். அவளது பின்னிருக்கையில் அமர்ந்தான்.

"அகல்யா" - அழாமல் அழைத்தான். எனினும், கண்ணீர் தேங்கியதை அவனால் தடுக்க முடியவில்லை.கொட்டிவிடாமல் உள்ளிழுத்துக்கொண்டான்.

அவள் திரும்பினாள். ஆனால் தலை குனிந்து இருந்தாள்.

"யார் இந்த சுப்பிரமணியன்?"

"தெரிலையா?? " - மெதுவாய் குரல் வெளிவந்தது.

"இல்ல.."

நிமிர்ந்தாள்.."உன் கண் ஏன் கலங்கி இருக்கு??"

"ஒண்ணும் இல்ல.. நீ சொல்லு.. யாரு இவன்?? எந்த ஊர்?? "

"நீ ஏன் அழற??" அத முதல்ல சொல்லு.. "

அவன் வெளியில் வெறித்துப்பார்த்தான்... 'என்ன சொல்ல?? நான் உன்னை விரும்பினேன் என்றா??'

"நீ என்ன விரும்பறயா??"

திடுக்கிட்டு பார்த்தான் சங்கர்.. ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தான்.

நெடுநேர மௌனம்.. பின் அவளே பேசினாள்..

"அது உன் பேர் கூட ஓட்டிட்டு இருக்கற சங்கர சுப்பிரமணியன் தான்.."

சடக்கென்று தலை உயர்த்தினான். நிறுத்தம் அருகில் வர, "நீ என்ன விரும்பறயான்னு தெரில.. அதுக்காகத்தான் அப்படி பண்ணேன்.. அப்புறம், நீ பாட்டுக்கு அடுத்த வருடம் காலேஜ் போய் அங்க யாரையாவது விரும்பிறகூடாதில்ல..." என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

முன்னிருக்கையில் அவள் கிறுக்கியிருந்த 'சங்கர்'யில் அவளது காதல் சொல்லிப்போயிருந்தாள்.

என் சிலமணிநேர காதல்..

மேகாத்து கொஞ்சம் மெதுவா வீசிட்டிருந்தது.ஆத்தா ரெம்ப களச்சு போயிருந்தா.பாக்கவே பரிதாபமா இருந்துச்சு.காடு கரயில கருமாயப்பட்டு எனக்கும் சேத்து உழச்சு உழச்சு தேஞ்சு போயிட்டா. ஆத்தாவுக்கு நான்னா ரொம்ப உசிரு.என்ன கொஞ்ச நேரம் காணும்னாலும் தவிச்சு போயிடுவா.என் வயசு பிள்ளககிட்ட பேசிட்டு தாமசித்து வீட்டுக்கு வந்தா, 'ஊர சுத்தின நடக்கறதே வேற’னு தலையில செல்லமா கொட்டி மெரட்டுவா.ஆத்தாவுக்கு நான் வீட்டுலயே இருந்தா தான் நிம்மதி.

மேலூரு நிறுத்தத்துல ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோம்.இதோ மினிபஸ்ஸு வந்துட்டு. நான் வேகமா ஏறிட்டேன்.எனக்கப்புறம் ஆத்தா கஷ்டப்பட்டு ஏறுனா. பஸ்ஸுல வியாழக்கிழம சந்தக்கூட்டம்.யாரோ ஒரு புண்ணியவதி தடுமாறுன ஆத்தாவுக்கு இடம் கொடுத்தா.டிரைவருக்கு பின்னாடி சீட்ல மெதுவா உக்காந்துகிட்டு,என்ன அவ பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டா. நானும் வசதியா அவ பக்கத்துல நின்னுக்கிட்டேன்.

மினிபஸ்ஸு எங்க ஊரு மேடு பள்ளத்துல ஏறி இறங்கி மெதுவா ஊர்ந்து போக ஆரம்பிச்சது.எதேச்சையா திரும்பினா கொஞ்சம் பக்கத்துல ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருந்தான். நான் வெசனப்பட்டு திரும்பிக்கிட்டேன்.கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா,அப்பவும் என்னயே பாத்துட்டு இருந்தான்..வச்ச பார்வைய எடுக்கவே இல்ல.திமிரா பாத்துட்டே இருந்தான்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.ஆத்தா பக்கம் தலைய திருப்பிக்கிட்டேன்.ஆத்தா அவ பாட்டுக்கு நிம்மதியா வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தா.

கண்டக்டர் வந்து டிக்கட் எடுக்க சொன்னாரு.ஆத்தா எடுத்துட்டு திரும்பிக்கிட்டா.அவர் கூட்டத்த உள்ள தள்ள அவன் இன்னும் கொஞ்சம் பக்கதுல நின்னான்.இன்னும் பாத்துட்டு இருந்தான். நான் அப்போ அப்போ திரும்பி பாத்துக்கிட்டேன்.

கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாச்சு.இன்னும் கொஞ்சம் தைரியத்த வரவழச்சுட்டு மெதுவா திரும்பி பாத்தேன்.இன்னும் என்னயவே பாத்துட்டு இருந்தான்.’என்னடா இது வம்பா போச்சு’னு எனக்கு லேசா எரிச்சல் வந்துச்சு.எரிச்சல் வந்தாலும் அவன பாக்கறத என்னால தவிர்க்க முடில. கொஞ்சம் உயரம் கூட.கருப்பா இருந்தாலும் களயா இருந்தான்.கண்கள்? அத என்னால பாக்க முடில.அவ்ளோ காதல் தேங்கி இருந்தது.இந்த பயலுகலே இப்படித்தான்.முத தடவ பாத்தாலும் வச்ச கண்ணு வாங்காம பாக்கறதே பொழப்பா போச்சு. நான் வெடுக்குனு திரும்பி ஆத்தாவ ஒட்டிக்கிட்டு போய் நின்னுக்கிட்டேன்.

மனசுக்குள்ள எதோ நழுவுற மாதிரியும்,அழுத்தமா இருக்கற மாதிரியும்,பறக்கற மாதிரியும் இருக்கு.இவன இதுக்கு முன்னாடி இந்த பக்கம் பாத்ததே இல்லயே. நானும் எத்தனையோ தடவ ஆசுப்பத்திரிக்கு ஆத்தா கூட போயிருக்கேன்.இவன பாத்ததேயில்லயே.வெளியூர்க்காரனா இருப்பானோ?மனம் அவனையே சுத்தி சுத்தி வந்துச்சு.திரும்பி பாக்கலாமா? என்னறியாம திரும்பி பாத்தேன்.அடப்பாவி என்ன தான் இன்னும் பாத்துட்டு இருக்கான்.கொழுப்பு தான்.ஆனாலும் பாக்கறதோட நிறுத்திக்கிட்டான்.இல்லனா ஆத்தா மினி பஸ்ஸுனு கூட பாக்காம சாமி ஆடிடும்.

அதிக தூரம் கடந்து இருந்தது மினிபஸ்ஸு.அவன் இப்போ என்ன செய்யறான்னு பாக்கணும்னு தோணுச்சு.திரும்பினேன்.இப்போ அவன் எதோ சொல்ல துடிக்கற மாதிரி இருந்துச்சு.படபடனு அடிச்சுக்குச்சு மனசு.இனிமே திரும்பவே கூடாதுனு முடிவு பண்ணி ஆத்தாவுக்கு முன்னாடி போய் நின்னுக்கிட்டேன்.

அவன பத்தியே நெனச்சுட்டு இருந்ததுல இறங்க வேண்டிய இடத்த நான் கவனிக்கல. ஆத்தா தான் தட தடனு எழும்பி என்ன தரதரனு இழுத்துட்டு வேகமா கீழ இறங்குச்சு.அவன கடந்து கீழ இறங்கும் போது மெதுவா என்னமோ சொன்னான்.வேக வேகமா இறங்கினதுல காதுல விழல.இறங்கி நடந்து திரும்பி பாத்தேன்.அவன் கிட்டத்தட்ட வாசல்ல வந்து நின்னு கத்தினான்.”மேஏஏஏஏஏஏஏஏஎ……………….”…………

அந்த குரல்ல அத்தனை காதல் இருந்தது.வெகு தூரம் போன பின்னும் காதில் ரீங்காரமிட்டது அந்த குரல்.உங்க காதுல அது ரீங்காரமிடுதா?

காதல் பயணங்கள்

ன்றும் நிரம்பி வழியும் நெல்லையின் புதிய பேருந்து நிலையம் அன்று ஆர்ப்பாட்டமின்றி ஆறுதலாயிருந்தது.தென்காசிக்கு கிளம்பத் தயாராய் எப்பொழுதும் இரண்டு மூன்று பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணியாய் நிற்கும்.அன்று கூட்டமில்லாததால் காலியாயிருந்த பேருந்தில் ஏறியமர்ந்தேன்.அடுத்தடுத்து ஏறி வரும் மனிதர்கள் எப்பொழுதும் தனி இருக்கைகளையே விரும்பினர்.என் பக்கத்து இருக்கை இன்னும் காலியாக இருந்தது.சன்னலின் வழியே கண்களை சுழட்டினேன்.எத்தனை மனிதர்கள்?? தன்னைக் கடந்து செல்வோரிடம் சில புன்னகைகள், சில வருத்தங்கள், சில சங்கடங்கள் சிந்திச் சென்றனர்.

பேருந்து கிளம்பத் தயாரான கடைசி நிமிடங்களில் என்னருகில் இருந்த காலி இருக்கை நிரப்பப்பட்டது.ஓடி வந்து ஏறியமர்ந்தது ஒரு பெண்.அவளை அடுத்து ஓடிவந்து ஏறினான் ஒரு பையன்.ஏறியபின் அவன் அவளைப்பார்த்து சிரித்தான்.அவள் அவனைப்பார்த்து சிரித்தாள்.’ஆகா… கச்சேரி ஆரம்பிக்கபோகுது”என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் நான்.

பேருந்து நகர ஆரம்பித்தது.தென்காசி நோக்கிய சாலையில் வேகமெடுத்தது.மாலையின் மெல்லிய தென்றலோடும் பேருந்தில் வழிந்த பாடலோடும் பயணிக்க ஆரம்பித்தோம். நான் அதோடு கச்சேரியையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.இவ்வாறு அமையும் பயணங்கள் எவ்வளவு சுவாரசியமானவை?? காத்திருந்தேன்.

அவன் தான் பேச ஆரம்பித்தான்.

“எக்ஸாம் எப்படிடி எழுதிருக்க??” – ‘ஆரம்பமே ’டி’யில் இருக்கே?’

“ஏதோ எழுதிருக்கேன்டா.. பயமா இருக்கு” – அந்த “டா”வில் அதிக உரிமை தெரிந்தது.

“டா போட்டுக் கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..”

“அப்படித்தான்டா டா போட்டுக் கூப்பிடுவேன்.. நீ மட்டும் டீ போடலாம்.. நான் போடக்கூடாதா” – ‘அதானே?? ஆனாலும் சரியான வாயாடியா இருப்பாளோ?’

“உன்ன திருத்த முடியாதுடி.மொபைல்க்கு ரெஸ்ட் கொடுக்காம மூளைக்கு ரெஸ்ட் கொடுத்தா ரிசல்ட் பத்தி பயப்படத்தான் செய்யனும்”

“அய்யோடா.அத நீ சொல்லாதடா”

“ஐயா படிச்சு முடிச்சாச்சு. இப்போ வேலை வேற பாக்கறேன்.நான் மொபைல் வச்சிருக்கறதுக்கு நூறு சதவிகிதம் உரிமை இருக்கும்மா” – அந்த “ம்மா” வில் இன்னும் அதிகம் உரிமை கொடுத்தான்.

அவள் முறைத்தாள். “என்னால மொபைல் இல்லாம இருக்க முடியாதுடா. ஹாஸ்டல்ல இது ஒண்ணு தான் டைம் பாஸ். அப்புறம் அது இருந்தாதேனே உன்கிட்ட பேசமுடியும்??”

“இதையே காரணம் சொல்லு” - அவன் சிரித்தான்.

அவர்கள் என்னென்னவோ பேச என்னுடைய காதல் கண்முன் நிழலாடியது.இதைப்போலொரு பயணத்தில் தான் அவனை சந்தித்தேன்.வேகமாய் ஒடிவந்து யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் என் பக்கத்து இருக்கையில் நிரம்பினான். நான் முழித்தேன்.ஆசுவாசப்படுத்தி மெதுவாய் திரும்பி பின் அதிர்ந்து எழுந்தான்.

“மன்னிச்சிடுங்க. நான் பாக்காம உக்காந்துட்டேன்.” – படபடப்பாய் வெளிவந்தன வார்த்தைகள். என்ன சொல்வதென்று தெரியாமல் மண்டையை ஆட்டிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டேன்.முதல் சந்திப்பு இப்பவும் புன்னைகைக்க வைக்கிறது.

மறுநாள் அதே இருக்கையில் நான்.ஆனால் அவன் சுதாரித்துக்கொண்டான்.மெலிதாய் புன்னகைத்தான். கூடவே நானும். புன்னகைகள் அறிமுகமாகி காதலாய் வளர்ந்தது.அந்த பயணங்கள் மறக்க முடியாதவை.எங்கள் காதல் வளர்த்த பயணங்கள் அவை.

திடீரென்று அந்த பெண் அவன் தலையில் நோட்டால் அடிக்க, என் கவனம் சிதறியது.

“சொல்லுடா..வீட்டுக்கு எப்போ வர??”

“வீட்டுக்கா?? விளையாடறியா?? உங்க அப்பாவ பாத்தாலே பயமா இருக்கு”

“இப்படி பயந்துட்டே இரு.என்னைக்கு தான் நீ திருந்த போறியோ? நான் வேணா அப்பா கிட்ட பேசவா??”

“வேணாம் வேணாம்.பிரச்சனையாகிடும்.கொஞ்ச நாள் போகட்டும்.பாக்கலாம்.சரி,தம்பி, தங்கச்சிலாம் எப்படி படிக்கறாங்க?”

“படிக்கறாங்க. நான் வேலைக்கு போனா தான் அவங்கள அடுத்தடுத்து காலேஜ்க்கு அனுப்ப முடியும்.லோன் வேற இருக்கு. நீ சென்னைல உன் கம்பெனிலயே எனக்கு ஒரு வேலை பாருடா”

“ நானாடி கம்பெனி நடத்தறேன்?? பாக்கலாம். நான் இருக்கேன்ல. கவலைப்படாத”

“ டேய்.. நான் சென்னை வந்தா என்ன வெளில கூப்பிட்டு போவியா??

பீச், தீம் பார்க்?? அதெல்லாம் நான் பார்த்தே இல்லடா”

முறைத்தான்.

“ஊர் சுத்தறதுலயே இரு” – ‘என்ன பையன் இவ்ளோ கறாரா இருக்கான். நல்ல பையன் போலருக்கு. ‘

புன்னகைத்தேன். நல்ல காதல் ஜோடிகள்.பார்க்கவே சந்தோசமாயிருந்தது.

“சரி சரி.. புலம்பாதடா. எனக்கு கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் பண்ணனும். நினைவுல இருக்கா?” – அவள்.

அவன் வாய்விட்டு சிரித்தான்.

“ நீ பண்ண போற ப்ராஜக்ட்ட நான் ஏன் ஞாபகத்துல வச்சுக்கனும்?”

இப்போ அவள் முறைத்தாள்.

” நீ தானடா நான் பாத்துக்கறேனு சொன்ன?? நீ எப்பவும் இப்படித்தான்டா.. நம்பினா காலைவாரி விடற..”

"இவ்ளோ வாய் பேசறல?? நீயே எங்கயாவது போய் பண்ணு"

"அப்போ நீ ஹெல்ப் பண்ண மாட்ட??"

"எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் பாக்க எனக்கு நேரம் இல்ல. நான் அடுத்த வாரம் டெல்லி வேற போகணும்"

"ஏன் அங்க யாரையாவது செட் பணி வச்சுருக்கியா??"

"அடிப்பாவி.. உன் புத்தி உன்னைவிட்டு போகாதே? சரி சரி.. நீ இப்போ புலம்பாத.. நான் இருக்கேன்ல.. பாத்துக்கறேன்.. ”

அவள் சிரித்தாள்.

“குட் பாய்”

“இந்த சர்டிபிகேட்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” – அவனும் சிரித்தான்.

நான் மெலிதாய் புன்னகைத்தேன். எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்? அவனும் கூட இப்படித்தானே நம்பிக்கையூட்டினான்?? உனக்கு நான் இருக்கிறேனென்று.ஆனால் நடந்தது வேறு.

சோதிடம் காரணமாய் எங்கள் காதல் பயணத்தை கல்யாணத்தில் முடிக்க அவன் சொன்னபோது எனக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டது என் தம்பிக்காகவும், தங்கைகளுக்காகவும்.அவ்வருடங்கள் வரை பொறுக்க அவன் சாதகமும் சாதகமாயில்லை குடும்பமும் சம்மதிக்கவில்லை.இன்று அவன் இன்னொருவளின் கணவன். நான் அவனின் முன்னாள் காதலி.தம்பி, தங்கைகள் தங்கள் வழிகளைத் தேடி அவர்கள் வழித்துணையுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நான் காதோரம் நரைத்த தலைமுடியுடன் இப்படி காதல்கள் பார்த்தவாறு தனியாய் பயணிக்கிறேன்.

பேருந்து தென்காசிக்குள் நுழைந்தது.அவர்கள் கிளம்பத் தயாராயினர். குடும்பச்சுமையுடன் உன் காதலையும் காப்பாற்றிக்கொள் என்று அறிவுறுத்த திரும்பினேன்.இன்னும் பேச்சு நின்ற பாடில்லை.

“ நீயும் வீட்டுக்கு வரியாடா?” – சிரிப்புடன் கேட்டாள் அவள்.

முறைத்த அவன்,”டா டானு கூப்பிடாதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்.இனிமே கூப்பிட்டா தங்கச்சினு கூட பாக்க மாடேன்.பளார்னு ஒண்ணு வைப்பேன்.முதல்ல சித்திக்கிட்ட சொல்லி உன் வாய குறைக்க சொல்லனும்”

“குடும்ப சண்டைல எங்க அப்பாகிட்ட பேசலனா என் அம்மாகிட்டயும் பேசக்கூடாதுடா இடியட் அண்ணா”

முழித்தேன்.’அடக் கடவுளே?? என்ன வேலை பார்க்க போனேன்??’ சட்டென்று சிரித்துவிட்டேன். மெதுவாய் திரும்பிய அந்த பெண் வித்தியாசமாய்ப்பார்த்தாள். இருந்தாலும் புன்னகைத்தவாறு இறங்கினேன்.

ஒவ்வொரு பயணத்திலும் என்னோடு என் காதலும் இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை என் காதலைப்போல.

நடந்தபடியே திரும்பிப் பார்தேன். அந்த அண்ணன் அவள் தங்கைக்கு பேக்கரியில் ஏதோ வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.