Wednesday, April 21, 2010

போர்க்களச் சூழல்.

நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..

மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..

சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..

மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..

ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..

Monday, April 12, 2010

ஊமைக்காயம்..

கழிவுகள் ஒதுக்கும்
துப்புரவுத் தொழிலாளியின்
ஸ்பரிச நிராகரிப்பின் வலி
முழுமையாய் படர்கிறது
பேருந்து நிலைய மூலைகளில்..
காயங்களைக் கூர்தீட்டுகின்றன
ஈர்க்குச்சிகளின் முகாரியும்,
வாளிகளின் கண்ணீரும்..


(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "ஆழமான கண்ணீர்" தாங்கிய கவிதை..

இருக்கா?? கண்ணீர்??)

புன்னகையெறிதல்..

வெளிவாயிற் கதவின்
கம்பியிடுக்குகள் வழியே
நாயொன்றிற்கு
எறியப்படும் ஒரு பிஸ்கட்டில்
பரிமாறப்படுகிறது,
சிறுவனுக்கும்
பிச்சை மறுக்கப்பட்ட
கிழவனுக்குமான முகவரி..

(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "அழகிய புன்னகை" தாங்கிய கவிதை..

இருக்கா?? புன்னகை??)

சுதியேறும் புல்லாங்குழல் இசை..

பேருந்து நிலையத்தின்
ஓரச் சந்துகளில் வழியும்
குருட்டுக்கிழவனின்
புல்லாங்குழல் இசையில்,
சுதியைக் கூட்டுகிறது
அவன்
அலுமினியத் தட்டில்
சிதறும் சில்லறைகள்..

Friday, April 2, 2010

வெற்று வெளியிலாடும் பூவின் விரல்கள்..

பயண நீட்சியின்
வெப்ப ஸ்பரிசத்தில்,
விரல்கள்
சுற்றிக் கொண்டேன்
முகம் காட்டாதவொரு
பூவின் கைகளோடு..

அப்பூவிற்கும்
தேவையாயிருக்கவில்லை
என் முகவரி..

வியர்வையின் குளுமையே
போதுமானதாயிருந்தது..

விளையாட்டுப்
பொருளானது விரல்கள்..

இழுவையோ ..
அழுத்தமோ..
எச்சிலோ..
விரல்கள் சிரித்தன..

ஸ்பரிசங்கள் தூரமாயின
நிறுத்தத்தின்
அருகாமையில்..

இறங்கிச்செல்லும்
கடைசி தருணத்தில்
நெருடுகின்றன,
வெற்று வெளியில்
இன்னும்
பற்றுதலுக்கான
தேடல் கொண்டிருக்கும்
அந்த பூவின் விரல்கள்..