Monday, November 28, 2011

காதற்காலங்கள்..

பகலில் நீயென் பக்கமில்லை
அதனால் பகலென் விருப்பமில்லை.
இரவில் நீயென் இமைகளில்லை
அதனால் இரவுமென் இஷ்டமில்லை.
நீ என்னிடம் வரும் பொழுதென்ன?
நிலவைக் கொண்டுவரும் அந்திநேரமா?
பனித்துளியைக் கொண்டுவரும் அதிகாலையா?
பதில் சொல்லியனுப்புவாயா?

சூரியக்கதிர்களில் அஞ்சல் அனுப்பியிருப்பாயென்று
உத்திரக்கண்ணாடியில் உற்றுப் பார்க்கிறேன்.
வற்றியகிணற்றினடியில் கடிதம் வைத்திருப்பாயென்று
காக்கையைப்போல் கற்கலெறிந்து முயற்சிக்கிறேன்.
வெப்பத்துகள்களில் வியர்வைத்துளி நனைத்திருப்பாயென்று
காய்ந்த குட்டைகளில் தேடித்திரிகிறேன்.
பின், சுடும்பாறையிலும் வெடித்த நிலங்களிலும்
எழுதியிருந்தாய் ஒரு சொல்.
அதிலுன் தீண்டலொன்று மிச்சமிருந்தது.

காற்றில் காகிதம் கலந்திருப்பாயென்று
மரங்களோடு ஒற்றைக்காலில் தவமிருக்கிறேன்.
முகிலோடு செய்தி சொல்லியிருப்பாயென்று
கார்மேகங்கள் வாய்திறக்க எதிர்நோக்கியிருக்கிறேன்.
வானத்தின் வழியாய் தூதனுப்புவாயென்று
மழையின் முதற்துளிக்காய் காத்திருக்கிறேன்.
பின், தூறலோடும் குளிர் தென்றலோடும்
கொடுத்திருந்தாய் ஒருவோலை.
அதிலுன் முத்தமொன்று மிச்சமிருந்தது.

வெயிலோடு சிறு அனலும்
மழையோடு சிறு எச்சிலுமென
கலந்திருக்கிறது உன் காதல்.
இங்கே பகலெல்லாம் மழை.
இரவெல்லாம் அனல்.

Wednesday, November 23, 2011

நான், அவன் மற்றும் நிலா

என்னிலிருந்து நிலவுக்கும் அவனுக்குமான
இடைவெளியில் அதிக வேற்றுமையொன்றுமில்லை.
என் கேள்விகளுக்கான பதில்களில்
அவனைப்போலவே நிலவிலும் மௌனம்.
என் கேவல்களின் தேற்றலில்
நிலவைப்போலவே அவனிலும் பொறுமை.
எனினும் நான் நிலவோடு பேசும்போதும்
அவனோடு கொஞ்சும்போதும் ஒருவருக்கொருவர் குறுக்கிடுவதில்லை.
சில நேரங்களில் நிலவில் ஆறுதல்களும்
அவனில் பதில்களும் கிடைப்பதுண்டு.
என்றோவொரு நாள் நிலவு மட்டும் மிச்சமிருக்கும்
எனக்கும் அவனுக்குமான இடைவெளியில்.
இடைவெளியின் அளவு பூஜ்யமாகவும் முடிவிலியாகவும் இருக்கலாம்.

நிலவின் பிம்பங்கள்

நிலவைப்பற்றிய நினைவுகளென்றால் அவளுக்கு பெரும்பயம்.
அதனளவு உருண்டை வாயில் திணிக்கப்படும் என்பதாய் இருக்கலாம்.
அங்கே கொண்டுபோய் விட்டுவிடுவேனென்பதாய் இருக்கலாம்.
நினைத்தால் வீடுதிரும்ப இயலாதென்பதாய் இருக்கலாம்.
அவளது பொம்மையும் செப்புச்சாமனும் அங்கில்லாதமையால் இருக்கலாம்.
அதனைச் சூழ்ந்த இரவுக்கம்பளியின் கிழிசலும் கருமையுமாய் இருக்கலாம்.
அதனுள் ஓய்வெடுக்கும் சூனியக்கிழவியின் உருவமாய் இருக்கலாம்.
ஆர்ம்ஸ்ட்ராங் கூட தங்கமுடியாத தனிமையாய் இருக்கலாம்.
இவையெதையும் காரணங்களாய் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னெதுவென நீங்கள் நினைக்கிறீர்கள்?

அன்பின் அளவுகோல்

உன் கனவுகள் மிக அடர்த்தியானது.
அதனுள்ளிருக்கும் நினைவுப்படிமங்கள் முழுதும்
என் பெயரெழுதிச் செல்லும் வழிதேடியலைகிறேன்.
கள்ளிச்செடியின் பாற் கொண்டெழுதியும்
கற்களின் கூர்நுனி கொண்டெழுதியும்
படிமங்கள் கீறுகிறேன்.
இன்னும் இளகாத படிமங்கள் மீது
விரல்களின் குருதி கொண்டெழுதியும் பார்க்கிறேன்.
இன்னும் இறுகிப்போகும் படிமங்கள் மீது
இரும்பின் இளஞ்சூடு கொண்டெழுதியபோது
கூழாகிப்போகின்றன கனவின் அனைத்துப்படிமங்களும்.
கரைந்தோடும் நேரத்தில் அவசரமாய் தேடுகிறேன்,
மருந்துச்சாறின் வலிமையையும் மயிலிறகின் மென்மையையும்..

Thursday, November 10, 2011

அவளும் சிறகுகளும்..

சிறகுகள் சேகரிப்பதென்றால் கொள்ளைப்பிரியம் அவளுக்கு..
ஊர் சுற்றி, காடு கடந்து அள்ளிவருவாள் சிறகுகளை..
அவளிடம் அதிக வண்ணங்களில் சிறகுகளிருந்தது.
சிகப்பு, மஞ்சள், வெள்ளை, காப்பி நிறங்கள் கலந்த
சிறகொன்றை அவள் மிகப்பத்திரமாய் வைத்திருந்தாள்.
வானின் நீலம் கொண்ட சிறகை
மேகங்களுக்குள் புகுத்தி இன்னும் நீலமெடுத்துக்கொள்வாள்.
அச்சிறகைத் தொலைத்த நாளிலொன்றில்
உணவிலும் என்னிலும் சமாதானமாகவேயில்லை அவள்.
அவைகளை புத்தகங்களில் புதைத்து அழகுபார்ப்பாள்
அவைகளை வருடிவிடுவதில் பாடம் மறந்திருப்பாள்..
அவளின் ஆர்வத்தில் நான் கொண்டுவந்த சிறகுகளை,
அவள் எடுத்துக்கொண்டதே இல்லை..
பின்னாளில் நான் உரிமைகோரக்கூடும் எனும் பயமாய் இருக்கலாம்.
எனினும் சேகரித்த சிறகுகளைப் பார்வையிடமட்டும் அனுமதித்திருந்தாள்.
சிறகுகள் குறித்த என் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்
இலக்கணமும் உரைநடையும் தொலைத்திருப்பாள்.
சிறகுகளின் பறவைகளை அவளுக்கு அடையாளம் காட்டுவதில்
அவளை நான் இன்னும் நெருங்கியிருந்தேன்.
புத்தகங்களின் கூடுதல் வளர்ச்சியில் குறையத்தொடங்கியது
அவளின் ஆர்வமும் என்னிடமான நெருக்கமும்.
பக்கங்கள் அதிகமிருந்தும் சிறகுகளில்லை அவளது புத்தகங்களில்.
அவளின் குழந்தைக்கென நான்கொண்டுவந்த
நீலவண்ண ஒற்றைச்சிறகை முதன்முறையாய் எடுத்துக்கொண்டாள்
கண்ணீருடனும் மெல்லிய வெட்கத்துடனும்.