Saturday, September 12, 2009

விடியாத இரவொன்று வேண்டும்..

தனிமையான இரவில்
துணைக்கு வருகிறேனென்று
அடம்பிடித்தது கண்ணீர்..

வெறித்து நோக்கிய கண்களில்
வெற்றிடமின்றி நிரம்பிய துளிகள்
வெளியேற தொடங்கியிருந்தன..
கண்களின் உறுத்தலோ
கண்ணீரின் பாரமோ
இமைகள் சேர்ந்திருந்தது..

மொத்தமாய் வழிந்த நீர்த்துளிகள்
முகத்திலிறங்கி கன்னம் கிழித்து
தலையணையில் கோலமிட்டது..
காற்றாடியின் அதிவேக
காற்றுக்கும் காயமறுத்தது
கண்ணீரும் கோலமும்..

யாருமற்ற தனிமையில்
ஆறுதலாயிருந்தது அழுகை..
இரவிருக்கும்வரை தான்
இரகசியமாய் அழமுடியுமென்று
இமைகள் நனைக்கிறேன்..
இதமாகவே இருந்தது - என்
காயத்திற்கு கண்ணீர்..

விடியும் பொழுதில்
தூக்கம் தொலைத்திருந்தேன்..
துக்கம் குறைத்திருந்தேன்..

காத்திருக்கிறேன்..
வடுக்களில் வடியவிட
வற்றாத விழிநீருக்கும்..
விடியாத ஓர் இரவிற்கும்..

உன்னை நான் வெறுக்கிறேன்..

உயிரைத் தொட்ட வார்த்தைகளுள்
உணர்வைக்கிழித்த முதல் வார்த்தை..

கன்னத்தில் வழியும் நீரை
கேள்விக்குறியோடு நோக்கிய சிலர்..
கேட்க துணிவில்லாமல் அவர்கள்..
துடைக்க விருப்பமில்லாமல் நான்..

கதறமுடியாத இயலாமை..
காட்சிப்பொருளாய் நான்..
ஏனென்ற என் கேள்விக்கு
எனக்கே விடை தெரியவில்லை..

தனியறையில் பதுங்கி
தலை கணக்கும்வரை கதறுகிறேன்..
விரல்கள் படர கைகளுமில்லை..
வேடிக்கை பார்க்க ஆட்களுமில்லை..

இதயத்தில் ரணமாய் வார்த்தைகள்..
இமைகளில் ஆறுதலாய் கண்ணீர்..
இரவுப் பூச்சிகளின் சமாதானம்,
இதமான காற்றலைகளின் மொழிகள்,
எதுவுமே காதில் விழவில்லை
காயபடுத்திய வார்த்தைகள் தவிர..
வார்த்தைகள் உன்னுடையதென்பதால் தான்
வலியோடு வழிகிறது கண்ணீர்..

காவிரி வற்றலாம்.. என்
கண்ணீர் வற்றாது.. உன்
வார்த்தைகள் இருக்கும் வரை..

Friday, September 11, 2009

மனிதமுள்ள மதமும் கருணையுள்ள கடவுளும்....

சிறு சபையினில் துகிலுரிக்கப்பட்ட பெண்ணுக்கு
சட்டென்று தோன்றி சேலையைச் சுற்றிவிட்ட
சாரதியே , பரமாத்மாவே..
போர்க்களத்தில் பெண்மையின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டபோது
பார்த்துக்கொண்டு நின்றாயோ பார்க்கசகிக்காமல் கண்கள்மூடினாயோ??

நீ பாவிஎன்றும் நான் ஆவிஎன்றும்
பிசாசுக் கூட்டங்களாய் மனிதர்களைப் பாவித்து
பாவத்தைப் பெருக்கி பிரார்த்தனையில் சரிகட்டும்
போதனையும் புத்துயிர் தரவில்லை எம்மனிதர்களுக்கு..

பெண்களைப் போர்த்தியும் மூடியும் போற்றவேண்டுமென்று
பொந்தினுள்ளேயே அடைத்துப் பழக்கப்பட்ட பசலிகளுக்கும்
புரிந்துருக்காது, பூக்களாய்ப் பிறந்து போராளிகளான
பெண்மக்களின் துண்டாக்கப்பட்ட உடல்களும் மனங்களும்..

கலிமுற்றும் பொழுது தோன்றுவான் கடவுள்
கதைக்கும் கிழவிகளுக்கு தெரியவில்லை இன்னும்..
காலம்காலமாய் குருதியும் கண்ணீரும் பட்டுக்
காய்ந்துபோன மண்ணில் கலி களியாடிக்கொண்டிருகிறதென்று ..

கொடுமைகள் அத்தனையும் கண்டு களித்துவிட்டு
கடமையேஎன்று கோயிலில் ஆட்டும் மணிகளுக்கு
மண்டையை ஆட்டிவிட்டு மறந்துவிடாதே மனிதத்தை..

கடவுளை மறுப்பதால் மனிதமற்றவன் என்பதாகிவிடாது
மனிதர்களை மறப்பதால் கடவுள்தன்மை வந்துவிடாது..
இடித்து வைக்கப்பட்டவன் இறுக்கமாகவே இருப்பான்
இன்னுயிர்களை இன்புறச்செய்வது இவனால் இயலாது..

வந்து குதிப்பான் வானத்திலிருந்து என்று
வெட்டிப்பொழுது போக்காமல் களம் மாற்றுவோம்..
நமக்கென்று நம் நம்பிக்கைகள் தான்..
மற்றவருக்கென்று நம் மனிதம் தான்..

தமிழகத்தில் ஈழ போராட்டம்..

போராட்டம்..??
எப்படி நடக்கிறது??
எதுவரை நீடித்தது??
எதுவரை நீடிக்க முடிந்தது??

சாகும்வரை உண்ணாவிரதம் என்றவரெல்லாம்
சாத்துக்குடியும் குளுக்கோசுமாய் சமுதாயத்ததை
சாடி சத்தியசீலர்கலாய் சிவப்புக்கொடிகாட்டி
சீக்கிரமே காணாமல் போனார்கள்..

துடிப்புள்ள இளைஞர்களையும் மாணவர்களையும்
திறன்பட செலுத்தாமல் உணர்வுகளைத்
தூண்டிவிட்டு சரியாய் எரியாமல்
திசைக்கொன்றாய் திரிகிற நம் எதிர்காலங்கள்..

பேச்சுகளும் போராட்டங்களும் இதுவரை
பத்து உயிர்களை காத்தனவா??
உணர்வுகளால் கட்டுண்டு தன்னுயிர்களை
உதிரவிட்டு உறகவுகளையும் கதரவைக்கிறதுதானே??

அமெரிக்காவோ ஜப்பானோ யாரோஎவரோ
அனைவரிடத்திலும் கையெழுத்திட்டு இன்னும்
அண்ணாந்து பார்த்து கலியுகத்தில்
ஆண்டவனை எதிர் நோக்கியிருக்கிறோம்..

சரியான சட்டம் இல்லை..
சமாதனமான மக்கள் இல்லை..
சீர்படுத்தும் தலைவன் இல்லை..

ஒருமாதமோ ஒருவருடமோ கதறினோம்..
ஒவ்வொரு உயிராய் பறக்கவிட்டோம்..
பத்தி பத்தியை செய்திகளானோம்..
பாதை சரியில்லாமல் படுத்துறங்கினோம்..

எங்கே செல்கிறோம் நாம்
என்று தெரியாமலே விட்டில்பூச்சியை
நம் சகோதர சகோதரிகள்..

சிவப்பு சிநேகிதன்

சிநேகிதா..! சற்று நில்!
செவிமடுத்துக் கேள்..!
சடக்கென்று சென்றுவிடலாம் நீ
சவக்குழிநோக்கி இன்றோ நாளையோ..!
செல்லும்முன் சற்றென்னை சிந்திச்செல்..
சாகும்முன் சரித்திரம் எழுதிப்போ..!
சிந்துவது சிறிதென்றாலும்
பிரியாத இதழ்களில்
பிரியாத புன்னகையும்
இறுக்கமான இதயங்களில்
இணைப்பையும் இட்டுச்செல்..!

உதிரம் கொட்டி
உயிர் கொடுக்கும்
உன்னதமான தாய்மைக்கு
உணர்வெழுதிப் போ..

இயற்கையின் சீற்றத்தில்
இறுதிவாசலை மிதித்து
யாசகம் கேட்பவனுக்கு
பிச்சையிட்டுப் போ..

எல்லையில் போராடி
எல்லோரையும் காத்து
வீழ்ந்துபோன வீரனுக்கு
வாழ்வெழுதிப் போ..

விபத்தில் சிக்கி
விதியோடு விக்கும்
குடும்பத் தலைவனுக்கு
குருதியிட்டுப் போ..

நோயில் வாடி
நாளும் தேய்ந்து
நொடிந்த உள்ளங்களுக்கு
நம்பிக்கை தெளித்துப்போ..

வாழ்வு தொடங்கும் முன்பே
மரணம் படிக்கும் குழந்தைகளுக்கு
மனிதம் கற்பித்துப் போ..

ஊர் தெரியாத உறவுகளிடத்தும்
பெயர் புரியாத மனங்களிடத்தும்
சிறு துளிகள் சிந்தி
சிநேகம் வளர்த்துப் போ..

உன்னில் சங்கமித்த ஜீவநதி
உன்னின் உள்ளேயே சமாதியாக்கி
உயிர்கள் குலைக்க சம்மதிக்காதே..!
உயிர் மட்டுமே உனக்கு சொந்தம்..
உதிரம் உயிர்களனைத்திற்கும் சொந்தம்..
உன்னுயிர் பிரிந்தாலும்
உதிர்த்து விடப்பட்ட உடல்களுக்குள்
உறவாடிக்கொண்டிருப்பேன் உன் நினைவுகளோடு..!!!

இப்படிக்கு,
உன் சிவப்பு சிநேகிதன்..

Monday, September 7, 2009

என்னுயிர் வாங்கும் சண்ட கோ(தோ)ழிக்கு..

சேர்ந்து இருந்த காலங்களில் சற்றுவிலகி
சந்தோசமாகவே இருந்தாய் உன் நட்புகளோடு..

ஏனிப்படி என்று ஆரம்பத்தில் தேடிய
எண்ணற்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல்
இவள் இப்படித்தானென்று முடிவாய் ஏற்றுக்கொண்டேன்...

அன்று கண்டுகொள்ளாத நீ இன்று
அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறாய் நியாயப்படுத்தி..

எப்படி மறந்தாய் எல்லாவற்றையும் என்று
எனக்கு சற்றே வேடிக்கையாகத்தான் இருக்கிறது..
எனினும்,
தெரிந்தோ தெரியாமலோ நடந்த தவறுதல்களுக்கு
தெரிந்தே நான் மட்டும் காரணமாகிப்போனேன்..

உன்னின் கண்ணீர்களில் என்னை நோக்கிய
ஊசிப் பார்வைகள் உணராமல் உணர்த்தியது
நீ சிறுகுழந்தையென்றும் நான் ராட்சசியென்றும்..

பரவாயில்லை தோழியே பெயர்கள் மாற்றத்திற்குட்பட்டவைதான்..
பிள்ளைபிடிக்கிறவர்களிடம் நீ பார்த்து நடந்துகொள்..

உள்ளே எழும்பிய கண்ணீர்த்துளிகளை உதிர்த்துவிடாமல்
என் உணர்வுகளோடு உள்ளேயே அடக்குகிறேன்
நடந்தவற்றை நியாயப்படுத்துவதை நான் மாற்றிக்கொள்ளவேண்டுமென்று..

நிகழ்வுகள் மறக்கக்கூடியவைதான்
மனிதர்கள் மறக்ககூடாதவர்கள்தான்..
புரிந்து நடக்கும் காலம் தொலைவிலில்லை
பொறுத்திரு தோழி புன்னகையுடன் வருகிறேன்..

(இக்கவிதை என்னிடம் உரிமையாய் சண்டை போடும் என் தோழிக்கு சமர்ப்பணம்.. )

தோழன்..

நினைவு தெரிந்த நாட்களிலிருந்து
சேர்த்து வைத்த தோழமைகள்..

நட்புக்குடம் நிரம்பினாலும் வற்றாத
நண்பனைப்பற்றி நான்கு வார்த்தைகள்..

புரியாமல் புன்னகைத்த நட்புகளுக்கிடையில்
புன்னகையில் புரிந்த நட்பூக்கள்..

விளையாட்டுத் தனமான கோபங்களுக்கிடையில்
விழிநீர் கலங்கச்செய்த சமாதானங்கள்..

பயந்து பின்வாங்கிய பொழுதுகளில்
பொறுமையாய் போதித்த அறிவுரைகள்..

கேட்கத் தயங்கிய வேளைகளில்
கேள்விகளில்லாமல் செய்த உதவிகள்..

தேளாய்க் கொட்டிய விடங்களுக்கிடையில்
தேனாய்ப் பாராட்டிய பண்புகள்..

மிகமுக்கியமாய்,
எவ்வளவுதான் உன்னை கிண்டலடித்தாலும்
எதிர்வினையின்றி சிந்தும் சிரிப்புகள்..

என்ன சொல்ல இதற்குமேல்???
எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம்போல
என்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்,
என் என்பதைவிட எங்களின் நண்பன் சொக்கலிங்கம்..

சகோதரா, சில வரிகள் உனக்காய்..

என்தாய்க்கு மகனாய்ப் பிறக்கவில்லை..
என் கைப்பிடித்து நடைபயின்றதில்லை..

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை..
பண்டத்தில் பாதி பகிர்ந்ததில்லை..

தலையைக் கோதி விட்டதுமில்லை..
தலையில் கொட்டி ஓடியதுமில்லை..

வாழ்க்கைப் புத்தக முன்பகுதியின்
வரிகளில் உன் சுவடுகளேயில்லை..
இரண்டும் இறுதிப் பகுதியுமான
பக்கங்களில் பிள்ளையார் சுழியிட்டாய்..

நிறைய அழுது
கொஞ்சமும் சிரிக்காதவள்
நிறைய சிரித்து
கொஞ்சமும் அழுவதில்லை.. ..

எத்தனையோ மைல்கள் தாண்டி
என்னைப் பார்க்க வந்தாய்..
உன்னைப் புரிந்த நான் விலகியேயிருக்க
புரியத் தொண்டங்கியவர்கள் ஒட்டிக்கொண்டார்கள்..

என்னைத் தெரிந்தவர்கள்
உன்னைப் பார்த்துக்கொண்டது
சந்தோசமாகவே இருந்தது..
(நன்றி சொக்கா.. இதுக்காகத்தான் இந்த வரியை சேர்க்க வேண்டியதா போய்டுச்சு.. )

உனது பேச்சும்
மற்றவரின் கண்ணீரும்
கனத்து நின்றாலும்
கடமை கற்றுக் கொடுத்தாய்..

முறைத்து நின்ற முகங்கள் நேராக்கினாய்..
இறுகி இருக்கும் இதயங்கள் சீராக்கினாய்..
சுருங்கி நின்ற இதழ்கள் விரியவைத்தாய்..
கத்தலாய் உடைந்த குரல்கள் கனியவைத்தாய்..

சகோதரனாய் சண்டை போட்டாய்..
குழந்தையாய் சமாதானம் செய்தாய்..
நான்கு நாட்களில் நான்
நாலாயிர பிரபஞ்சம் மிஞ்சினேன்..
மிகையேயில்லை.. முற்றிலும் உண்மை..

பிரிகையில் எத்தனை கண்கள்
பிரியாத உறவைச் சொல்லியது
கண்ணீரைத் தாங்கி??

சிலிர்த்து நின்றேன் உன்
சிநேகம் சம்பவித்த பாதிப்பில்..

என்ன தவம் செய்தனை
இப்படியொரு தம்பி கிடைக்க??
இதுதான் தோன்றியது சட்டென்று..

பிரார்த்திக்கிறேன்.. பிரிந்து போகாத
பிள்ளையாய் உடனிருக்கவேண்டுமென்று..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..

எட்டியிருக்கும் நிலவை ரசிக்க
ஏறத்தேவையில்லை ஏணிகள்..
எட்டிப்பிடித்து நிலவைத் தொட
ஏறியே ஆகவேண்டும் ஏணிப்படிகள்..

இதுவரையிலும் நீ
ஏறிவந்த ஏணிகளில்
எத்தனை ஆணிகளோ தெரியாது..
இனியேறப் போகும் ஏணிகளிலும்
இருக்கும் ஆயிரமாயிரம் ஆணிகள்..
காற்றைப் போல் கடந்து செல்..
வலிகளைக் கடந்து கிடைக்கும்
வெற்றி இனிக்கவெ செய்யும்..
வாழ்த்துகிறேன்…

சாதாரணர்கள் ரசிப்பார்கள்..
சாதிப்பவர்கள் படைப்பார்கள்..
புதுவுலகம் படைப்பாயென்று நம்புகிறேன்..

வாழ்க்கைப் பந்தயத்தில் முதலாவதாய்
வெற்றிப்பதக்கம் பெற வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி..

பயணங்களில் தொலைத்த கவிதைகள்..

திருநெல்வேலி மாநகராட்சியின்
திறந்தவெளி பேருந்து நிலையம்...

எத்தனையெத்தனை பயணிகள்..
எத்தனையெத்தனை பயணங்கள்..
எங்கே செல்கிறது பயணங்கள்??
எதையோ யோசித்தபடி தயாராகிறேன்
என்னின் அடுத்த பயணத்திற்கு...

எப்பொழுதும் நின்றபடியே அமைகின்றன
என் நெடுங்கால பயணங்கள்..
பயணத்தில் பறக்கவிடும் கவிதைகளை
பத்திரப்படுத்துவது பலநாள் கனவெனக்கு..

கசகசத்த கூட்ட நெரிசலிலும்
காதைக் கிழிக்கும் வசவுகளிலும்
காணாமல் போய்விடுமென் கவிதைகள்..
எழுந்துவரும் எண்ணங்கள் சிலரது
எரிச்சல்களில் எங்கேயோ சிதறிவிடுகின்றன..

பசித்த குழந்தைகளின் கதறல்கள்..
பசிபோக்கவியலாத தாயின் தவிப்புகள்..

கண்டும் காணாமலும் கழிசடைகள்..
கவனித்து உதவிய மனிதங்கள்..

பெரிதாய் மோதிய பார்வைகள்..
சின்னதாய் சந்தேக சைகைகள்..

நெடுநேரமாய் வறுபடும் கடலைகள்..
நொடிப்பொழுதாய் சிந்தும் வெட்கங்கள்..

அரசியலைக் கிளறிய ஆர்வங்கள்..
ஆற்றாமையைக் கொட்டிய ஆதங்கங்கள்..

புறம்பேசி பழிதீர்க்கும் புலம்பல்கள்..
போதையில் பேதலித்த உளறல்கள்..

வெற்றிலை துப்பிய அலட்சியங்கள்..
வெறித்துப் பார்த்த மிரட்டல்கள்..

யார் யாருக்கோவான தேடல்கள்..
எவரோ கிடைத்ததற்கான நிம்மதிகள்..

பொதுவாய்க் கிடைத்த புன்னகைகள்..
புன்னைகையில் கிடைத்த புரிதல்கள்..

காட்சிகளை கவிதையாக்கவும்
உணர்வுகளை கோர்க்கவும்
நிமிடங்கள் செலவழித்து
நிதானமாய் காத்திருந்தேன்..

இருபேருந்துகளை தவறவிட்டு
இறுதியில் கிடைத்தது
சன்னலோர இருக்கை...

உயர்த்திப்பிடித்த கம்பிகளின் அடியிலும்
உணர்விழந்த கைகளின் இறுக்கத்திலும்
தேக்கி வைத்த கவித்துகள்களுக்கு
தோற்றம் கொடுக்க முனைந்தேன்..

காற்றில் கரைத்தனுப்பிய கற்பனைகளை
காட்சிப்படுத்த கண்களை மூடினேன்..

மூளைக்குள் முகவரி சிக்கியதோ??
முகத்தில் விளையாடிய காற்றில்
முற்றிலும் தொலைத்திருந்தேன் -என்
கவிதைக்கான முகவரிகளை..

என்னை மீறிய தூக்கத்தில்
என் கற்பனைகள் முடிவுற்றிருந்தன..

இயற்கையோடு ஒட்டியது என் வாழ்வு...

நிறைமாத கரு மேகங்கள்
நீரைச்சுமந்து நிலை தடுமாறிக்கொண்டிருந்தன..
எப்பொழுது பிரசவிக்க போகிறதென்று
அண்ணாந்து பார்த்தபடி நான்..

நளினமாய் நாட்டியமாடிய மரங்கள்
நீண்ட கிளைகளால் மேகங்களுக்கு
வேர்க்கட்டும் என்று விசிறிக்கொண்டிருந்தன..

பச்சை இலைகளின் வாசனையும்
மண்ணில் எழுந்த மணமும்
மழைக்குழந்தையை வரவேற்க தயாராயின..

இதோ,
இடிகள் இன்னிசை முழக்கமிடுகின்றன..
மின்னல்கள் புகைப்படம் எடுக்கின்றன..
இலைகள் மோட்சம் பெறுகின்றன..
மரங்கள் ஆனந்த தாண்டவமாடுகின்றன..

அழுதபடி வரும் குழந்தையை
ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள் நிலமகள்..

அவ்வளவுதான்..
அலுவலகத்தின் குளிரூட்டப்பட்ட கண்ணாடி
அறைகள் பனியால் திரையிடப்பட்டது..

மண்வாசனையை நுகர முடியாமலும்
இன்னிசையை கேட்க முடியாமலும்
மழையை தொட முடியாமலும்
சூழ்நிலையை உணர முடியாமலும்
பசுமையை பார்க்க முடியாமலும்
செவிடாய் குருடாய் உணர்வற்றதாய்
அறைக்குள் அமைதியாய் என்னுடல்..
அத்தனையும் அனுபவித்தபடி என்மனம்..

இப்படியே சமாதானம் செய்துகொள்கிறேன்
இயற்கையோடு ஒட்டியது என்வாழ்வென்று.....