Thursday, February 6, 2014
கொடுங்காடு..
அதொரு மிகச்சிறிய காடு..
வேரற்ற மரங்களும் இலைகளற்ற கிளைகளும்
கொண்டதொரு கொடுங்காடு..
வானமற்று காற்றுமற்று காய்ந்து போனதொரு கருங்காடு..
மரித்துப்போன அக்காட்டினை அடக்கம் செய்யவும்
இன்னுமொரு பிழைப்பிற்கான பதியமிடவும்
தேவைப்படுகிறது மற்றுமொரு காடு..
எங்கிருந்தோ பெய்த மழைமுத்தின் ஈரம்கொண்டு
துளிர்த்துவிட துடிக்கும் கருங்காட்டின் கழுத்தை நெரித்து
மேலெழும்பும் புதியகாட்டின் பல்லிலிப்பில் அடகுவைக்கப்படுகிறது புதியதொரு வாழ்வு..
நினைவுகளின் மீட்டமைப்பு..
இரவின் ஆழ் மௌனத்தைக்கொன்று கொண்டிருக்கும்
என் மடிக்கணினியின் வெளிச்சத்தில் அடிக்கடி அலுத்துக்கொள்கிறதொறு கரப்பான்பூச்சி..
அடர்ந்த பனியின் இறக்கமும் பூட்டமறந்த கதவின் கிறீச்சலும்
காய்ச்சலை அதிகப்படுத்துகிறது.
அன்றைய அரைகுறை நினைவுச்செல்களில் தேங்கிக்கிடக்கிறது
சவுக்கின் சுளீர் சாட்டையடிகளும்
மொட்டையடித்த நிலவுமொழியின் அழகும்
மற்றுமென் மதிப்பிற்குரிய நண்பர்களின்
மதத்தை தாங்கிப்பிடிக்கும் கதறல்களும்..
நிதர்சன வாழ்க்கையும் சுயமரியாதையும் சுட்டெரிக்கப்படுகிறது
சுயநலக்கோடுகளில்.
அத்தனை செல்களும் செத்துவிடுகிறது விடியலில்.
வழியும் இரத்தத்தை துடைத்தெறிந்து
காய்ச்சலுற்ற சிலிக்கானை காப்பாற்ற ஓடும் அதீத அறிவின்
அடுத்த படியில் நான். நீங்கள்?
நம்பிக்கையின் முற்றுப்புள்ளி இரவோ பகலோ
இன்னும் இரவுகளுண்டு.. பகல்களுமுண்டு..
நிலவுத் தேடல்..
நிலவைப்பார்த்து வெகுநாட்களாயிற்று..
பார்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறது நேரம்..
நாய்களின் இடைவிடாத ஊளைகள் எதிரொலிக்கும் இரண்டாம் சாமத்தில்
நேற்றைய பகலின் அமானுஷ்ய விவாதத்தில் குறிப்பெடுத்துக்கொண்ட
நாய்களின் ஊளைகள் இப்பொழுது ஒத்துப்போகிறது.
தொண்டை வலித்ததோ ஆவிகள் விடைபெற்றதோ
திடீர் நிசப்தம் காதில் பேரிரைச்சலைக் கிளப்பியது.
பின்கதவின் சாவித்துவாரத்தில் நிலவுக்கான ஏக்கம் கண்டு
கெக்கலித்த இரவுப்பூச்சிகளை வெறுப்பேற்ற
சுயசமாதானத்தின் தாழ் திறக்கப்படுகிறது..
கும்மிருட்டின் கொலைமிரட்டலில் வெட்கிப்போனது
அன்றைய நிலவின் இருப்பையறியாத அவசரம்.
எங்கு தேடியும் காணாத நிலவின் ஏமாற்றம் இரவின் மூலை முடுக்கெல்லாம் பரவியடங்குகிறது..
நேரெதிர் திசையின் கரும்போர்வைக்குள் ஒளிருமொரு வெளிச்சப்பொட்டு
தகர்த்தெறிகிறது சுயசமாதானத்தை..
சட்டென ஏங்கியழும் நாயை அடித்தது யாரென புலப்படுமுன்
நிலவுக்கு விடைகொடுத்து தூங்கிப்போயிருந்தேன்..
அடர்த்தியான இரவில்
நிதானமாய் ஒலியெழுப்பி ஒழுகும் நீர்க்குழாயையும்
நிறுத்தாமல் ஒங்கியழும் நாயையும்
நோட்டமிடும் அவ்வெளிச்சப் பொட்டையும் கொஞ்சம் கவனித்துக்கொள்கிறீர்களா ?
நான் நிம்மதியாகத் தூங்கவேண்டும்..
Subscribe to:
Posts (Atom)