Friday, December 25, 2009

நானெனப்படுவது.....

சற்றுமுன் எறியப்பட்ட
விச வார்த்தைகளின்,
வீரியம் தாங்காது
சன்னல்வெளி வெறித்தேன்..

நெடுநாட்களா யொழுகும்
நீர்த்தொட்டியின் துளிகள்,
கருங்கல்லின் கூர் நுனியின்
மேற்பட்டு சிதறியது..

வலித்திருக்குமோ -வென
கம்பிகள் தாண்டி - என்
கருவிழிகள் பதித்தேன்..

தொடர்ந்து விழும்
நீரின் மென்மையில்..
கல்லின் கூர்மை,
பச்சை தரித்திருந்தது..
சுற்றியிருந்த புற்கள்,
வெண்பூ பூத்திருந்தன..

சற்றுப் பின்வாங்கினேன்..
நானெனப்படுவது
கூரிய கல்லா??
மென்மைத் துளியா??

Monday, December 14, 2009

பிரிவுக்காலம்..

நெடுநேர மௌனத்தின்
கூர் விளிம்பில்,
விழியும் காகிதமும்
விரும்பியிருந்தது சில
நீர்த் துளிகள்...

இன்னும் நீண்ட
அம் மௌனத்தின்
முற்றுப்புள்ளியில்,
காகிதம் நிரம்பியிருந்தது,
உன் ஒற்றை பெயரில்...!
கண்கள் ஏனோ சிரித்திருந்தது.