மேகாத்து கொஞ்சம் மெதுவா வீசிட்டிருந்தது.ஆத்தா ரெம்ப களச்சு போயிருந்தா.பாக்கவே பரிதாபமா இருந்துச்சு.காடு கரயில கருமாயப்பட்டு எனக்கும் சேத்து உழச்சு உழச்சு தேஞ்சு போயிட்டா. ஆத்தாவுக்கு நான்னா ரொம்ப உசிரு.என்ன கொஞ்ச நேரம் காணும்னாலும் தவிச்சு போயிடுவா.என் வயசு பிள்ளககிட்ட பேசிட்டு தாமசித்து வீட்டுக்கு வந்தா, 'ஊர சுத்தின நடக்கறதே வேற’னு தலையில செல்லமா கொட்டி மெரட்டுவா.ஆத்தாவுக்கு நான் வீட்டுலயே இருந்தா தான் நிம்மதி.
மேலூரு நிறுத்தத்துல ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோம்.இதோ மினிபஸ்ஸு வந்துட்டு. நான் வேகமா ஏறிட்டேன்.எனக்கப்புறம் ஆத்தா கஷ்டப்பட்டு ஏறுனா. பஸ்ஸுல வியாழக்கிழம சந்தக்கூட்டம்.யாரோ ஒரு புண்ணியவதி தடுமாறுன ஆத்தாவுக்கு இடம் கொடுத்தா.டிரைவருக்கு பின்னாடி சீட்ல மெதுவா உக்காந்துகிட்டு,என்ன அவ பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டா. நானும் வசதியா அவ பக்கத்துல நின்னுக்கிட்டேன்.
மினிபஸ்ஸு எங்க ஊரு மேடு பள்ளத்துல ஏறி இறங்கி மெதுவா ஊர்ந்து போக ஆரம்பிச்சது.எதேச்சையா திரும்பினா கொஞ்சம் பக்கத்துல ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருந்தான். நான் வெசனப்பட்டு திரும்பிக்கிட்டேன்.கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா,அப்பவும் என்னயே பாத்துட்டு இருந்தான்..வச்ச பார்வைய எடுக்கவே இல்ல.திமிரா பாத்துட்டே இருந்தான்.எனக்கு ஒரு மாதிரி இருந்தது.ஆத்தா பக்கம் தலைய திருப்பிக்கிட்டேன்.ஆத்தா அவ பாட்டுக்கு நிம்மதியா வெளில வேடிக்கை பாத்துட்டிருந்தா.
கண்டக்டர் வந்து டிக்கட் எடுக்க சொன்னாரு.ஆத்தா எடுத்துட்டு திரும்பிக்கிட்டா.அவர் கூட்டத்த உள்ள தள்ள அவன் இன்னும் கொஞ்சம் பக்கதுல நின்னான்.இன்னும் பாத்துட்டு இருந்தான். நான் அப்போ அப்போ திரும்பி பாத்துக்கிட்டேன்.
கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாச்சு.இன்னும் கொஞ்சம் தைரியத்த வரவழச்சுட்டு மெதுவா திரும்பி பாத்தேன்.இன்னும் என்னயவே பாத்துட்டு இருந்தான்.’என்னடா இது வம்பா போச்சு’னு எனக்கு லேசா எரிச்சல் வந்துச்சு.எரிச்சல் வந்தாலும் அவன பாக்கறத என்னால தவிர்க்க முடில. கொஞ்சம் உயரம் கூட.கருப்பா இருந்தாலும் களயா இருந்தான்.கண்கள்? அத என்னால பாக்க முடில.அவ்ளோ காதல் தேங்கி இருந்தது.இந்த பயலுகலே இப்படித்தான்.முத தடவ பாத்தாலும் வச்ச கண்ணு வாங்காம பாக்கறதே பொழப்பா போச்சு. நான் வெடுக்குனு திரும்பி ஆத்தாவ ஒட்டிக்கிட்டு போய் நின்னுக்கிட்டேன்.
மனசுக்குள்ள எதோ நழுவுற மாதிரியும்,அழுத்தமா இருக்கற மாதிரியும்,பறக்கற மாதிரியும் இருக்கு.இவன இதுக்கு முன்னாடி இந்த பக்கம் பாத்ததே இல்லயே. நானும் எத்தனையோ தடவ ஆசுப்பத்திரிக்கு ஆத்தா கூட போயிருக்கேன்.இவன பாத்ததேயில்லயே.வெளியூர்க்காரனா இருப்பானோ?மனம் அவனையே சுத்தி சுத்தி வந்துச்சு.திரும்பி பாக்கலாமா? என்னறியாம திரும்பி பாத்தேன்.அடப்பாவி என்ன தான் இன்னும் பாத்துட்டு இருக்கான்.கொழுப்பு தான்.ஆனாலும் பாக்கறதோட நிறுத்திக்கிட்டான்.இல்லனா ஆத்தா மினி பஸ்ஸுனு கூட பாக்காம சாமி ஆடிடும்.
அதிக தூரம் கடந்து இருந்தது மினிபஸ்ஸு.அவன் இப்போ என்ன செய்யறான்னு பாக்கணும்னு தோணுச்சு.திரும்பினேன்.இப்போ அவன் எதோ சொல்ல துடிக்கற மாதிரி இருந்துச்சு.படபடனு அடிச்சுக்குச்சு மனசு.இனிமே திரும்பவே கூடாதுனு முடிவு பண்ணி ஆத்தாவுக்கு முன்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
அவன பத்தியே நெனச்சுட்டு இருந்ததுல இறங்க வேண்டிய இடத்த நான் கவனிக்கல. ஆத்தா தான் தட தடனு எழும்பி என்ன தரதரனு இழுத்துட்டு வேகமா கீழ இறங்குச்சு.அவன கடந்து கீழ இறங்கும் போது மெதுவா என்னமோ சொன்னான்.வேக வேகமா இறங்கினதுல காதுல விழல.இறங்கி நடந்து திரும்பி பாத்தேன்.அவன் கிட்டத்தட்ட வாசல்ல வந்து நின்னு கத்தினான்.”மேஏஏஏஏஏஏஏஏஎ……………….”…………
அந்த குரல்ல அத்தனை காதல் இருந்தது.வெகு தூரம் போன பின்னும் காதில் ரீங்காரமிட்டது அந்த குரல்.உங்க காதுல அது ரீங்காரமிடுதா?
Saturday, February 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆரம்பத்தில இருந்து நல்லா தான் வந்துடு இருக்கு.. கடைசில குழப்பமடைய செய்து விட்டது ”மேஏஏஏஏஏஏஏஏஎ".. :-)
ok.. ok.. puriyuthu.. fine.. :))
”மேஏஏஏஏஏஏஏஏஎ……………….”…………
புரிஞ்சா நல்லா இருக்கும். மெயில் பண்ணவும் !
கடைசியில புரியல :(
Post a Comment