Monday, November 2, 2009

ஒரு மழை நாளில்..

அன்றைய நாளின்
அழகான மாலைப்பொழுது,
அடர் மழையின் வருகையால்
அவசரமாய் பிரிவறிவித்திருந்தது...

சாலையின் மின்விளக்குகளிலும்
சிற்றுந்தின் விளக்குகளிலும்
மழை இன்னும் அழகாயிருந்தது..

மழையின் சிலதுளிகள் சிதறாமல்
வெண்முத்த்துக்களாய் படிந்திருந்தன
சிற்றுந்தின் சன்னல் கம்பிகளில்..
ஒவ்வொன்றாய் உடைக்க,
இன்னொன்றாய் உருவாக்கி
புன்னகைத்தது மழை..

கம்பிகள் தாண்டிய கைகள்,
யாருமறியாமல் பெரு மழையின்
கனம் படித்துக்கொண்டிருந்தன..

மழை கொண்டுவந்திருந்த
செய்தியைச் செவியிலிட்டு
சிரிக்கச் செய்தது குளிர்காற்று...

சன்னலின் வழி நுழைந்த
சின்னஞ்சிறு ஈசல்கள்
கைகளில் கவிதையெழுதி
காதலை சொல்லிச் சென்றன..

சூடடங்கி குளிர்விட்டிருந்த
நெடுஞ் சாலையோரத்தில்,
இறுக்கம் தளர்ந்திருந்த மண்
தன் வாசனையை பரப்பியிருந்தது..

சுழன்று சென்ற விழிகள்
சுருங்கி நிலைத்திருந்தன
சிற்றுந்தின் முன் கண்ணாடியில்..

சிரமுடைந்து
சிறகுகள் கிழிந்து
சிதறிச் செல்வதென்ன??
சக்கரங்களில் சிதைந்து
சுவடின்றிப் போவதென்ன??
சற்றுமுன் காதலைச் சொன்ன
சின்னஞ்சிறு ஈசல்கள்..

இறங்கி நடந்த சாலையில்
மழை பரப்பிய வாசனையிலும்,
காற்று காதிலிட்ட செய்தியிலும்,
ஈசலின் காதலும் கண்ணீருமே
நிரம்பப் பெற்றிருந்தன..

No comments: