Saturday, September 12, 2009

விடியாத இரவொன்று வேண்டும்..

தனிமையான இரவில்
துணைக்கு வருகிறேனென்று
அடம்பிடித்தது கண்ணீர்..

வெறித்து நோக்கிய கண்களில்
வெற்றிடமின்றி நிரம்பிய துளிகள்
வெளியேற தொடங்கியிருந்தன..
கண்களின் உறுத்தலோ
கண்ணீரின் பாரமோ
இமைகள் சேர்ந்திருந்தது..

மொத்தமாய் வழிந்த நீர்த்துளிகள்
முகத்திலிறங்கி கன்னம் கிழித்து
தலையணையில் கோலமிட்டது..
காற்றாடியின் அதிவேக
காற்றுக்கும் காயமறுத்தது
கண்ணீரும் கோலமும்..

யாருமற்ற தனிமையில்
ஆறுதலாயிருந்தது அழுகை..
இரவிருக்கும்வரை தான்
இரகசியமாய் அழமுடியுமென்று
இமைகள் நனைக்கிறேன்..
இதமாகவே இருந்தது - என்
காயத்திற்கு கண்ணீர்..

விடியும் பொழுதில்
தூக்கம் தொலைத்திருந்தேன்..
துக்கம் குறைத்திருந்தேன்..

காத்திருக்கிறேன்..
வடுக்களில் வடியவிட
வற்றாத விழிநீருக்கும்..
விடியாத ஓர் இரவிற்கும்..

No comments: