தனிமை நிறைந்த
ஞாயிறொன்றில்
எழுந்தது முதல்
எல்லாமே
கவிதையாய்த் தோன்றியது..
விடுதலையற்ற தொட்டிமீன்கள்
துள்ளி
விளையாடிக்கொண்டிருந்தன..
சுவரோர ஒட்டடைகளினூடே
நம்பிக்கை யிழக்காத
பூச்சிகள் தவமிருந்தன..
வெறுமை படர்ந்திருந்த
நாற்காலியில் - அன்று
காற்று நிரம்பியிருந்தது..
நீர்த்துப் போன
நினைவுகளில்,
நிரம்பிவழிந்த தொட்டிநீர்
நரம்புகளைத் தட்டியெழுப்பியது..
சாமரம் வீசி
சமாதானம் செய்தன,
கொடியிலசையும் சேலைகள்..
சாரமற்ற வாழ்வில்
சுவையைக் கூட்டியது
சமையல் வாசனை..
வழிந்தோடிய இசை
வீடெங்கும் பரவி
வெறுமையைச் சுத்திகரித்தன..
தீண்டப்படாத காகிதம்
கவிதையின் நிழற்பட்டு
புன்னகையை பரிசளித்தது..
பின்னிரவில்
தூக்கம் கலைந்து
காகிதம் பார்த்தேன்..
என்னைப் பற்றிய
வார்த்தைகள் மட்டும்
விடுபட்டுப் போனதாய்
வருத்தம் தெரிவித்தது காகிதம்..
விரக்தி புன்னகையில்
விடிந்திருந்தது திங்கள்..
Saturday, March 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தனிமை எப்பொழுதுமே ஒரு சிலருக்கு வேரறுந்த வலி ...
very nice.....
Post a Comment