Saturday, March 6, 2010

இயல்பிற்கு காத்திருக்கிறான் கடவுள்

நீண்டு,
பின்னும் நீளும்
பெரியதொரு வரிசையில்
வியர்த்துக் கசங்கும்
சதைகளுக்கிடையில்
பயபக்தியுடனான காத்திருப்புகள்…

வியர்த்திருந்த
அவ்வரிசையோடு
சலித்துத் தேங்கியிருந்த
அமைதியையும்
குலைத்தவாறு குழந்தைகள்..

அக்குழந்தைகள்,
காத்திருப்பின் கசகசப்பில்
நம்பிக்கை பூச்செடிகளை
நட்டுச் சென்றார்கள்…

கடவுளறியாத கவலையோ
ஆன்மிகம் புரியாத
அழற்சியோ அற்றிருந்தார்கள்..

அலங்காரம் முடிந்தவொரு
அறிவிப்பில்
கருவறை சூழ்ந்திருந்த
வெண்திரை விலகியது..

சிலிர்த்தெழுந்த கூட்டம்
கன்னத்திலிட்டு
கோரிக்கைகள் ஒப்பித்தது..

காட்சியளித்த சிலையில்
கடவுளைக் காணவில்லை..

அவன்,
நீண்ட நேரமாய்
விளையாடிக்கொண்டிருக்கிறான்
இயல்பாயிருந்த பிஞ்சுகளோடு
மிக இயல்பாய்..

வரிசையில் வியர்த்திருந்த
வாடிய முகங்கள்
இல்லாத கடவுளிடம்
பக்தியை பரிசளித்துச்சென்றன..

கரைந்திருந்த கூட்டம்
விட்டுச்சென்ற தனிமையில்,
காத்திருக்கிறான் கடவுள்..
மற்றுமொரு
சிலையலங்காரத்திற்கு..

3 comments:

Unknown said...

Excellent .............................................................................. :)))


கரைந்திருந்த கூட்டம்
விட்டுச்சென்ற தனிமையில்,
காத்திருக்கிறான் கடவுள்..
மற்றுமொரு
சிலையலங்காரத்திற்கு.. //
இயல்பிற்கு காத்திருக்கிறான் கடவுள்.. !!!!

Extra ordinary.. :))

Rajthilak said...

கொஞ்சம் பக்தி வாடை அடிக்குது.

கடவுளை உணர்ந்தால், அவரை எங்கும், எதிலும், எந்த நிலையிலும் காணலாம் ... அவரை அறிவுப்பூர்வமாக அணுகினால் நன்று.

Unknown said...

I can only know the real meaning of this kavidhai (Nee innum thirundhave illai)