சிரட்டையில் சமைக்கிறேனென்று
சிறுதீயில் வைக்கொல்போரைப் பொசுக்க
சினத்தில் மிளகாயை அரைத்து
சிறுகண்ணில் ஒற்றவந்த அன்னையைப்பார்த்து
செய்வதறியாது நின்ற என்னை
செல்லமாய் அணைத்துக் காத்த
என் தாத்தன்....
கண்ணாமூச்சி விளையடுகிறேனென்று
களத்திலிருந்த நெற்பானைக்குள் நுழைந்து
கண்ணயர்ந்த என்னைத் தேடி
கம்போடு அடிக்க வந்த அம்மாவை
குழந்தையென்றால் அப்படித்தான் என்று
கொஞ்சியபடி எனைத் தூக்கிய
என் தாத்தி..
மிதிவண்டி பழகுகிறேன் என்று
முழங்கையை முறித்து மனைவந்தவளை
முற்றத்திலேயே முடியைப்பற்றிய தாயிடமிருந்து
மின்னலாய் மருத்துவமனைக்கு மீட்டுச்சென்று
மடியிலேயே வைத்திருந்து தன்கண்ணீரோடு
மகளின் கண்ணீரையும் துடைத்த
என் தந்தை..
இளையவனுக்கு கற்பிக்கிறேன் என்று
இதுதான் சாக்கென்று தலையில் குட்ட
இருவரும் போட்ட சண்டையில்
இரண்டு லிட்டர் எண்ணைகேன் கவிழ
ஈர்க்குமாரோடு இடிஇறக்க வந்த அம்மாவிடமிருந்து
இரண்டடி வாங்கினாலும் என்னை இழுத்துக்கொண்டு ஓடிய
என் தம்பி...
அனைவரும் பார்த்துப்பார்த்து
அன்பை பொழிய
பெற்றவளுக்கு என்மேல்
பாசமே இல்லையோஎன
புலம்பி இருக்கிறேன் பலமுறை..
நெடுநாளைக்குப்பின்..
நட்பு பாவிக்கிறேன் என்று
நண்பனை பற்றி நல்விதமாய் பேச
நம்பாமல் நிமிர்ந்த நால்வரையும் பார்த்து
நான் அவசியமில்லாமல் அளக்கிறேன் என்றுணர்வதற்குள்
நான் வளர்த்த பெண் அப்படியில்லைஎன்று
நம்பிக்கையை பாசமாய்த் தந்தவளுக்கு
நன்றிக்கடனாய் அவள் நம்பிக்கையை காப்பாற்றுகிறேன்..
Tuesday, September 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment