Saturday, September 6, 2008

பெத்தவளுக்கு கேக்குதா என் புலம்பல்????

மஞ்சக்கயிறு கட்டிய மறுமாசமே
மருதைக்கு போறேன்னு பொய்சொல்லி
மலையேறிப்போன என் மச்சான்..

அஞ்சாறு வருசமாச்சு
அவன் கட்டிய கயிறும்
அழுக்கேறிப் போச்சு..

காட்டு வேலையில கருமாயப்பட்டு
ஒடம்பு வேர்வையோட ஒன்நெனப்பும்
கண்ணீரா கரைஞ்சு போச்சு..

வரவே மாட்டன்னு தெரிஞ்சாலும்
வயசுப்பொண்ணுக்கு வேலின்னு
வம்படியா தாலியக் கழட்ட
விடாத ஊரு சனம்..

ஒத்த வார்த்தை சொல்லிப் போயிருக்கலாம்
ஒன்ன எனக்குப் பிடிக்கலன்னு..
ஒண்டிக்கட்டையா ஊரோட மல்லுக்கட்டி
ஒரு ஆறுதலுக்கும் நாதியத்து
ஒடம்பும் மனசும் தேஞ்சதுதான் மிச்சம்..

ஒரேயோருதடவ ஊரும் ஒலகமும்
ஒனக்கிந்த கலியாணத்துல சம்மதமான்னு
கேட்டுருந்தா என்னைக்கோ இந்த
கேவலப்பட்ட பொழப்ப தடுத்துருக்கலாம்..

நேந்து விட்ட ஆட்டக்கூட
நெனச்சபடி வெட்டக் கூடாதுன்னு
தாரைதாரையா தண்ணிய ஊத்தி
தலை ஆடக்காத்திருக்கும் ஊரு,
தாலி கட்டிப் போறவளுக்கு
தண்ணிய மட்டும் தெளிச்சு விட்டது
தர்மமோ?? நாயமோ???

No comments: