இந்த வருச வெள்ளாமையும்
வெளச்சல் எதுவும் தரலைன்னு
எங்கய்யனும் அம்மையும் சண்டை போட்டு
மாத்தி மாத்தி கொறை சொல்லி
மானம் போகுதுன்னும் கவலைப்படாம
மக்க ரெண்டும் அழுதுன்னும் பாக்காம
ஆத்திரப்பட்டு அள்ளி முடிஞ்ச கொண்டையோட
இந்த வீடுப்படியேற மாட்டேனு போயிட்டா எங்காத்தா..
சாயங்காலமா சங்கதி கேள்விப்பட்ட சின்னாச்சி
சலசலத்து சடவு சொல்லி என்ன
இழுத்துக்கிட்டு ஒவ்வொரு காடா தேடியலஞ்சா..
இருள் சூழ்ந்த கெணறுஎல்லாம் எட்டிப்பாத்தா..
என் ஆத்தா வைரக்கியமானவதான்.. ஆனாலும்
எந்தவொரு பிள்ளைக்கும் வரக்கூடாது என்நிலமை..
எங்கேயும் காணோமின்னு எங்கம்மைய கொறைசொல்லி
விட்டுப்போனா.. வேறென்னதான் செய்ய முடியும் அவளாலும்??
முந்தானைல மொகம் தொடைக்க வழியில்ல
மாருல தாங்கி முத்தமிட நாதியில்ல
மடியில சாச்சு தட்டிக்கொடுக்க கைகளில்ல
பெண்னெனக்கு ரெட்டப் பின்னலிட ஆளில்ல
பையனவன் பசி போக்க யாருமில்ல
பள்ளிக்கூட பாடம் தலைக்கேற வில்ல
பக்கத்துவீட்டுக் கெழவி கொடுத்த கஞ்சில
பரிதாபத்த பாத்து பசியடங்கிப் போறேன் பாவிமக!
வக்கத்து நின்னாலும் வழி அவதான்னு
வெளக்கஞ்சொல்லி வாழ்க்கை இன்னும் இருக்குன்னு
உறவெல்லாம் எடுத்துச் சொல்ல எல்லாரும்
ஒண்ணாச்சேந்து எங்கம்மைய கூப்பிட போனோம்..
எங்களப் பாத்ததும் வெடுக்குனு இழுத்து
முத்தமிட்டாலும் ஏனோ வலிக்கவே செஞ்சது..
மக்களால மனசொடிஞ்ச பெத்தவங்களும் இருக்காக..
பெத்தவங்களால பித்துபிடிச்ச பிஞ்சுகளும் இருக்காக..
அத்தனை கேள்விகளையும் அடக்கிகிட்டு ஒரேயொரு
பதிலைச் சொன்னேன் எங்கம்மையிடம்.."எந்தவொரு
சூழ்நிலையிலையும் உன்னமாதிரி நானிருக்க மாடேம்மா.."
சேர்த்து இழுத்தணைத்து அழவே முடிஞ்சது அவளால்..
Friday, September 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
///எங்களப் பாத்ததும் வெடுக்குனு இழுத்து
முத்தமிட்டாலும் ஏனோ வலிக்கவே செஞ்சது..
மக்களால மனசொடிஞ்ச பெத்தவங்களும் இருக்காக..
பெத்தவங்களால பித்துபிடிச்ச பிஞ்சுகளும் இருக்காக..///
மனசு பாரமாகிவிட்டது ... பல வரிகளில்
Post a Comment