திருநெல்வேலி மாநகராட்சியின்
திறந்தவெளி பேருந்து நிலையம்...
எத்தனையெத்தனை பயணிகள்..
எத்தனையெத்தனை பயணங்கள்..
எங்கே செல்கிறது பயணங்கள்??
எதையோ யோசித்தபடி தயாராகிறேன்
என்னின் அடுத்த பயணத்திற்கு...
எப்பொழுதும் நின்றபடியே அமைகின்றன
என் நெடுங்கால பயணங்கள்..
பயணத்தில் பறக்கவிடும் கவிதைகளை
பத்திரப்படுத்துவது பலநாள் கனவெனக்கு..
கசகசத்த கூட்ட நெரிசலிலும்
காதைக் கிழிக்கும் வசவுகளிலும்
காணாமல் போய்விடுமென் கவிதைகள்..
எழுந்துவரும் எண்ணங்கள் சிலரது
எரிச்சல்களில் எங்கேயோ சிதறிவிடுகின்றன..
பசித்த குழந்தைகளின் கதறல்கள்..
பசிபோக்கவியலாத தாயின் தவிப்புகள்..
கண்டும் காணாமலும் கழிசடைகள்..
கவனித்து உதவிய மனிதங்கள்..
பெரிதாய் மோதிய பார்வைகள்..
சின்னதாய் சந்தேக சைகைகள்..
நெடுநேரமாய் வறுபடும் கடலைகள்..
நொடிப்பொழுதாய் சிந்தும் வெட்கங்கள்..
அரசியலைக் கிளறிய ஆர்வங்கள்..
ஆற்றாமையைக் கொட்டிய ஆதங்கங்கள்..
புறம்பேசி பழிதீர்க்கும் புலம்பல்கள்..
போதையில் பேதலித்த உளறல்கள்..
வெற்றிலை துப்பிய அலட்சியங்கள்..
வெறித்துப் பார்த்த மிரட்டல்கள்..
யார் யாருக்கோவான தேடல்கள்..
எவரோ கிடைத்ததற்கான நிம்மதிகள்..
பொதுவாய்க் கிடைத்த புன்னகைகள்..
புன்னைகையில் கிடைத்த புரிதல்கள்..
காட்சிகளை கவிதையாக்கவும்
உணர்வுகளை கோர்க்கவும்
நிமிடங்கள் செலவழித்து
நிதானமாய் காத்திருந்தேன்..
இருபேருந்துகளை தவறவிட்டு
இறுதியில் கிடைத்தது
சன்னலோர இருக்கை...
உயர்த்திப்பிடித்த கம்பிகளின் அடியிலும்
உணர்விழந்த கைகளின் இறுக்கத்திலும்
தேக்கி வைத்த கவித்துகள்களுக்கு
தோற்றம் கொடுக்க முனைந்தேன்..
காற்றில் கரைத்தனுப்பிய கற்பனைகளை
காட்சிப்படுத்த கண்களை மூடினேன்..
மூளைக்குள் முகவரி சிக்கியதோ??
முகத்தில் விளையாடிய காற்றில்
முற்றிலும் தொலைத்திருந்தேன் -என்
கவிதைக்கான முகவரிகளை..
என்னை மீறிய தூக்கத்தில்
என் கற்பனைகள் முடிவுற்றிருந்தன..
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment