Monday, September 7, 2009

இயற்கையோடு ஒட்டியது என் வாழ்வு...

நிறைமாத கரு மேகங்கள்
நீரைச்சுமந்து நிலை தடுமாறிக்கொண்டிருந்தன..
எப்பொழுது பிரசவிக்க போகிறதென்று
அண்ணாந்து பார்த்தபடி நான்..

நளினமாய் நாட்டியமாடிய மரங்கள்
நீண்ட கிளைகளால் மேகங்களுக்கு
வேர்க்கட்டும் என்று விசிறிக்கொண்டிருந்தன..

பச்சை இலைகளின் வாசனையும்
மண்ணில் எழுந்த மணமும்
மழைக்குழந்தையை வரவேற்க தயாராயின..

இதோ,
இடிகள் இன்னிசை முழக்கமிடுகின்றன..
மின்னல்கள் புகைப்படம் எடுக்கின்றன..
இலைகள் மோட்சம் பெறுகின்றன..
மரங்கள் ஆனந்த தாண்டவமாடுகின்றன..

அழுதபடி வரும் குழந்தையை
ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள் நிலமகள்..

அவ்வளவுதான்..
அலுவலகத்தின் குளிரூட்டப்பட்ட கண்ணாடி
அறைகள் பனியால் திரையிடப்பட்டது..

மண்வாசனையை நுகர முடியாமலும்
இன்னிசையை கேட்க முடியாமலும்
மழையை தொட முடியாமலும்
சூழ்நிலையை உணர முடியாமலும்
பசுமையை பார்க்க முடியாமலும்
செவிடாய் குருடாய் உணர்வற்றதாய்
அறைக்குள் அமைதியாய் என்னுடல்..
அத்தனையும் அனுபவித்தபடி என்மனம்..

இப்படியே சமாதானம் செய்துகொள்கிறேன்
இயற்கையோடு ஒட்டியது என்வாழ்வென்று.....

No comments: