Friday, September 11, 2009

மனிதமுள்ள மதமும் கருணையுள்ள கடவுளும்....

சிறு சபையினில் துகிலுரிக்கப்பட்ட பெண்ணுக்கு
சட்டென்று தோன்றி சேலையைச் சுற்றிவிட்ட
சாரதியே , பரமாத்மாவே..
போர்க்களத்தில் பெண்மையின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டபோது
பார்த்துக்கொண்டு நின்றாயோ பார்க்கசகிக்காமல் கண்கள்மூடினாயோ??

நீ பாவிஎன்றும் நான் ஆவிஎன்றும்
பிசாசுக் கூட்டங்களாய் மனிதர்களைப் பாவித்து
பாவத்தைப் பெருக்கி பிரார்த்தனையில் சரிகட்டும்
போதனையும் புத்துயிர் தரவில்லை எம்மனிதர்களுக்கு..

பெண்களைப் போர்த்தியும் மூடியும் போற்றவேண்டுமென்று
பொந்தினுள்ளேயே அடைத்துப் பழக்கப்பட்ட பசலிகளுக்கும்
புரிந்துருக்காது, பூக்களாய்ப் பிறந்து போராளிகளான
பெண்மக்களின் துண்டாக்கப்பட்ட உடல்களும் மனங்களும்..

கலிமுற்றும் பொழுது தோன்றுவான் கடவுள்
கதைக்கும் கிழவிகளுக்கு தெரியவில்லை இன்னும்..
காலம்காலமாய் குருதியும் கண்ணீரும் பட்டுக்
காய்ந்துபோன மண்ணில் கலி களியாடிக்கொண்டிருகிறதென்று ..

கொடுமைகள் அத்தனையும் கண்டு களித்துவிட்டு
கடமையேஎன்று கோயிலில் ஆட்டும் மணிகளுக்கு
மண்டையை ஆட்டிவிட்டு மறந்துவிடாதே மனிதத்தை..

கடவுளை மறுப்பதால் மனிதமற்றவன் என்பதாகிவிடாது
மனிதர்களை மறப்பதால் கடவுள்தன்மை வந்துவிடாது..
இடித்து வைக்கப்பட்டவன் இறுக்கமாகவே இருப்பான்
இன்னுயிர்களை இன்புறச்செய்வது இவனால் இயலாது..

வந்து குதிப்பான் வானத்திலிருந்து என்று
வெட்டிப்பொழுது போக்காமல் களம் மாற்றுவோம்..
நமக்கென்று நம் நம்பிக்கைகள் தான்..
மற்றவருக்கென்று நம் மனிதம் தான்..

No comments: