Saturday, November 29, 2008

சில கிறுக்கல்கள்..

நான் தான் என்பது கூட
நினைவு படுத்தப்பட வேண்டியிருக்கிறது
நீ மனதினுள் நுழைந்த பின்..

உன்னைப் போல் பேசுகிறேன்,
உன்னைப் போல் நடக்கிறேன்,
உன்னைப் போல் சிரிக்கிறேன்..
மொத்தத்தில் என்னைத் தொலைத்து
முழுதாய் நீயாக மாறிவிட்டேன்..

என் இயல்பைத் தொலைக்கவிட்டு
இம்சித்துப் பார்க்காதே..
"பைத்தியம்" என்று பட்டம் வாங்கும்முன்
பதிலை சொல்லிவிடு "சம்மதமென்று"..
=====================================
காதலும் தொடர்வண்டி தான்..
அவனைத் தொடர்ந்து நீ..
உன்னைத் தொடர்ந்து நான்..
என்னைத் தொடர்ந்து யாரோ..??

நினைப்பது கிடைக்காது என்றாலும்
தொடர்தல் தொடர்கிறது, அழகான
நினைவுகளோடும் இனிமையான இசையுடனும்
தடதடத்த தண்டவாளம் எனும் வாழ்க்கையில்..
=======================================

வாழ்க்கைச் சூத்திரம்..

கடைசி வரை
காணாமல் போய்விடக்கூடும்
வெற்றியின் சுவடுகள்..

கடைசி வரை
தெரியாமல் போய்விடக்கூடும்
காத்திருத்தலின் அவசியம்..

கடைசி வரை
புரியாமல் போய்விடக்கூடும்
வாழ்க்கையின் ரகசியம்..

ஆனாலும் என்ன??
இருக்கும் வரை
இன்னொரு மாற்றத்திற்காய்
இலவுகள் காப்போம்..

நினைத்தது கிடைக்காவிடினும்
கிடைத்ததை கொண்டு
படைக்கலாம் இன்னுமொரு உலகம்..

எல்லாருக்குமே தரையிலிருந்து
எட்டும் தூரத்தில்தான்
வானம்..

சிறகுகள் இருந்தால்தான்
பறக்க முடியும்
என்பதல்ல சூத்திரம்..

சிந்தனை தெளிவுற்றால்
சாமானியனுக்கும் சாத்தியம்
சரித்திரமும், சாம்ராஜ்யமும்..

சமனற்ற கோளத்தைதான்
சீர்செய்ய லாகாது..
சீர்குலைந்த சமுதாயத்தையுமா
சீக்கிரம் மாற்ற வியலாது??

யார் மாற்றுவார்
என்பதல்ல கேள்வி..
நாம் மாறுவோம்..
நமைப்பார்த்து உலகம் மாறும்..

தேவை ஆண்டவனில்லை..அன்பு மட்டுமே..

அன்புக்கு காரணங்கள் தேவையில்லை
ஆனால்
ஆண்டவனுக்கு காரணம் தேவையாயிருக்கிறது..

அவனின்றி அசையாது ஓர் அணுவும்..
அசையும் அணுகுண்டுகளிலும்
அவனிருக்கிறானா என்பது அவனுக்கே வெளிச்சம்..

அவன் பெயரில் நடக்கும்
அத்தனை தவறுகளுக்கும்,
அமைதியாகவே இருக்கிறான் அவன்..

உயிர் பெற்றால், உணர்வுற்றால்
தீவிரவாதத்தின் துப்பாக்கிக்கும்
அழிவுசக்திகளின் அணுகுண்டுவுக்கும்
அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ??

சகமனிதனின் வலி உணராதவரை
சர்வமும் படைத்தவனை பூஜிப்பதில்
சத்தியமாய் ஒரு ப்ரோயோஜனமுமில்லை..

ஆண்டவனைப் புரிவதில் தோல்வியுற்றாலும்
அது அவசியமில்லைஎன்றே தோன்றுகிறது..
வாருங்கள்.. அழிவை நோக்கிப் பயணிக்கும்
நம்மை நாமே காப்பதில் வெற்றி காண்போம்..