Thursday, February 5, 2009

உதிர்ந்து போன உறவுகள்..

செதில் செதிலான கரிய பட்டைகளோடு
சிறுசிறு வெண்ணிற பூக்கள் தாங்கி
சில்லென்று குளிர் காற்று பரப்பி
சிலிர்க்க வைத்த வேப்பமரம்..

ஊஞ்சல் கட்ட இடம்பிடிக்கும் சண்டையில்
ஊரையே கலக்கும் பெருங் கூச்சலில்
உட்கார்ந்திருந்த பிள்ளையார் ஓடிவர முடியாமல்
ஏக்கத்தோடு பார்த்த அரசமரம்..

மஞ்சளும் சிவப்புமாய் குமிழ்ந்த பூக்களோடும்
மங்களம் இசைக்கும் பச்சை இலைகளோடும்
மாடிவரை கிளைகள்விட்டு தண்டனைகளிலிருந்து தப்பிக்க
மற்றுமொரு வாசலிட்ட பூவரசமரம்..

தண்ணியும் அன்னமும் தேட மறந்து
தூரத்தில் தொங்கும் பழங்களுக்காய் மரமேறினால்
முட்களால் முகத்தையும் உடலையும் சிராய்த்தாலும்
மடிநிறைய அள்ளிக்கொடுக்கும் கொடிக்காய்மரம் ..

கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒளிந்துகொள்ள வசதியாய்
கருமை படர்ந்த அடர்ந்த கிளைகளுக்குள்
பதுங்கிநின்ற வேளையில் கற்களால் பொறித்த
பெயர்களைத் தாங்கிய புளியமரம்..

தலையைக் கோதிவிட்ட தோழனாய்,
கண்ணீரைக் காயவைத்த காதலியாய்,
நிம்மதியைக் கொடுத்த உறவுகளாய்,
பகிர்ந்து கொண்ட மனசாட்சியாய்
மனமெல்லாம் பூக்கச்செய்த மரங்கள்
மண்டியிட்டு மண்ணில் கிடக்கின்றன..
நேசமாய் இருந்த உறவுகளெல்லாம்
நொடியில் விட்டுப்போன உணர்வு..

மனம்கொன்று மனிதம் தின்று
மரம்வித்த சொற்ப காசில்
மண்குடிசை மாளிகையாகும் கனவு..
வெட்டப்பட்ட மரத்துண்டுகளுக்கு நடுவில்
வியர்த்த தலையுடன் தந்தை..
அழுந்த முகம்துடைக்கும் தந்தைக்கு
அழுகையா அசதியாயென்ற யோசனையோடு
முட்டிக்கொண்டு வந்த அழுகையை
மறைக்க முடியமால் நகர்கிறேன்..

வெட்டப்படும் மரங்களுக்கு என்ன
வேதனையென்று மனிதன் எண்ணியிருக்கலாம்..
வெட்டியதும் தான் தெரிகிறது
வினையும் வலியும் மனிதனுக்கேயென்று..

No comments: