Tuesday, September 2, 2008

கடவுளின் கதறல்..

கல்லாகச் சமைந்ததாலையே
கரைய மாட்டேனென்ற
நினைப்பில் நீ நடத்திய
சடங்குகள் வெறும் சங்கடங்களே..
விதவிதமான அபிஷேகங்களில்
வழிந்தோடிய அமுதுகளை
விழியில் நீரோடு பார்த்து நிமிர,
ஒட்டிய வயிற்றுடன்
ஒருவேளை உணவுக்காக
ஏங்கிய என் குழந்தை
எரிச்சலோடு என்னைப்பார்க்க,
இப்படியொரு இம்சையான பிறவி
எடுக்காமல் இருந்துருக்கலாம் நான்!
வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்
வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி
அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,
எனைக் காப்பதாய் நினைத்து நீ
கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்
கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..
நாளைய விடியலை நடுக்கத்துடன் எதிர்நோக்கியிருக்க
நான் பார்த்த காட்சிக்கு
நன்றி உரைக்கிறேன் உனக்கு..
இரு விழிகளை இழந்த
இளம் குருத்தொன்று இன்னிசை பாடி யாசிக்க
எதிர் கடையிலிருந்து வந்த
இசுலாமியன் இதமாய்த் தடவி, இட்டான் பிச்சை!
எனக்கு புரிந்தது..
எல்லாரும் என்னை நம்பி வரவில்லை..
எஞ்சியிருக்கும் உன் மனிதநேயத்தை மட்டுமே என்று..
சிறிது நேர அடைக்கலமும்
சிறிது நேர பிச்சையும்
இயலாதவனுக்கும் இசைகிறது என்றால்..
என்றும் சிறைபட்டிருக்க
எனக்கு முழுச் சம்மதமே...

2 comments:

Ganesan said...

கவிதை நல்ல இருக்கு எங்க இருந்து சுட்ட

தெய்வேந்திரன் said...

ரமா, கீழ சில வரிகள add பண்ணி இருக்க போல .

hmmm. நல்லா இருக்கு உனது படைப்பு...