Friday, September 11, 2009

சிவப்பு சிநேகிதன்

சிநேகிதா..! சற்று நில்!
செவிமடுத்துக் கேள்..!
சடக்கென்று சென்றுவிடலாம் நீ
சவக்குழிநோக்கி இன்றோ நாளையோ..!
செல்லும்முன் சற்றென்னை சிந்திச்செல்..
சாகும்முன் சரித்திரம் எழுதிப்போ..!
சிந்துவது சிறிதென்றாலும்
பிரியாத இதழ்களில்
பிரியாத புன்னகையும்
இறுக்கமான இதயங்களில்
இணைப்பையும் இட்டுச்செல்..!

உதிரம் கொட்டி
உயிர் கொடுக்கும்
உன்னதமான தாய்மைக்கு
உணர்வெழுதிப் போ..

இயற்கையின் சீற்றத்தில்
இறுதிவாசலை மிதித்து
யாசகம் கேட்பவனுக்கு
பிச்சையிட்டுப் போ..

எல்லையில் போராடி
எல்லோரையும் காத்து
வீழ்ந்துபோன வீரனுக்கு
வாழ்வெழுதிப் போ..

விபத்தில் சிக்கி
விதியோடு விக்கும்
குடும்பத் தலைவனுக்கு
குருதியிட்டுப் போ..

நோயில் வாடி
நாளும் தேய்ந்து
நொடிந்த உள்ளங்களுக்கு
நம்பிக்கை தெளித்துப்போ..

வாழ்வு தொடங்கும் முன்பே
மரணம் படிக்கும் குழந்தைகளுக்கு
மனிதம் கற்பித்துப் போ..

ஊர் தெரியாத உறவுகளிடத்தும்
பெயர் புரியாத மனங்களிடத்தும்
சிறு துளிகள் சிந்தி
சிநேகம் வளர்த்துப் போ..

உன்னில் சங்கமித்த ஜீவநதி
உன்னின் உள்ளேயே சமாதியாக்கி
உயிர்கள் குலைக்க சம்மதிக்காதே..!
உயிர் மட்டுமே உனக்கு சொந்தம்..
உதிரம் உயிர்களனைத்திற்கும் சொந்தம்..
உன்னுயிர் பிரிந்தாலும்
உதிர்த்து விடப்பட்ட உடல்களுக்குள்
உறவாடிக்கொண்டிருப்பேன் உன் நினைவுகளோடு..!!!

இப்படிக்கு,
உன் சிவப்பு சிநேகிதன்..

No comments: