Monday, September 7, 2009

சகோதரா, சில வரிகள் உனக்காய்..

என்தாய்க்கு மகனாய்ப் பிறக்கவில்லை..
என் கைப்பிடித்து நடைபயின்றதில்லை..

பாடம் சொல்லிக் கொடுத்ததில்லை..
பண்டத்தில் பாதி பகிர்ந்ததில்லை..

தலையைக் கோதி விட்டதுமில்லை..
தலையில் கொட்டி ஓடியதுமில்லை..

வாழ்க்கைப் புத்தக முன்பகுதியின்
வரிகளில் உன் சுவடுகளேயில்லை..
இரண்டும் இறுதிப் பகுதியுமான
பக்கங்களில் பிள்ளையார் சுழியிட்டாய்..

நிறைய அழுது
கொஞ்சமும் சிரிக்காதவள்
நிறைய சிரித்து
கொஞ்சமும் அழுவதில்லை.. ..

எத்தனையோ மைல்கள் தாண்டி
என்னைப் பார்க்க வந்தாய்..
உன்னைப் புரிந்த நான் விலகியேயிருக்க
புரியத் தொண்டங்கியவர்கள் ஒட்டிக்கொண்டார்கள்..

என்னைத் தெரிந்தவர்கள்
உன்னைப் பார்த்துக்கொண்டது
சந்தோசமாகவே இருந்தது..
(நன்றி சொக்கா.. இதுக்காகத்தான் இந்த வரியை சேர்க்க வேண்டியதா போய்டுச்சு.. )

உனது பேச்சும்
மற்றவரின் கண்ணீரும்
கனத்து நின்றாலும்
கடமை கற்றுக் கொடுத்தாய்..

முறைத்து நின்ற முகங்கள் நேராக்கினாய்..
இறுகி இருக்கும் இதயங்கள் சீராக்கினாய்..
சுருங்கி நின்ற இதழ்கள் விரியவைத்தாய்..
கத்தலாய் உடைந்த குரல்கள் கனியவைத்தாய்..

சகோதரனாய் சண்டை போட்டாய்..
குழந்தையாய் சமாதானம் செய்தாய்..
நான்கு நாட்களில் நான்
நாலாயிர பிரபஞ்சம் மிஞ்சினேன்..
மிகையேயில்லை.. முற்றிலும் உண்மை..

பிரிகையில் எத்தனை கண்கள்
பிரியாத உறவைச் சொல்லியது
கண்ணீரைத் தாங்கி??

சிலிர்த்து நின்றேன் உன்
சிநேகம் சம்பவித்த பாதிப்பில்..

என்ன தவம் செய்தனை
இப்படியொரு தம்பி கிடைக்க??
இதுதான் தோன்றியது சட்டென்று..

பிரார்த்திக்கிறேன்.. பிரிந்து போகாத
பிள்ளையாய் உடனிருக்கவேண்டுமென்று..

No comments: