Monday, September 7, 2009

என்னுயிர் வாங்கும் சண்ட கோ(தோ)ழிக்கு..

சேர்ந்து இருந்த காலங்களில் சற்றுவிலகி
சந்தோசமாகவே இருந்தாய் உன் நட்புகளோடு..

ஏனிப்படி என்று ஆரம்பத்தில் தேடிய
எண்ணற்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல்
இவள் இப்படித்தானென்று முடிவாய் ஏற்றுக்கொண்டேன்...

அன்று கண்டுகொள்ளாத நீ இன்று
அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறாய் நியாயப்படுத்தி..

எப்படி மறந்தாய் எல்லாவற்றையும் என்று
எனக்கு சற்றே வேடிக்கையாகத்தான் இருக்கிறது..
எனினும்,
தெரிந்தோ தெரியாமலோ நடந்த தவறுதல்களுக்கு
தெரிந்தே நான் மட்டும் காரணமாகிப்போனேன்..

உன்னின் கண்ணீர்களில் என்னை நோக்கிய
ஊசிப் பார்வைகள் உணராமல் உணர்த்தியது
நீ சிறுகுழந்தையென்றும் நான் ராட்சசியென்றும்..

பரவாயில்லை தோழியே பெயர்கள் மாற்றத்திற்குட்பட்டவைதான்..
பிள்ளைபிடிக்கிறவர்களிடம் நீ பார்த்து நடந்துகொள்..

உள்ளே எழும்பிய கண்ணீர்த்துளிகளை உதிர்த்துவிடாமல்
என் உணர்வுகளோடு உள்ளேயே அடக்குகிறேன்
நடந்தவற்றை நியாயப்படுத்துவதை நான் மாற்றிக்கொள்ளவேண்டுமென்று..

நிகழ்வுகள் மறக்கக்கூடியவைதான்
மனிதர்கள் மறக்ககூடாதவர்கள்தான்..
புரிந்து நடக்கும் காலம் தொலைவிலில்லை
பொறுத்திரு தோழி புன்னகையுடன் வருகிறேன்..

(இக்கவிதை என்னிடம் உரிமையாய் சண்டை போடும் என் தோழிக்கு சமர்ப்பணம்.. )

No comments: