Friday, March 12, 2010

புளியங்குடி கண்ணாவில் பன்னிரண்டு முடித்து ரிசல்ட் வந்த நேரம். என்னோட மதிப்பெண் 1074. வீட்டில் யாருக்கும் திருப்தி இல்லை. புத்தகமும் கையுமாக எப்பவும் இருந்ததால் மாநிலத்தில் முதலாவதாய் வருவேன்(என்ன கொடுமை சார் இது? :P ) என்று நினைக்காவிட்டாலும் ஓரளவு நல்ல மதிப்பெண் வாங்குவேன், அரசு பொறியியல் கல்லூரியில் சேருவேன் என்று நினைத்தார்கள்.கட் ஆப் 261 தான் வந்தது. அம்மா திட்டினாள். அப்பா அமைதியாய் இருந்தார். :)

என் மதிப்பெண்ணிற்கு கவுன்சிலிங் லேட்டா தான் வரும். அதுவரை சும்மா இருக்கவேண்டாம் என்று மதுரை யாதவா கல்லூரியில் மேத்ஸில் சேர்த்து விட்டார்கள்.அப்பொழுது பெரியப்பா ஆண்கள் கல்லூரியில் முதல்வர். நான் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். கூடவே என் தூரத்து பெரியப்பா பெண்ணும்.என்னை சேர்த்துவிட அப்பா கூட வந்தார். வந்து அட்மிசன் போட்டு வெளியில் நின்றிருந்த போது, என் அருமைத்தம்பி பள்ளிக்கு போகாமல் பேருந்தேறி விசாரித்து பின்னாடியே வந்து சேர்ந்தான். அவ்ளோ பாசம். :P

என் அக்கா அங்கு கடைசி வருடம் B.B.A படித்துக்கொண்டிருந்தாள்.மற்றும் இரு சொந்தக்கார அக்காக்களும் அங்கு படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாரும் ஒன்றாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.நான் சற்று தள்ளிநின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அனைவரும், என்னைக் கை காட்டி எதோ பேசியபடி சென்றனர். நான் பொதுவாய் சிரித்து வைத்தேன்.

என்னையும், என் தூரத்து பெரியப்பா பெண்ணையும், இரு தூரத்து சகோதரிகளின் வெவ்வேறு அறைகளில் ஆளுக்கு ஒருத்தருடன் தங்கவைக்கப்பட்டோம். ரேக்கிங் இருக்குமென்பதால் நான் வெளியில் செல்லவில்லை.மாறாய் அன்றிரவு ஒவ்வொருத்தராய் வந்து விசாரித்தார்கள். என் அக்காவின் பெயரை சொல்லி, "இவ அவங்க தங்கையாமே?" என்றார்கள். சிரித்துக்கொண்டேன். 'பரவால்லையே.. அக்காவிற்கு நல்ல மதிப்பு இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டேன். "எங்க ரூமிற்கு அழைத்து செல்லலாமா?" , என்று கேட்டார்கள். என் தூரத்து அக்கா சம்மதிக்கவில்லை. பின், என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தார்கள். "நம்ம அக்கா தான் இங்கு ரேக்கிங்ல பர்ஸ்ட். இப்போ கூட ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு அவங்க மேல. அதான் இணைக்கு எல்லாரும் உனக்காக காத்துட்டு இருக்காங்க பலி தீர்த்துக்க.. அவங்கள பண்ணதெல்லாம் உன்ன பண்ண சொல்வாங்க.. அதான் உன்ன தனியா அனுப்பல" என்றார். பக்குன்னு ஆகிடுச்சு. 'அடப்பாவமே.. மொத்த விடுதியும் இப்படி கொலைவெறியோட இருக்கே? கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல' என்று நினைத்துக்கொண்டேன்.

"நைட் யாராவது கதவை தட்டினா என்ன செய்வ?" - அந்த அக்கா கேட்டார்கள்.
"போய் திறப்பேன்"
"அப்படிலாம் பண்ணிடாத.. திறக்கவே செய்யாத.. கடைசி ரூம்ல ஒரு பொண்ணு அமாவாசை, பௌர்ணமி அன்னைக்கு நடு ராத்திரி வந்து எழுப்புவா. பாத்ரூம் கூட்டிட்டு போவா துணைக்கு வர சொல்லி.. அங்க போய் ஷவர்ல நின்னு தலைக்கு குளிப்பா"
' இது வேறயா..என்ன நடக்குதுனே புரில..' -னு நெனச்சுட்டு, "சரிக்கா " னு சொல்லிட்டு அன்னைக்கு அமாவாசை, பௌர்ணமி எதாவது இருக்கானு காலேண்டர் பார்த்தேன்.

சாப்பிட்டு மேலே வந்ததும், என் அக்கா அறையில் என்னை வரச்சொல்லி சேதி வந்திருந்தது. நானும், என்னுடன் புதிதாய் சேர்ந்த இன்னொரு பெண்ணும் போனோம்.உள்ளே போனதும் அக்கா உக்கார சொன்னா. உக்கார்ந்தோம். அக்காவின் தோழி, அக்காவிடம் கேலியாய் அனுமதி கேட்டார்கள் எங்களை ரேக்கிங் செய்ய.

அக்கா தாரளமாய் பண்ணிக்கோங்க என்று பெருந்தன்மையாய் சொல்லிவிட்டாள். ஏதேதோ செய்ய சொன்னார்கள். என் முகம் இறுகி இருந்தது. விட்டால் அழும் நிலையில்.ஒரு பாட்டாவது பாடு என்றார்கள். சுற்றி கொஞ்சம் கூட்டம். அப்போதும் அமைதியாய் இருந்தேன். "உன் தங்கை உன்ன மாதிரி இல்ல"னு சொல்லிட்டு, "சரி, இந்த பொண்ண எங்க ரூம்ல போட்டுருக்காங்க.. புதுப்பொண்ணு.. தினம் காலேஜ் போகும்போது வந்து கூட்டிட்டு போ" என்றார்கள். மண்டைய ஆட்டிவிட்டு விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டோம்.

பின், தினமும் அந்த புதுப்பொண்ண எங்களுடன் கூட்டி செல்வோம்.ஒரு வாரம் கழித்து தான் தெரியும், அந்த பொண்ணு பழைய பொண்ணுன்னு. கடைசி வருட மாணவி தான் என்று.
அப்பாடா, நம்மள வேற ஏதும் பண்ணலன்னு நிம்மதியாய் இருந்தது.

ந்த விடுதி கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். சாப்பாடு நேரமோ, தேநீர் அருந்தும் நேரமோ, மூன்று மணி அடிப்பார்கள். முதல் மணி முதலாம் வருட மாணவிகளுக்கு. இரண்டாம் மணி இரண்டாம் வருடத்திற்கு, மூன்றாம் மணி மூன்றாம் வருடத்திற்கு.
சாப்பிடுவதற்கு முன் சாமி பாடல் பாட வேண்டும். "கற்பூர நாயகியே"னு எதாவது ஒரு பாடல். தேசிய கீதம் சில இடத்துல தான் பாடணும்னு சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டெல்லாம் கோயில்ல தான் பாடணும்னு நெனச்சிருந்தேன். அப்புறம் எங்கயும் பாடலாம்னு நெனச்சுக்கிட்டேன். பரிமாறும் பொறுப்பு வாரம் ஒரு அறை. காலை, மதியம், இரவு என்று ஒரு அறை மாணவிகள் தான் பரிமாற வேண்டும். ஸெல்ப் செர்விஸ்லாம் கிடையாது. ஆனா நல்ல என்ஜாய்மென்ட் இருக்கும். அப்புறம் சாப்பாட கொஞ்சம் கூட கொட்டக்கூடாது. அதை கண்காணிக்க ஒரு வார்டன் தட்டு கழுவும் இடத்தில் நிற்பார்கள். சாப்பாடு நேரம் முடியும் வரை உக்கர்ந்திருந்தால் திட்டிவிட்டு அனுப்புவார்கள்.

காலேஜ்லயும் பிரேயர் உண்டு. எல்லாம் சாமி பாட்டுதான். ஒரு ஐந்து ஆறு பாட்டு பாடுவார்கள். எனக்கு இந்த பாட்டெல்லாம் தெரியாது.பாடினதே இல்லை. நோட்டில் எழுதி வைத்து பிரேயர்ல பாடவேண்டும்.

ரு விடுமுறை நாளில், சாயங்காலம் மொட்டை மாடியில் எல்லாரும் வடகம் பிழிந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் அதற்கு முன் ஒரு சாமானை நகர்த்தியது இல்லை. ஆனால் இங்கே தோழிகளோடு வேலை செய்ய பிடித்திருந்தது.வித்தியாசமாய் இருந்தது. வடகம் பிழிந்து கொண்டிருக்கையில் என் அக்காவின் பக்கத்து அறை சீனியர் என்னை ரேக்கிங் செய்ய அழுதபடி அக்காவிடம் ஓடிவந்து கம்ப்ளைன்ட் செஞ்சேன்.சரி நான் பாத்துக்கறேன்னு சொல்லி அனுப்பிவச்சா.

நல்லவேளையாக பொறியியல் கவுன்செலிங் வர, முதல்முறையாக சென்னை பயணம்.நான் அமர்ந்திருந்த இருக்கையின் கண்ணாடி ஜன்னலில் "சதக்" என்று எழுதி இருந்தது கொஞ்சம் பயமாய் இருந்தது.பொறியியல் சீட் தேர்வு செய்யும் போதுதான் சதக் என்பது பேர் என்று தெரிந்தது.ஆம், சதக்கில் தான் பொறியியல் சீட் கிடைத்தது. எந்த சந்தோசமோ, துக்கமோ இல்லாத ஒரு உணர்வு.மதுரையை காலி பண்ணி வீட்டில் உக்கார்ந்திருந்தேன் நான்கு வருட வனவாசத்தை எதிர்நோக்கி..

இனி.. சதக்கில் நானும்...

4 comments:

Unknown said...

கற்பூர நாயகியே"னு எதாவது ஒரு பாடல். தேசிய கீதம் சில இடத்துல தான் பாடணும்னு சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டெல்லாம் கோயில்ல தான் பாடணும்னு நெனச்சிருந்தேன். அப்புறம் எங்கயும் பாடலாம்னு நெனச்சுக்கிட்டேன்.//

ம் ம் ம் .. :-)

சுரபி said...

aama, ivlo porumaiya read panna neram irukka?? :P

anyway thanks.. :)

Rajthilak said...

உங்களையும் பக்தி பாடல் பாட வச்சிருக்காங்க ....

அப்புறம் என்ன காலேஜ்-ல உங்க குடும்பமே படிக்குது ??? :)

அருமை தம்பியை கேட்டதா சொல்லுங்க...

NavaS said...

Nice Post :)